சீதாமர்ஹி, மே 18- பீகாரில் மதுபானி மற்றும் சீதா மர்ஹி மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ., வேட் பாளர்களை ஆதரித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 16.5.2024 அன்று பிரச்சாரம் செய்தார்.
இதில் நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள சீதாமர்ஹி மாவட்டம், சீதை பிறந்த இடமாக கருதப் படுகிறது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ‘இந்தியா’ கூட்டணியினர் தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்வரா? என்ன செய்தாலும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது.
ஒருவேளை ஆட்சி அமைத்தால், மு.க. ஸ்டாலின், மம்தா, லாலு என பிரதமர் நாற்காலியை தங்களுக்குள் மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
நாட்டிற்கு வலிமையான பிரதமர் தேவை. பிரதமர் மோடியிடம் மூன்றாவது முறையாக ஆட்சியை தர மக்கள் முடிவு செய்துள்ளனர்.
மூன்றாவது முறை ஆட்சி அமைத்தால், சீதா தேவியின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள புனவுரா தாம் மந்திர் கோவில் பன்னாட்டு வழிபாட்டுதலமாக மேம்படுத்தப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பசுவதைக்கு எதிரானது. பசுவதையை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம். பசு வதையில் ஈடுபடுபவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மம்தா பற்றி பிஜேபி வேட்பாளரின் தரக்குறைவான பேச்சு
தேர்தல் ஆணையம் தாக்கீது
கொல்கத்தா, மே 18 மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மேனாள் உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோ பாத்யாய்க்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பி யுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் அபிஜித் கங்கோபாத்யாய். கொல்கத்தா உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதியான இவர், பதவியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார்.
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா குறித்து தரக் குறைவாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் அபிஜித் கங்கோபாத்யாய்.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அந்தப் புகாரில், ‘அபிஜித் கங்கோபாத்யாய், “மம்தா, நீங்கள் எவ்வளவுக்கு விற்கப்படுகிறீர்கள்? உங்கள் ரேட் ரூ.10 லட்சம்? அழகுகலை நிபுணர் மூலம் நீங்கள் மேக்கப் செய்து கொண்டீர்களா? மம்தா ஒரு பெண்ணா? நான் சில நேரங்களில் ஆச்சரியப்படுகிறேன்” என கூறி யுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில் தேர்தல் ஆணையம், கங்கோபாத்யாய் கருத்தானது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கண்டறிந்து அவருக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. அந்த தாக்கீதில், ‘மம்தா தொடர்பான கருத்து முறையற்ற, நியாயமற்ற, கண்ணியத்துக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. வார்த்தை யின் ஒவ்வொரு அர்த்தத்திலும் கெட்ட நோக்கம் உள்ளது. இது தொடர்பாக வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது.