இந்தியாவை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பிரச்சினைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, தொற்று இல்லாத நோய்களால் ஏற்படுகிறது.
இதில் முதலிடம் வகிப்பது இதய நோய்கள். இவற்றுக்கு முக்கிய காரணம் கட்டுப்பாடு இல்லாத உயர் ரத்த அழுத்தம் தான் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து பல்வேறு விழிப்புணர்வை ஒன்றிய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு மற்றும் அதன் சிகிச்சை பெறுவது குறித்து இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு செயலாக்கம் (அய்எச்சிஅய்) Indian Hypertension Control Initiative) என்ற பெயரில் அய்சிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு 5 மாநிலங்களில் மட்டும் ஆய்வு செய்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஆந்திரா, தமிழ்நாடு, தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் 104 மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 2 சதவீதம் மக்கள் மட்டுமே முறையாக சிகிச்சை பெற்று உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இருப்பதாகவும் தெரிவந்துள்ளது.
ஒன்றிய அரசு தொற்று இல்லாத நோய்களால் ஏற்படும் இறப்பை 2025ஆம் ஆண்டுக்குள் 25% குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
அதில் முக்கியமாக உயர் ரத்த அழுத்த நோய் இறப்பை குறைப்பது மிகவும் முக்கியமானது என அய்சிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும், பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும், பேக்கரி உணவை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும், கார்போனேடேட் (வாயு) உள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், வாரத்திற்கு 150 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அய்சிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.