சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா தொடங்கிவிட்டது. அந்த இயக்கம் எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்கிற வினாவுக்கு எம்மைப் பொறுத்தவரை பெரியாரின் குடிஅரசு வாரஏடு தொடங் கப்பட்ட நாளான 2.05.1925அய் தான் சொல்வோம். ஓர் ஏடு இயக்கமாக முடியும் என்பதற்குப் பெரியதொரு எடுத்துக்காட்டு குடி அரசு ஏட்டின் பணிகளே ஆகும். அந்த ஏட்டிற்கும் இது நூற்றாண்டு விழாத் தொடக்கம். குடிஅரசு ஏடு 05.11.1949 ஆம் தேதியிட்ட இதழோடு நிறுத்தப்பட்டுவிட்டது. சுமார் கால் நூற்றாண்டு காலம் நடந்த குடிஅரசு ஏடு பல விவாதங்களை நடத்தி இருக்கிறது. எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து இருக் கிறது. அதாவது சுய மரியாதை இயக்கம் அவற்றை நிகழ்த்தி இருக்கிறது.
தந்தை பெரியார் பொறுப்பில் தொடங்கிய குடிஅரசு ஏடு மட்டுமல்லாமல் சிறிது காலம் நீதிக்கட்சியின் திராவிடன் ஏட்டையும் அவர் பொறுப்பேற்று நடத் தினார். இதோடு அவர் புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு, ஜஸ்டிசைட், விடுதலை போன்றவற்றையும் நடத்தினார். இவையெல்லாம் சுயமரியாதை இயக்கத்தின் எரியீட்டிகளே ஆகும். இந்த ஒவ்வொரு ஏட்டின் தோற்றத் திற்குப் பின்னும் சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்று நிகழ்வுகள் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.
சுயமரியாதை இயக்கத் தொடக்கத்தைப்பற்றி பெரியார் அதன் தொடக்க ஆண்டைக் குறிப்பிடாமல், “சமுதாய தொண்டு செய்கிற ஸ்தாபனத்திற்குச் சுய மரியாதை இயக்கம் என்று ஏன் பெயர் வைக்க வேண்டி வந்தது என்றால் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் மனமாற்றத் தன் மையை எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காக முதலில்,‘Self Respect Propaganda Institution’ என்று ஆங்கிலப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது” என் கிறார். அவர் ஆற்றிய 15.03.1970 திருச்சி சொற்பொழிவில் இக்கருத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.
சிலர் பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறிய நாளையும் சென்னை மாகாண 10ஆவது பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டின் தீர்மானம் நிறைவேறிய நாளையும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளாகச் சொல்வர். நாம் (கட்டுரையாளர்) இதனையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் தொடங்கிய குடிஅரசு ஏட்டின் முதல் தலையங்கத்திலேயே ‘சுயமரியாதை’ வற்புறுத்தப்படுவதால் நாம் அதனையே சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளாகக் கொள் கின்றோம். அவ்வளவே.
சுயமரியாதை இயக்கம் சமய சீர்த்திருத்த இயக்கம் போல் தோன்றி, தன்னை அதன் அடுத்த கட்டத்தில் நாத்திக இயக்கமாய் அது பிரகடனப்படுத்திக் கொண் டது. இந்தப் பிரகடனத்தை வெளியிட தந்தை பெரியார் 47 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார். இதற்காக யாரும் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. பெரியார் சிந்தனை வளர்ச்சியின் போக்கும் அதன் ஈவும் அது. இதை விளக்கினால், ‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ எனும் பெரியார் முழக்கத்தின் உட்பொருளை அறிய லாம். சுயமரியாதைக் கொள்கையைப் பயின்றால் அதனை உணரலாம்.
சுயமரியாதை இயக்கம் இன்றும் திராவிடர் கழகமாக மாபெரும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இதற்கு இரண்டு கட்டங்கள் உண்டு. முதற்கட்டம் 1925-1944; இரண்டாவது கட்டம் 1944க்குப் பிறகு-அதாவது இன்று வரை, ‘சுயமரியாதை இயக்கம்’ திராவிடர் கழகமாகி விட்டது. ஆனால் ‘சுயமரியாதை’ எனும் சொல்லின் மீது ‘காதலாகி கசிந்துருகிய’வர் பெரியார். ஆகையினால் அவர் ‘The Periyar Self – Respect Propaganda Institution – Tiruchirapalli’ எனும் பெயரில் 1952 இல் அந்நிறுவனத்தை பதிவு செய்து இருக்கிறார். எனவே சுயமரியாதை இயக்கம் சட்டப்படியான பதிவி லும் இருக்கிறது.
