குறைந்த ஆற்றலுடைய லேசர் அல்லது எல்.இ.டி. விளக்குகளிலிருந்து வரும் ஒளியை மருத்துவத்திற்குப் பயன்படுத்தும் முறைக்குப் பெயர் போட்டோ பையோ மாடுலேஷன் (Photobiomodulation — PBM) என்பதாகும். இதைக் கொண்டு சாதாரண காயம் முதல் இதய நோய்கள் வரை சிகிச்சை செய்ய முடியும்.
சமீபத்தில் சில மனநல பிரச்சினை களுக்கும் கூட இந்த முறையைப் பயன்படுத்தி சிகிச்சை செய்துள்ளனர். நாள்பட்ட மன அழுத்த (Chronic stress) நோயைக் குணமாக்க தலையிலும், வயிற்றிலும் ஒளிச்சிகிச்சையைப் பயன்படுத்த முடியும் என ஸ்பெயின் நாட்டின் பார்செலோனா பல்கலையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
மன அழுத்தம், நினைவுக் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் குடலில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் தொடர்புண்டு என்று ஏற்கெனவே பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய ஆய்வு இந்த முடிவுக்கு மேலும் வலு சேர்க்கிறது.ஆய்வாளர்கள் போட்டோ பையோ மாடுலேஷன் சிகிச்சையை மன அழுத்த முள்ள எலிகள் மீது 28 நாட்கள் தொடர்ந்து மேற்கொண்டனர். மன அழுத்தத்தால் எலியின் மூளையில் வீக்கமும், குடல் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையில் குறைபாடும் ஏற்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் ஆறு நிமிடங்கள், அகச்சிவப்புக் கதிர்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் மேற்குறித்த இரண்டு பாதிப்புகளும் சரியாயின. இந்தச் சிகிச்சை மேம்படுத்தப்பட்டு விரைவில் நம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.