(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
கவிஞர் கலி.பூங்குன்றன்
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் நடத்திட வேண்டும் என தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்த அறிக்கை வருமாறு:
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் நந்திவர்ம பல்லவ மன்னரால் கி.பி. 726-775ஆம் ஆண்டு தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் தினசரி கால பூஜைகள் மற்றும் முக்கிய ஆண்டு விழாக்களும் நடத்தப்படுகின்றன. இதில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
மேலும் இக்கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தி சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மோற்சவம் நடத்த முயற்சித்த போது கோவில் நிர்வாகிகளுக்கும், பொது தீட்சிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் தடுக்கப்பட்டு இதுவரை பிரம்மோற்சவம் நடைபெறவில்லை.
தில்லை கோவிந்தராஜருக்கு கொடி மரத்துடன் கூடிய அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபம் இருந்தும் பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. மேலும் இம் மே மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்த உகந்த நாட்களாக உள்ளதாக அறங்காவலர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பல 100 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் சார்பாக தனித்தனியாக சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
பின்னர் சித்திரை திருவிழாவை சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையைக் காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட மன்னர் திருமலைநாயக்கர் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார்.
அதைத்தொடர்ந்து மன்னர் திருமலை நாயக்கர் காலம் முதல் தொன்று தொட்டு, சைவ – வைணவ விழாக்களை இணைத்து சித்திரைத் திருவிழாவாக மன்னர் திருமலை நாயக்கர் மாற்றியதால் இன்றளவும் விடிய விடிய மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் மாசி வீதிகளில் பவனியும், அதிகாலையில் வைகை ஆற்றுக் குள் கள்ளழகர் இறங்கும் நிகழ்வும் நடைபெற்று, சித்திரைத் திருவிழா ஒரே விழாவாக வரலாற்றுப் பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
எனவே மதுரையில் சைவ-வைணவர்களை ஒன்றிணைத்து நடத்தப்படுகின்ற சித்திரை திருவிழா போன்று – 400 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரமோற் சவத்தை நடத்திட வேண்டும். அதற்கு பொது தீட்சி தர்கள் சைவ-வைணவ பாகுபாட்டை மறந்து தங்களது ஆணவத்தை கைவிட்டு, பிரமோற்சவம் நடத்திட முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசோடும் பக்தர்களோடும் பொது தீட்சிதர்கள் இணக்கமாக இருக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இத்தோடு இந்தப் பிரச்சினை நிற்கவில்லை.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
“சிதம்பரம் நடராஜர் கோவிலில், விநாயகர், விஷ்ணு, முருகனுக்கு சன்னிதிகள் உள்ளன. விஷ்ணு சிலைக்கு, 1,000 ஆண்டுகளுக்கு முன் வரை, பொது தீட்சிதர்கள் தான் பூஜை செய்து வந் தனர். 1,539ஆம் ஆண்டில் கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி கட்டப் பட்டது.
தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் சிவன் கோவில்கள் உள்ளன. அங்கு, விஷ்ணு சன்னிதியும் உள் ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், பிரமோற்சவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள், சடங்குகள் நடக்கும். கோவிந்தராஜ சன்னிதிக்கு என, கோவிலில் சிறிது இடம் உள்ளது. 90 சதவீத பக்தர்கள், நடராஜரை தரிசிப்பதற்காகவே வருவர்.
உத்தரவுக்கு தடை
கோவிந்தராஜ பெருமாளுக்கான விழாக்கள், சடங்குகள் குறித்த பட்டி யல், 1920இல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது; கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு பிர மோற்சவம் நடத்தக்கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 18இல், அறநிலை யத் துறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவில், ‘கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், மே 20 முதல் 29 வரை பிரமோற்சவம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மார்ச் 13இல் நடக்க உள்ளது.
‘அதில், நிர்வாக அறங்காவலர்கள், பொது தீட்சிதர் கள் செயலர் உள்ளிட்டோர் ஆஜராகவும், தவறினால் ஆட்சேபம் இல்லை என்று கருதி, தகுதி அடிப் படையில் பிரமோற்சவம் நடத்துவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இணை ஆணையரின் இந்த உத்தரவு, கோவில் சடங்குகள், வழிபாட்டு முறையில் குறுக்கிடுவது போலாகும். எனவே, இதை ரத்து செய்ய வேண்டும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இல் லாத ஒரு விழாவைக் கொண்டாட உத்தரவிடுவதற்கு, இணை ஆணைய ருக்கு அதிகாரம் இல்லை.
எனவே, இணை ஆணையரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்.”
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தள்ளுபடி
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.
அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, “நீதிமன்ற உத்தர வின் அடிப் படையில், மே மாதம் பிரம்மோற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. பிரம் மோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 1983இல் தொட ரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது,” என்றார். இதையடுத்து, கோவிந்த ராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களை, வழக் கில் பிரதிவாதிகளாக சேர்க் கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 29க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.”
– ‘தினமலர்‘, 27.4.2024 பக். 16
அர்த்தமுள்ள இந்து மதம் என்கிறார்கள். ஹிந்து ராஜ்யம் அமைப்போம் என்று நீட்டி முழங்குகிறார்கள். ஹிந்துக்களே ஒன்று சேருங்கள் என்று அழைப்புக் கொடுக்கிறார்கள்.
ஆனால் அதே ஹிந்து மதத்துக்குள்ளேயே நடராஜர் கடவுளுக்கும், கோவிந்தராஜ கடவுளுக்கும் ஆகாதாம். கோவிந்தராஜக் கடவுளுக்கு பிரமோற்சவம் நடத்தக் கூடாது என்று அதே ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றம் வரை படி ஏறியுள்ளார் தீட்சதர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர் என்றால் இந்தத் திருக்கூத்தை என்னவென்று சொல்லுவது!
கோவிந்தராஜ பெருமாளை ஏற்றுக் கொள்ளும் வைஷ்ணவர்களில் கூட வடகலை – தென்கலை சண்டை சந்தி சிரிக்கிறது.
வடகலை என்னும் மரபைப் போதித்த வேதாந்த தேசிகர் வாழ்ந்தது காஞ்சிபுரத்தில், தென்கலை மரபினைக் கொண்டு வந்தவர் மணவாள மாமுனி – இவர் வாழ்ந்தது சிறீரங்கத்தில்.
வடகலை சம்பிரதாயம் ஆரியத்தைச் சார்ந்தது என்றும் தென்கலை சம்பிரதாயம் தமிழ்நாட்டைச் சார்ந்தது என்றும் கூறப்படுவது உண்டு.
வடகலை சம்பிரதாயம் சமஸ்கிருதத்தை முன்னிறுத் துகிறது. தென்கலை சம்பிரதாயம் தமிழை முன்னிறுத் துகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மூலவருக்கு முன்பாக முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பாடுவதா, வேத பாராயணங்களைப் பாடுவதா என்பது ஒரு பிரச்சினை! இதற்காக வடகலை – தென்கலைப் பிரிவு அய்யங்கார்களுக்கிடையே வாய் வார்த்தை முற்றி, வீதிகளில் அடிதடி – கட்டிப்புரண்ட காட்சிகளை என்ன என்று சொல்லுவது!
வரதராஜப் பெருமாளும் இவற்றை எல்லாம் பா£த்துக் காண்டு தான் இருக்கிறார். புராணங்களில் எழுதி வைத்துள்ளார்களே – அதன்படி வரதராஜ பெரு மாள் யார் கனவிலாவது வந்து சொல்லித் தொலைக் கக் கூடாதா? நீதிமன்றம் வரை செல்லுகிறார்கள்.
காஞ்சிபுரம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற வழக்கு இலண்டன் பிரிவு கவுன்சில் (House of Lords) வரை சென்றதுண்டே!
வடகலைக்காரர்கள் பாதம் வைக்காத நாமம் தரிப்பவர்கள், தென்கலைக்காரர்கள் பாதம் வைத்த நாமம் தரிப்பார்கள். அதாவது ஆங்கிலத்தில் ‘U‘வுக்கும் ‘Y’க்கும் உள்ள வேறுபாடு. (நாமக்கதை ஆபாசத்தின் உச்சம்!)
யானைக்கு எந்த நாமம் போடுவது என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு.வீராசாமி அவர்கள் ஒரு வாரம் வடகலை நாமமும், மற்றொரு வாரம் தென்கலை நாமமும் போடுங்கள் என்று தீர்ப்பு அளித்தார் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி பேச்சு, ‘விடுதலை’, 10.7.2010).
ஹிந்து மதத்துக்குள்ளேயே குடுமிபிடிச் சண்டை, தெருச் சண்டைகள் – இந்த இலட்சணத்தில் சிரிப்பாய் சிரிக்கும் நிலையில், ஹிந்து மதத்தை விமர்சிக்கிறார் களே, ஸநாதனம் பற்றி எல்லாம் பேசுகிறார்களே என்று வாய்க்கிழியப் பேசத் தகுதி உண்டா?
