புதுடில்லி, மே 13- ஓய்வுபெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், அஜித் பி. ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுத்து அவர்களுக்கு கடிதம் எழுதினர்.
இந்த அழைப்பு ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என 10.5.2024 அன்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் விவாதம் நடத்த மோடிக்கு துணிச்சல் இல்லை என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“பிரதமருடன் விவாதிப்பதற்கான அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டு ஒரு நாள் ஆகிறது. ஆனால் 56 அங்குல மார்பு உடையவருக்கு (மோடி) இன்னும் அதற்கான துணிச்சல் வரவில்லை. பிரதமர் பத்திரிகைகள் மற்றும் செய்தி சேனல்களுக்கு அளிக்கும் பேட்டிகள் அனைத்துக் கேலிக்கூத்ததாக உள்ளன. அவருடைய பொய்களையும், நாடகங்களையும் தவிர அவற்றில் இயற்கையான அல்லது எதார்த்தமான எதுவும் இல்லை.
குறுக்குக் கேள்வியும் இல்லை, அவரை உரையாடலில் ஈடுபடுத்தும் முயற்சியும் இல்லை. இது அனைத்தும் முன் கூட்டியே எழுதப்பட்டவை. இந்தியாவில், நிகழ்காலமோ, கடந்த காலமோ, ஊடகங்களை இப்படி கையாண்ட வேறு எந்த அரசியல் தலைவர்களும் இல்லை” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியுடன் விவாதிக்க மோடிக்கு துணிச்சல் இல்லை: காங்கிரஸ் கருத்து
Leave a Comment