பிரதீக் காந்தி என்பவர் மும்பை நாடக மேடைகளில் பிரபலமான கலை ஞர். இவருடைய வாழ்விணையர் பத்ர லேகாவும் அங்கே புகழ்பெற்ற நாடக நடிகை. பரோடாவில் உள்ள கிரண் பல்லவி பல்கலைக்கழகம் (பரோடா இன்று வடோதரா என்றே அழைக்கப்படுகிறது.) தயாரித்து வரும் “ஃபூலே” எனும் திரைப்படத்தில் பிரதீக் மகாத்மா ஜோதிராவ் ஃபூலேவாகவும், பத்ரலேகா சாவித்திரிபாய் ஃபூலேவாகவும் நடித்து வருகிறார்கள். வெகுவிரையில் திரைக்கு வரவிருக்கும் படம் இது.
அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சும் கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடியவர் ஃபூலே என்பது இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் நம் நாட்டில் நிலவிய வேதக் கல்வி, திண்ணைக் கல்வி போன்ற முறைகள் ஒரு குறிப்பிட்ட ஆதிக்கச் சமூகத்தினருக்கு மட்டுமே கல்வி வழங்கி வந்தது. பெண்களுக்கு அதுவும் கிடையாது என்ற அவல நிலை. இந்த நிலை மாற போராடி வென்றவர்கள் ஃபூலேயும் சாவித்திரி பாயும். 1873இல் இவர்கள் துவக்கிய சத்தியசோதக் அமைப்பால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் மகளிர் பலரும் அடைந்த பயன்கள் ஏராளம்.
ஏழாந்தரத் திரைப்படங்கள் நம் மீது திணிக்கப்பட்டு வரும் இன்றைய காலக் கட்டத்தில் இந்தப் படம் பாராட்டுக்குரிய முயற்சி. காலம் எனும் ராட்சத ரப்பரால் கூட அழிக்க முடியாதவை அல்லவா ஃபூலே போன்ற போராளிகளின் நினைவுகள்?