சுயமரியாதை இயக்கம் பதிவு குறித்து ஒரு முன்னு ரையே எழுதும் அளவுக்குச் செய்திகள் உண்டு. இந் நிறுவனத்தின் பெயரால்தான் ஏராளமான கொள்கை விளக்க ஏடுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந் நிறுவனத்தின் சார்பாகவும் தற்போது கூட்டங்கள், கருத் தரங்குகள், ஆய்வுரைகள், மாநாடுகள் என நடத்தினால் அந்தப்பெயர் இன்னும் விளங்கி வருவதை மக்க ளுக்குஉணர்த்தலாம் என்பது எமது எண்ணம். ‘சுய மரியாதை இயக்கம்’ என்கிற பெயரால், எமக்குத் தெரிய சில சிந்தனையாளர்களால் இருமுறை இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டு செயல்படாமல் ஆகிவிட்டது என்பதையும் இச்சமயத்தில் நினைவுகூருவது தவறா காது.
இந்திய பூபாகத்தில் எத்தனையோ சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றன. அவை செயல்பட்டும் இருக்கின்றன. இன்று அவை இல்லை. அவற்றுள் சில ஆவணங்களாகவும் வெறுங் கட்டடங்களாகவும், அலுவலகமாகவும், அமைப்புகள் இருந்ததற்கான அடையாளங்களாகவும் இருந்து வருகின்றன. விசாரித்து அறிய வேண்டியவைகளாகவும் உள்ளன. ஆனால் சுயமரியாதை இயக்கம் என்கிற நிறுவனம்-அமைப்பு-ஸ்தாபனம் அவை போன்றதன்று. கொள்கையில், இயங்குவதிலும் அமைப்பில் பெரிதும் மற்ற சீர்த்திருத்த நிறுவனங்களிலிருந்து அடிப்படை அம்சங்களிலேயே சுயமரியாதை இயக்கம் வேறுபாடு உடையதாகும். இதைப் போன்றதொரு அமைப்பை, மற்றொன்றைக் காட்ட முடியாது என்றே நாம் சொல்ல வருகின்றோம்.
சுயமரியாதை இயக்கத்தின் முதற் கட்டத்தில் (1925-1944) அதன் பணிகள் தமிழ்நாட்டை மட்டுமன்று – இந்தியாவையே புரட்டிப்போட்டது. 1935 வரை அதன் வேகம்-பணி அனைத்துத் துறையிலும் ஊடுருவியது. பெரியாரின் குடிஅரசு காந்தியாரையும் காங்கிரசையும் 1927 வரை ஆதரித்தது. பிறகு ஆதரவை முழுமையாக நிறுத்திக் கொண்டது. காந்தியாரையும் காங்கிரசையும் சுயமரியாதை இயக்கம் கடுமையாக விமர்சனம் செய்தது.
நீதிக்கட்சியை அதன் ஒற்றை வரி அரசியல் முழக் கத்திற்காகவும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும் சுயமரியாதை இயக்கம் ஆதரித்தது. அந்தக் கட்சி 1926லேயே காணாமல் போயிருக்கும். அது இருக்க வேண்டியதன் அவசியத்தை சுயமரியாதை இயக்கம் தனது வழிகாட்டுதல்கள் மூலம் நீதிக்கட்சியைக் காத்து நின்றது. அதன் தலைவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் தாலுக்கா, மாவட்ட, மாகாண மாநாடுகளில் பங்கேற்ற னர். உரையாற்றினர். நீதிக்கட்சியும் சுய மரியாதை இயக்கமும் ஒரே அமைப்போ என்று நினைக்கும்படி இருந்தது. ஆனால் அவை இரண்டும் ஒரே அமைப்பு கள்- இல்லை, வெவ்வேறானவை.
1892க்கும் 1925க்கும் இடைப்பட்டட காலத்தில் சென்னை மாகாணத்தில் நிரம்ப ஜாதி சங்கங்கள் தோன்றின. இவற்றின் வளர்ச்சி நீடித்தது. சுயமரியாதை இயக்கக் காலத்தில் இந்த அமைப்புகள், மேலும் வளர்ந் தன. இவ்வமைப்பினர் சுயமரியாதை இயக்கத்தினரை குறிப்பாகப் பெரியாரைப் பேச அழைத்தனர். அந்தந்த வகுப்புக்குரிய தேவைகள் அதிகமாயின. பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் பேசுகிறபோது அவர்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை எடுத்துக் கூறி வகுப்பை முன்னேற்றக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். பார்ப்பனரல்லாத அனைத்து வகுப்புக் கூட்டங்கள், மாநாடுகளில் பங்கு வகித்த பெரியார் குடிஅரசிலும் இவற்றைப் பற்றி எழுதினார்.