அய்யர் – அய்யங்காருக்குள்ளும், அய்யங்காருக் குள் வடகலை – தென்கலை தெருச் சண்டைகளும் நடக்கும் நிலையில் ‘ஹிந்துக்களே வாருங்கள் வாருங்கள்!’ என்று கூக்குரல் போடுவதற்கு அருகதை உண்டா? இவ்வளவுக்கும் சிதம்பரம் – கோவிந்தராஜ பெருமாள் கோயில் 108 திவ்விய தேசங்களுள் ஒன்றாம்!
இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயிலுக் குள்ளிருக்கும் நடராஜ பக்தர்களான தீட்சதர்களுக்கும் கோவிந்தராஜ பெருமாள் பக்தர்களுக்கும் இடையே சச்சரவுகள் – உயர்நீதிமன்றம் வரை செல்லுகிறார்கள் – தங்கள் கடவுள்களுக்குச் சக்தியில்லை – நீதிமன்றம் தான் முடிவு சொல்ல வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை நாம் சொன்னால் ரோஷம் பொத்துக்கொண்டு கிளம்பும்!
ஒரே கோயில் வளாகத்துக்குள் நடராஜர் கோவிந்த ராஜர் எப்படி வந்தனர்? கதையைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
ஏழாம் நூற்றாண்டுவரை பவுத்தத்தை பின்பற்றிய பல்லவர்கள் பின்னர் வைணவ சமயத்தை பின்பற்றலா னார்கள்.
இந்த நிலையில் எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவன் சோழர்களின் பகுதிகளை கைப்பற்றி அங்கு இருந்த சைவ கோவில்களில் விஷ்ணு சிலைகளை வைக்க கருவறைகளைக் கட்ட உத்தரவிட்டார்.
அப்படி சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைக்கப் பட்டதுதான் படுத்த நிலையில் இருந்த கோவிந்தராசன் சிலையும் மூலவர் மூர்த்தியும்!
நந்திவர்மனின் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் சோழர்கள் கைஓங்கவே பல்லவர்கள் பின்வாங்கினர். ஆனால் அதற்குள் சோழமண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் வைணவர்கள் பெருகிவிடவே அவர் களுக்கும் ஸ்மார்த்தர்களுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வந்தது. சிதம்பரத்தில் இருந்த கோவிந்த ராஜர் சிலையை அகற்ற சைவர்கள் முயன்ற போது ராமானுஜர் – தில்லை அம்பல நடராஜனின் ஆட்டத் தைப் பார்க்க அங்கு விஷ்ணு குடிகொண்டார் – என்று கதைவிட்டார்
ராமானுஜர் வாழ்ந்த 10 ஆம் நூற்ராண்டில் குலோத் துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத் துடனும் இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எந்தவிதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. இந்த நிலையில் சைவ-வைணவ மோதல்கள் மெல்ல மெல்ல உச்சத்தை அடைந்தன.
குலோத்துங்கனின் அரசவையில் பெருமாள் சிலை குறித்த வாதம் நடந்த போது, பெருமாளே அனைவருக் கும் மேலான கடவுள் என்று கதைவிடவே, சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள கோவிந்தராசர் சிலையை தில்லைக்குப் பக்கத்தில் உள்ள பிச்சாவரம் கடற்கரை யில் தூக்கி எறிய உத்தரவிட்டார். இதை ஒட்டக்கூத்தரும் அவர் பாட்டில் கூறியுள்ளார் இதற்கு முன்பு சமண சமயத்தை ஆதரித்த மகேந்திர வர்மப் பல்லவனை சைவ சமயத்தின் புகழ் கூறி, அவரை சைவத்தை தழுவ வேண்டிக் கொண்டார். இதற்காக ஒரு தந்தி ரத்தைக் கையாண்டார். பவழப்பாறைகள் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டவை.
ஆனால் அவை பாசி படிந்து கருங்கல் போல் காட்சி தரும் – இந்த நிலையில் மல்லை கடலில் பெரிய பவழப்பாறைகளை ஒன்றாகக் கட்டி கடலில் போட்டு அதில் படுத்துக்கொண்டு இதோ சிவன் கருங்கல்லையே எனக்காக மிதக்கும் தெப்பமாக மாற்றினார் என்று கதைவிட்டார். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் மிகவும் வேகமாக பரவவே – ஏற்கெனவே, மகேந்திரவர்மனின் மனைவி சைவ சமயத்தின் மீது கொண்டிருந்த பற்றையும் வைத்து – பல்லவனை சைவ சமயத்திற்கு இழுத்து வந்தார். இதனை அப்பர் தனது பாடலிலேயே கூறியிருப்பார்
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கதையைக் கூறி கருங்கல்லில் செய்த விஷ்ணுவும் மிதப்பார் என்று கதைவிட்டனர்.
