மகாராட்டிரத்தை சேர்ந்த பகுத்தறிவுவாதியும் மூடநம்பிக்கை எதிர்ப்புச் செயல்பாட்டாளருமான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதேநேரம், பத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த வழக்கில் கொலைக்கான நோக்கமும் கொலைக்குத் திட்டமிட்டவர்கள் யார் என்பதும் சட்டப்படி நிரூபிக்கப்படாதது வருத்தத்துக்குரியது.
புனேயில் 2013 ஆகஸ்ட் 20 அன்று காலை நடைப்பயிற்சியில் இருந்த நரேந்திர தபோல்கரை, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கட்டுக் கொன்றனர். 2014இல் பம்பாய் உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை சிபிஅய்க்கு மாற்றியது. தபோல்கரைத் தொடர்ந்து 2015இல் மகாராட்டிரத்தின் கோலாபூரில் இடதுசாரிச் சிந்த னையாளர் கோவிந்த பன்சாரே, கருநாடகத்தின் தார்வாரில் கல்வியாளர் எம்.எம்.கல்புர்கி, 2017இல் பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இவர்கள் அனைவரும் மூடநம்பிக்கை, மதவாதம் ஆகிய வற்றுக்கு எதிராகச் செயல்பட்டுவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நால்வருடைய கொலையிலும் ஸநாதன் சன்ஸ்தா என்னும் தீவிர வலதுசாரி மதவாத அமைப்புக்குத் தொடர்பிருப் பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தபோல்கர் கொலை வழக்கில் சனாதன் சன்ஸ் தாவுடன் தொடர்புடைய மருத்துவர் விரேந்திர தாவடே என்பவரை 2016இல் சிபிஅய் கைது செய்தது. தபோல்கரையும் மூடநம்பிக்கை எதிர்ப்புக்காக அவர் நடத்திவந்த “அந்தசிரத்த நிர்மூலன் சமிதி” என்னும் அமைப்பையும் கண்டித்துக் கடுமையான விதத்தில் தாவடே பேசியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த புனே அமர்வு நீதிமன்றம், கொலையாளிகளான சச்சின் அந்துரே, சரத் கலாஸ்கர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இவர்கள் ஸநாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் இந்த வழக்கில் ஸநாதன் சன்ஸ்தா அமைப்புக்கோ மருத்துவர் தாவடேவுக்கோ தொடர்பு இருக்கிறதா என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க சிபிஅய் தவறிவிட்டது. எனவே, தாவடே உள்பட மூவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பை வழங்கிய கூடுதல் அமர்வு நீதிபதி பி.பி.யாதவ், ஒரு கொலைக்குப் பின் சதித் திட்டம் இருப்பதாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், கொலைக்கான நோக்கம் நேரடியான, நம்பத்தகுந்த சாட்சியங்களின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், குற்றம் சாட்டப் பட்டவர்களின் வழக்குரைஞர்கள் சாட்சியங் களைக் குறுக்கு விசாரணை செய்தபோது, தபோல்கா ‘இந்து மதத்துக்கு எதிரானவர்’ என்று நிறுவி, அவருடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றதை நீதிபதி கண்டித்துள்ளார்.
கவுரி லங்கேஷைக் கொல்வதற்குப் பயன் படுத்தப்பட்ட துப்பாக்கியைப் பரிசோதித்ததில், அதே துப்பாக்கியின் மூலம்தான் கல்புர்கியும் கொல்லப்பட்டார் என்பது தெரியவந்தது. இந்த நால்வரின் கொலைகளுக்கும் மேலும் சில பொதுவான அம்சங்கள் இருப்பதும் காவல் துறை விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பன்சாரே, கல்புர்கி, லங்கேஷ் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.
மகாராட்டிர, கருநாடக அரசுகள் இந்த வழக்குகளின் விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். இந்தக் கொலைகளுக்கும் மதவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது நிரூபிக்கப்பட வேண்டும். கொலை களுக்குத் திட்டமிட்டவர்கள், மூளையாகச் செயல்பட்டவர்கள் அனைவரும் உரிய சாட்சி யங்களுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்வதன் மூலமாகவே சுதந்திரச் சிந்தனையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலைக் களைய முடியும்.
நன்றி: ‘இந்து தமிழ்திசை’
தலையங்கம், (16.5.2024)