பெங்களூரு, மே 16 சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆதித்யா எல்-1 விண்கலத்தை கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மய்யமாக கொண்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப் பட்டது.அங்கிருந்தபடியே சூரியனை ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை நமக்கு அனுப்பி வருகிறது. அதன்படி சமீபத்தில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை ஆதித்யா விண்கலம் பதிவு செய்து தரவுகளை அனுப்பி வைத்துள்ளது. இவற்றை இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
எக்ஸ் ரக கதிர்கள் தாக்கின
அதன் விவரம் பின்வருமாறு: கடந்த மே 11-ஆம் தேதி சூரியனின் ‘ஏஆர்-13664’ பகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் உருவான பலத்த மின்காந்த புயலின் தாக்கம் பூமியில் உணரப்பட்டது. இது 2003-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சூரியனில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த புயலாகும்.அதையொட்டி பல்வேறு எக்ஸ் ரக கதிர்களும் கடந்த சில நாட்களாக பூமியை தாக்கின. இத் தகைய நிகழ்வுகள் வரும் நாள்களில் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாகவே இருந் தது. மேலும், அதிக வெப்பமுடைய பிளாஸ்மா சூரிய காற்று அந்த பகுதியில் வீசி வருகிறது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.