காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விமர்சனம்!
புதுடில்லி, மே.7- நரேந்திர மோடியின் அரசியல் வரலாறு இந்து _ முஸ்லிம் பிரச்சினையை அடிப்படையாக கொண்டுள்ளது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், அவர் (மோடி) தனது ஆன்மாவைத் தேட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய மத்தியப் பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சர் திக் விஜய் சிங், “மோடி யின் அரசியல் வரலாற்றை நீங்கள் பார்த்தால், அது இந்து_-முஸ்லிம் பிரச்சினையை அடிப்படையாக கொண்டிருப்பதை பார்க்க முடியும். இதனால் யார் பலன் அடைகிறார்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிய அவர் தனது ஆன்மாவைக் கேட்பது நல்லது.
பா.ஜ.க., ஜாதி மதத்தின் அடிப் படையில் தேர்தலில் போட்டியிடு கிறது. உண்மையான பிரச்சினைகளின் அடிப்படியில் தேர்தல் நடத்தப்பட வில்லை. குஜராத்தின் மனித வளர்ச்சிக் குறியீட்டைப் பார்த்தீர்கள் என்றால் முதல் பத்து இடத்தில் கூட அந்த மாநிலம் இல்லை.
அதேபோல் நீங்கள் 2014 மற்றும் 2019 தேர்தல்களைப் பார்த்தால் அவர்கள் வெற்றி பெறுவதாக சொன்ன எண்ணிக்கையை விட அவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பார்கள். 2014 தேர்தலில் அவர்கள் 272 தொகு திகளில் வெற்றி என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள், 284 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். 2019ஆம் ஆண்டு தேர்தலில் 300 தொகுதிகள் என்று முழங்கினார்கள், 303 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். பாஜகவின் தேர்தல் வெற்றிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பங்கு முக்கியமானது.
இவிஎம்-களில் மக்கள் செலுத்தும் வாக்குகள் பதிவாவதில்லை. முதலில் வாக்காளர்கள் செலுத்தும் வாக்குகள் அவர்கள் விரும்பிய கட்சிக்குத்தான் விழுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.
இரண்டாவதாக, வாக்களிக்கும் படி மக்களுக்கு ஒரு அழுத்தம் இருக்கிறது. இதனால் அவர்கள் வாக்குச் செலுத்து வதில் ஆர்வம் காட்டுவதில்லை” என்று தெரிவித்தார்.