சேலம், செப். 5- கருநாடகா மாநி லத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து போதிய அளவில் நீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படவில்லை. தென்மேற்கு பருவ மழையும் தீவிரம் அடையாததால் கடந்த ஆகஸ்டு மாதம் முழுவதும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தின் அளவு பெரிய அளவில் இல்லை.
இதற்கிடையே காவிரியில் தமிழ் நாட்டிற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கருநாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 29ஆம் தேதி கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், 30ஆம் தேதி 6,398 கன அடி தண்ணீரும், 31ஆம் தேதி 9,279 கன அடி தண்ணீரும், 1ஆம் தேதி 9,180 கன அடி தண்ணீரும் நீரும் திறந்து விடப்பட்டது.
2.9.2023 அன்று கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயி ரத்து 128 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 2 ஆயி ரம் கன அடி நீரும் என மொத்தம் 9,128 கன அடி தண்ணீர் வெளியேற் றப்பட்டது. இந்த நிலையில் 3.9.2023 அன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 6, 436 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 1,000 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.
இன்று மேலும் நீர் திறப்பு குறைக் கப்பட்டு வினாடிக்கு 7,181 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட் டுள்ளது. அதாவது கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,181 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 4,199 கன அடியாகவும், நீர்மட்டம் 99.32 அடியா கவும் உள்ளது. அதேபோல் கபினி அணையில் இருந்து 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 794 கன அடியாக வும், நீர்மட்டம் 73.69 அடியாகவும் உள்ளது.
கருநாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை தமிழ் நாடு- கருநாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் ஒன்றிய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழி யாக மேட்டூர் அணைக்கு வருகிறது. 2.9.2023 அன்று முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
இதனிடையே தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று மேட்டூரில் 34.40 மீல்லிமிட்டர் மழை பெய்தது. இதனால் 2.9.2023 அன்று காலையில் வினாடிக்கு 5,018 கன அடியாக இருந்த நீர்வரத்து 3.9.2023 அன்று 6,430 கன அடியாக அதிக ரித்தது.
மேலும் 4.9.2023 அன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 8,060 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மணி நிலவரப்படி நீர்மட்டம் 48.23 அடியாக உள்ளது.