செய்திகளையும் கருத்துகளையும் வெளியிட்டார். இந்த அமைப்புகள் எல்லாம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தைக் குடிஅரசின் தலையங்கத்தின் மூலம் வலியுறுத்தினார்.
பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், தாழ்த்தப்பட் டோர் எனும் பகுப்பைத் திராவிட இயக்கம் உருவாக்க வில்லை. முதலில் இது எங்குத் தொடங்குகிறது என்றால், 1870-1871 ஆண்டு கல்வித் துறை அறிக்கையில் இந்த பகுப்புகள் இடம் பெறத் தொடங்குகின்றன. பார்ப்பனர் கள் ஏனைய இந்துக்கள்(Brahmins.other Hindus). என்றும் 1873-1874இல் பார்ப்பனர்கள் இந்துக்கள் அற்ற (Brahmins, Hindu not Brahmins) என்றும் இடம்பெற்றுள்ளன. இத்தொடர்களின் தாக்கத்தினால் ‘The Madura Country’ எனும் நூலை எழுதிய ஜே.எச்.நெல்சன் அந்த, நூலில் ‘Non-Brahmin’ என்று பார்ப்பனர் அல்லாத மக்களை எழுதினார்.
இது பயன்பாட்டிற்கு வந்தது. இது பிரிட்டிஷ் அரசின் நிர்வாக வசதிக்கும் பார்ப்பனர் அல்லாத வகுப்பாரை ஒன்று திரட்டவும் அரசுக்கும் அமைப்புகளுக்கும் உதவியாயிற்று. மேலும் பார்ப்பனர் வளர்ச்சி மற்ற வகுப்பாரிலிருந்து தனித்தும் ஆளுமை மிக்கதாயும் பிறப்பின் வழி சமூகத்தின் அத்தனை நலன்களை அவர்கள் மட்டுமே அனுபவிக்க உரியவர்கள் என்ற நிலையை மிக அப்பட்டமாக வெளிப்படுத்தின. அப்போது இந்த ‘Non- Brahmin’ என்கிற பார்ப்பனர் அல்லாதார் எனும் சொல் பார்ப்பனர் தவிர்த்த இதர வகுப்பாரை ஒருங்கிணைக்கப் பயன்பட்டது. சுயமரி யாதை இயக்கம் இச்சொல்லைப் பயன்படுத்தி மக்களை முன்னேற்றக் கூடிய வகையில் மாபெரும் தூண்டு கோலாய் இருந்தது.
வட இந்தியாவில் இந்து-முஸ்லிம் வேறுபாடுதான் அரசியலாக இருந்தது. இன்றும் அதே நிலை அங்கே தொடருகிறது. தென்னிந்தியாவில் பார்ப்பனர்-பார்ப் பனர் அல்லாதார் என்பது அரசியலாக இருந்தது. அதற்குக் காரணம் மக்களின் வாழ்நிலைதான்! காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் அதற்கு எதிராக நீதிக்கட்சியை கொள்கை வழி ஆதரித்தார். சுயமரி யாதை இயக்கத்தை ‘மிக வலுவாக’ எதிர் நிறுத்தினார். அரசியலில் அறிவுரை வழங்குவதிலும் போராட்ட வழியிலும் முன்னின்ற சுயமரியாதை இயக்கத்தை மக்களும் அரசியல் வாணர்களும் பெரிதும் கவனிக்கத் தொடங்கினர்.
சுயமரியாதை இயக்கம் சமூகத்தின் எல்லாத் துறை யினரையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்துமதம், அதன் வர்ணாசிரமம், அதற்கும் மேலான பார்ப்பனரின் ஆதிக்கம் குறித்து காந்தியாரிடம் கலந்துரையாடல் நடத்தினார் பெரியார். அதனால் அவர் நிறைவடையவில்லை. ஆகவே அவர் தம்மை ‘அழிவு வேலைக்காரன்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். சுயமரியாதை இயக்கத்தைக் கருவியாக்கிக் கொண்டார். களத்தில் இறங்கினார். பார்ப்பனரின் சமூக மேலாண்மையை அப்புறப்படுத்த சுயமரியாதை இயக்கம் பணியாற்றியது. ஆகவே அது பார்ப்பனர் அல்லாதாரின் திருமணங்களில் புரோகிதரை நீக்கிய முறையை அறிமுகப்படுத்தியது. குழந்தைக்குப் பெயர் சூட்டுதல் முதல் மரணம் வரை சுயமரியாதை இயக்கம் ஒரு வழிகட்டுதலை வழங்கியது.
