அய்யாவால் அடையாளம் காட்டப்பட்ட அன்னை மணியம்மையாரும் –
தலைவர் ஆசிரியரும் செறிவாக இயக்கத்தை நடத்தினர் – நடத்துகின்றனர்!
அய்யாவால் அடையாளம் காட்டப்பட்ட அன்னை மணியம்மையாரும் –
தலைவர் ஆசிரியரும் செறிவாக இயக்கத்தை நடத்தினர் – நடத்துகின்றனர்!
நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டு இயக்கக் கொள்கைகளைக் கொண்டு செல்லுவோம்!
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நோக்கவுரை
சென்னை, மே 6 தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் வரலாற்றில் இடம்பெறும் அமைப்பல்ல – வரலாற்றை உருவாக்கும் இயக்கம் – இந்த இயக்கத்தின் கொள்கைகள் மேலும் வெற்றி பெற நம்மையே நாம் அர்ப்பணித்துக் கொள்வோம் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா – முதல் நிகழ்வு!
கடந்த 25.4.2024 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள்
எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா – முதல் நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நோக்கவுரையாற்றினார்.
அவரது நோக்கவுரை வருமாறு:
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நோக்கவுரை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு தொடக்க விழா முதல் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, நிறைவாக நிறைவுரை வழங்க விருக்கக்கூடிய கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே, வரவேற்புரை வழங்கிய கழகத் தினுடைய பொருளாளர் தோழர் வீ.குமரேசன் அவர் களே! நன்றியுரை கூறவிருக்கக்கூடிய பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவரும், கழகத்தினுடைய செய லவைத் தலைவருமான வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களே, மற்றும் கழகத்தினுடைய பல்வேறு பொறுப் பில் இருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, பல்துறை சான்றோர் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் அன் பான நன்றியையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்முடைய வரலாற்றைப்
புரட்டிப் போட்ட இயக்கம்!
மேடையில் இருக்கின்றவர்களுக்கு மட்டுமல்ல, இந்த அவையில் கூடியிருக்கின்ற ஒவ்வொருவருக்கும், மிக முக்கியமான மகிழ்ச்சிக்குரிய, என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒரு பொன்னாள் – இந்நாள் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கமும், ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு தொடக்கமும் என்பது ஏதோ போகிற போக்கில் சொல்லக்கூடிய சொற்கள் அல்ல.
நம்முடைய வரலாற்றைப் புரட்டிப் போட்ட ஒரு புரட்சிகரமான இரு நிகழ்ச்சிகளுடைய தொடக்க நிகழ்ச்சி என்பது சாதாரணமானதல்ல.
ஒவ்வொரு நாளும், நாம் மட்டுமல்ல, அடுத்து வரு கின்ற தலைமுறையும்கூட இதுபோன்ற நிகழ்ச்சிகளில், என்னுடைய தாத்தாக்கள் கலந்துகொண்டிருக்கின்றார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சி என்பதை முதலாவதாக தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
வரவேற்புரையாற்றிய குமரேசன் அவர்கள் சொன் னார்கள், சுயமரியாதை இயக்கம் என்று சொல்லுகின்ற பொழுது, அது எந்தத் தேதியில் தோற்றுவிக்கப்பட்டது என்கின்ற ஆராய்ச்சிகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது எப்போது?
ஒரு சிலர், காங்கிரஸ் கட்சியில் தந்தை பெரியார் இருந்தபொழுதே, 1925, மே 2 ஆம் தேதி, ‘குடிஅரசு’ இதழைத் தொடக்கி, சுயமரியாதை இயக்கக் கருத்து களைப் பரப்புரை செய்தார்; அதுவே சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க நாள் என்று ஆய்வு செய்பவர்கள் இருக்கிறார்கள்.
இல்லை, இல்லை; தந்தை பெரியார், 1925 ஆம் ஆண்டு நவம்பர் 22-இல், காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய நாள்தான் சுயமரியாதை இயக்கம் தொடக்கப்பட்ட நாள் என்று சொல்லுகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும், 1925 ஆம் ஆண்டு, சுயமரியாதை இயக்கத்தின், ‘குடிஅரசு’ இதழின் தொடக்க விழா என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது.
அதைவிட மிக முக்கியமானது – தந்தை பெரியார் சுயமரியாதை இயக்க உணர்வைப் பெற்றது என்பது – அவர் சிறுவனாக ஓதுவார் வீட்டில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தபொழுதே, அந்த ஓதுவார் வீட்டுப் பெண், பெரியார் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்த பொழுது, அந்தத் தண்ணீர் டம்ளரை தண்ணீர்த் தெளித்து எடுத்தது ஏன்? அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி இருக்கிறதே, அப்பொழுதே சுயமரியாதை இயக்கம் தோன்றிவிட்டது என்று சொல்லவேண்டும்.
தந்தை பெரியாருக்கு சுயமரியாதை உணர்வு தோன்றியது எந்த வயதில்?
கட்சி ரீதியாக தந்தை பெரியார் வருவதற்குமுன்பே, அந்த உணர்ச்சி அவருக்கு இருந்தது. அவருடைய வீட்டிற்குக் கதாகாலட்சேபம் செய்ய வருவார்களே, பாகவதர்கள் – அவர்களைப் பார்த்து கேள்விக் கணை களைத் தொடுத்த நேரத்திலேயே, தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்று சொல்லவேண்டும்.