ராமானுசர் வைணவத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்ததால் தில்லையில் விஷ்ணுப் பெருமாள் அகற்றப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிவனின் மீது பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கு தில்லையில் சிவத்தலமாக உள்ள இடத்தில் விஷ்ணு சிலை இருப்பதால் சிவத்தலம் முழுமை அடைந்ததாக தெரியவில்லை. அங்கே சிவன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
இதனை அடுத்து விஷ்ணு சிலைதனை அகற்றுவ தால் கோவிலின் லட்சுமி கடாட்சம் அகன்று விடும் என்றும் விஷ்ணுவே உயர்ந்த கடவுள் அவனது சிலைதனை அகற்றக் கூடாது என்றும் வேண்டிக் கொண்டார். மேலும் விஷ்ணுவின் புகழ் பாட ராமானு ஜர் தனது சீடர்களான கூரத்தாழ்வார் மற்றும் ஆண் டாள் இருவரையும் குலோத்துங்கனின் அவைக்குச் சென்று அவனை சூழ்ச்சியால் மயங்கவைத்து ஏமாற்றுவீர் என்று உத்தரவிட்டார். இதனை அடுத்து இருவரும் விஷ்ணுவின் பெருமைகளை எடுத்து உரைத்து ஒரு கட்டத்தில் ஏமாற்ற முற்பட்டனர். இதனை உணர்ந்துகொண்ட குலோத்துங்கன் ஆழ் வாரையும் ஆண்டாளையும் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டான்
ஆனால் அதையும் கேளாமல் விஷ்ணுவைப் பற்றி பாடிய ஆழ்வார் மற்றும் ஆண்டாளின் உறுப்புகளைச் சேதப்படுத்தி வீசி விட உத்தரவிட்டார். மேலும் ராமானுஜரையும் பிடித்து வர உத்தரவிட்டார், இதனை அறிந்துகொண்ட ராமானுஜர் உயிருக்குப் பயந்து இன்றைய ஹோய்சால தேசம் (கருநாடகா – ஆந்தி ராவை உள்ளடக்கிய பகுதி) சென்றார். இதனால்இவனை கிருமி கண்ட சோழன் என பிற்கால திவ்ய சூரிசரிதம் மற்றும் கோயிலொழுகு முதலியவை குறிப்பிடுகின்றன.
குலேத்துங்கச்சோழன் இறந்த பிறகு இரண்டாம் இராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பில் அமர்கிறான். வைணவர்கள் இவரைப் பெண்டிரைவிட்டு மயக்கிய காரணத்தால் இவர் வைணவத் தலங்களுக்கு சேவைப் புரிய உத்தரவிட்டார்.
ஆனால் இதை மறைத்து இரண்டாம் இராஜராஜ சோழன் தனது தந்தை வைணவர்களுக்கு செய்த பாவத்தைப் போக்க வைணவத் தலங்களுக்கு சேவைப் புரிந்தான் என்று கதைவிட்டனர்.
“விழுந்த அறி சமையத்தை மீளவேடுத்தனன்” – என்று மெய்க் கீர்த்தியில் பாடியும் வைத்தனர். இவர் காலத்தில் தான் இவரது தந்தையால் கடலில் வீசப்பட்ட விஷ்ணு சிலையைப் போன்று மீண்டும் செய்து தில்லையில் இருந்த இடத்திலேயே, வைத்தார்கள்.
தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் மீளப்பள்ளி எழுந்த கதை என்று இதை பெருமையோடு கூறுவார்கள்.
அர்த்தமுள்ள ஹிந்து மதம் என்று பேசுவோர் இவற்றை எந்த வகையில் அர்த்தமுள்ளதாகத் தூக்கி சுமப்பார்கள்?
இதைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்டால் நாஸ்திகன் – மதத் துவேஷி என்று மனம் போன வாக்கில் திட்டித் தீர்த்தால் போதுமா?
கடவுளையும் மதத்தையும் நம்புவோர் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள்?
நடராஜனை ஏற்காத கோவிந்தராஜ பெருமாள் பக்தர்கள் அவர்கள் பார்வையில் நாத்திகர்கள்தானே! கோவிந்தராஜப் பெருமாளை ஏற்காத நடராஜக் கடவுள் பக்தர்கள் அவர்கள் பார்வையில் நாத்திகர்கள்தானே!
இந்த இரண்டையும் ஏற்காத நம்மைப் பார்த்து நாத்திகர்கள் என்று சொல்லுவதுதான் வேடிக்கை.