பிணையை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
புதுடில்லி,மே 17- டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நாடாளு மன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடு வதற்காக அவருக்கு கடந்த 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால பிணை அளித்தது. ஜூன் 1ஆம் தேதிவரை இடைக்கால பிணை அளிக்கப்பட்டுள்ளது. 2ஆம் தேதி அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் கைது செய் யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இடைக்கால பிணை பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சிக்கு மக்கள் ஓட்டளித்தால், தான் ஜூன் 2ஆம் தேதிக்கு சிறைக்கு செல்ல வேண்டி இருக்காது என்று தேர்தல் பிரச் சாரங்களில் பேசி வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு நீதிபதிகள், ”அது அவரது யூகம். நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அவர் எப் போது சரணடைய வேண்டும் என்பது பற்றிய எங்கள் உத்தரவு தெளிவானது. அது உச்ச நீதிமன்ற உத்தரவு. இந்த உத்தரவின் மூலம் சட்டத்தின் ஆட்சி நிர்வகிக்கப் படும்” என்று கூறினர்.
துஷார் மேத்தா, ”கெஜ்ரிவால் பிணை நிபந்தனையை மீறி விட் டார். அவர் உணர்த்த விரும்புவது என்ன? இது, உச்சநீதிமன்றத்தின் முகத்தில் விழுந்த அடி போன்றது. அவரது இடைக்கால பிணையை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். ஆனால் பிணையை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்து விட்டனர்.நீதிபதி சஞ்சீவ் கன்னா, ”கெஜ்ரிவால் 2ஆம் தேதி சரண டைய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு தெளிவானது. வழக்கு பற்றி பேசக்கூடாது என்று நாங் கள் எதுவும் சொல்லவில்லை” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, மக்கள் ஓட்டுப்போடாவிட் டால் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று கெஜ்ரிவால் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். அத்துடன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் பெயரை குறிப்பிடாமல் ஒரு குற்றச்சாட்டு தெரிவித்தார்.
”கெஜ்ரிவாலுக்கு சிறப்பு சலுகை காட்டப்பட்டதாக ஒரு மூத்த ஒன்றிய அமைச்சர் சொல்கிறார்” என்று அவர் கூறினார். அதற்கு நீதிபதிகள், ”அதுபற்றி நாங்கள் விசாரிக்க முடியாது” என்று தெரிவித்தனர்.மேலும், நீதிபதிகள் கூறியதாவது:- நாங்கள் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை. நாங் கள் நியாயம் என்று கருதியதையே தீர்ப்பில் சொல்லி இருக்கிறோம். அதே சமயத்தில், தீர்ப்பு பற்றிய விமர்சனரீதியான ஆய்வுகள் வரவேற்கப்படுகின்றன.
– இவ்வாறு அவர்கள் கூறினர்.