கடவுள், மதம், வேதங்கள், ஸ்மிருதிகள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை மிகக் கடுமையாக விமர் சனம் செய்தது சுயமரியாதை இயக்கம். அவை பார்ப் பனர் அல்லாதாரை அடிமையாக வைத்து இருக்கிறது. சுயசிந்தனை இல்லாமல் ஆக்கியிருக்கிறது என்பதை எடுத்துரைத்தது.
மேலும் பார்ப்பனர் அல்லாதார் ஜாதிப்பெயரைப் போட்டுக் கொள்ளவோ பயன்படுத்தவோ கூடாது. வீட்டு விழாக்களுக்கோ திருமணங்களுக்கோ பார்ப் பனப் புரோகிதர்களை அழைக்கக் கூடாது. தாழ்த்தப் பட்டோருக்குச் சமநிலை வழங்குங்கள், அவர்களைக் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதியுங்கள், எல்லா மக்களையும் சாலைகள், கிணறுகள், குளங்கள் ஆகிய வற்றைப் பயன்படுத்த அனுமதியுங்கள் எனச் சுயமரியாதை இயக்கம் குரலெழுப்பியது. அதற்காகப் போராட்டங்களை நடத்தியது.
இதுவன்றி, பஞ்சாங்கம், சோதிடம், இராகுகாலம், எமகண்டம், சகுனம், சடங்கு, பல்லி பலன், விளக்கு வைத்துப் பார்த்தல், வெற்றிலையில் மையிட்டு கணித் தல், பில்லி, சூன்னியம், ஆவேசங் கொண்டு ஆடிக் குறிச் சொல்வது, குச்சி கொண்டு கரம் பார்த்துக் குறி சொல்வது, சடங்குக்காய் மொட்டைப் போடுதல், மீசை எடுத்தல், கணவரை இழந்த பெண்களை சம்பிரதாயம் எனும் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாக்குதல், மணிக்கட்டில் விதவிதமான கயிறு கட்டுதல், ஜாதியை வெளிப்படுத்த கயிறு கட்டிக் கொள்ளுதல், மந்திரம் சொல்வது-அதன் மூலம் ஏமாற்றுவது என இப்படிச் சமூகத்தில் என்னென்ன அவலங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் பட்டியலிட்டது சுயமரியாதை இயக்கம்.
இதன் மூலம் ஒரு பய உணர்வே வாழ்க் கையில் கிளப்பிவிடப்படுகிறது-ஏமாற்றுக்காரர்கள் பிழைப்ப தற் கான வழிகளே இவை. இவற்றைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனச் சுயமரி யாதை இயக்கம் அவர்களை நெறிப்படுத்தியது.
1928-ஆம் ஆண்டிலிருந்து சுயமரியாதைத் திரு மணங்கள் நடைபெறுகின்றன. இதற்கு நல்ல வர வேற்புக் கிடைத்தது. திருமணங்கள் மற்றும் நீத்தார் வழிபாடுகள் நிகழ்ச்சிகளில் புரோகிதர்கள் நீக்கப் பட்டனர். திருச்சியில் தமிழ்நாடு புரோகிதர் மறுப்புக் கழகம் உருவாக்கப்பட்டது. புதியதோர் சுயமரியாதை உலகம் காண பெரியார் 1927-1928இல் மநு ஸ்மிருதியைக் கொளுத்தினார்.
1942-1944லிலும் இது தொடர்ந்தது. சுயமரியாதைத் திருமணங்கள் குறித்து ‘மெட்ராஸ் மெயில்,’
“சுயமரியாதை இயக்கம் பார்ப்பனர் அல்லாதாரை விழிப்படையைச் செய்து இருக்கிறது. சுயமரியாதை எழுச்சிக் கொள்ளச் செய்துவிட்டது. பார்ப்பனச் சகோதரர்களைப் போலவே அவர்களையும் சமமாக எண்ண வைத்துள்ளது என்பதை எங்கும் காண முடிகிறது. திருமணங்களையும் சடங்குகளையும் பார்ப்பனர்களின் உதவியின்றி பார்ப்பனர் அல்லாதாரைக் கொண்டே செய்து கொள்ளும் நிலையைச் சுயமரியாதை இயக்கம் உருவாக்கிவிட்டது.”
என்று குறிப்பிட்டு இருக்கிறது. இவை 28.12.1926, 02.07.1928, 13.05.1940 எனத் தேதியிட்ட மெயில் நாளேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எந்தத் தலைவர்கள் வீட்டுத் திருமண நிகழ்வைச் சுட்டிக்காட்டி இதை மெட்ராஸ் மெயில் குறிப்பிடுகிறது என்பதுதான் முக்கியம்.
– நன்றி: முரசொலி, 20.5.2024