ஏதோ காங்கிரசை விட்டு தந்தை பெரியார் வந்த தற்குப் பிறகுதான் சுயமரியாதை இயக்கம் தோன்றியது என்பதைவிட, காங்கிரசில் இருந்தபொழுதே தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை சிந்தனையினுடைய வடிவமாகவே இருந்தார்.
1922 ஆம் ஆண்டில், திருப்பூரில் நடைபெற்ற காங் கிரஸ் மாநாட்டில், இராமாயணத்தையும், மனுதர்மத்தை யும் கொளுத்தவேண்டும் என்று சொன்னாரே, அப் பொழுதே சுயமரியாதை இயக்கம் தோன்றிவிட்டது.
அதேபோல, காங்கிரசில் இருந்தபொழுதே வைக்கம் போராட்டம்; காங்கிரசில் இருந்தபொழுதே சேரன்மா தேவி குருகுல ஒழிப்புப் போராட்டம்; இவையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் என்ற பெயரைச் சொல்லி, அதற்குப் பின்னால்தான், இந்தப் போராட்டங்களை நடத்தினார் என்று சொல்ல முடியாது.
இயல்பாகவே சுயமரியாதை என்பது, தந்தை பெரியார் அவர்களோடு பிறந்தது.
”இயற்கையின் புதல்வர் பெரியார்!” – வ.ரா.!
வ.ரா. அவர்கள் ‘‘இயற்கையின் புதல்வர் பெரியார் ” என்று சொன்னார்.
இயல்பாகவே தந்தை பெரியார் அவர்கள், அந்த சுயமரியாதை உணர்ச்சி உடையவராக இருந்த காரணத் தினால்தான், அதை ஓர் இயக்கமாகவே மாற்றினார்.
உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளைத் தேடிப் புரட்டினாலும், ‘‘சுயமரியாதை” என்ற சொல்லுக்கு நிகரான ஒரு சொல் இல்லை. அது தமிழா? வடமொழியா? என்பதைப்பற்றியெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் கவலைப்பட்டது கிடையாது.
அப்பொழுதுகூட சிலர் கேள்வி எழுப்பினார்கள்; சுயமரியாதை இயக்கம் என்றால், சுயமரியாதை அற்ற வர்கள் இதை ஏற்படுத்தியிருக்கிறார்களா? என்ற கேள் வியை எழுப்பிய ‘பெரிய மனிதர்கள்’முன்பு – தந்தை பெரியார் திருப்பிக் கேட்டார் – ‘‘சன்மார்க்க இயக்கம் என்றால், துன்மார்க்கர்களால் தொடங்கப்பட்டதா?” என்று.
‘‘சோசலிச இயக்கம் என்றால், சோசலிச கொள்கை களில் நம்பிக்கை இல்லாதவர்களால் தொடங்கப்பட்டதா?” என்று கேட்டார். ‘‘ஜீவகாருண்ய இயக்கம் என்றால் கசாப்புக் கடைக்காரர்களால் உண்டாக்கப்பட்டதா?” என்று கேட்டார்.
அவ்வப்பொழுது எந்தக் கேள்விக்கும் எப்படி பதில் சொல்வது என்பது தந்தை பெரியார் அவர்களுக்கு இயல்பாகவே பிறந்த ஒன்று.
தந்தை பெரியார் பார்வையில் சுயமரியாதை என்றால் என்ன?
சரி, சுயமரியாதை என்றால் என்ன? தந்தை பெரியார் என்ன சொல்லுகிறார்?
‘‘எந்தக் காரியம் ஆனாலும், காரண, காரியம் அறிந்து செய். சரியா? தப்பா? என்பதை அந்தக் காரண காரிய அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் விட்டுவிட்டு, எந்த நிர்ப் பந்த சமயத்திலும், அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கிறது சுயமரியாதை! மனிதன் சரி என்று கருதிய எண் ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பது தான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை” என்றார்.
அழகாகச் சொன்னார், ‘‘சுதந்திரத்திற்கும், சுயமரியா தைக்கும் அதிக தூரமில்லை” என்று.
ஆகவேதான், தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபொழுதே, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுதே, அந்த சுயமரியாதை சிந்தனையோடு, அவரு டைய சிந்தனைகள் இருந்தன.
சுயமரியாதை என்பதில் என்னென்னவெல்லாம் அடங்கியிருக்கிறது?
சுயமரியாதை என்று சொல்லுகின்றபொழுது, அதற் குள் ஜாதி ஒழிப்பு இருக்கிறது; அதற்குள் பெண்ணடிமை ஒழிப்பு இருக்கிறது; அதற்குள் பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிப்பு என்பது இருக்கிறது; அதற்குள்ளேயே சமத்துவம் இருக்கிறது, சமதர்மம் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒரே சொல்லில் சொல்லவேண்டும் என்றால், அதுதான் சுயமரியாதை!
அப்படியாகத்தான் தந்தை பெரியாருடைய பொது வாழ்க்கையும், அவருடைய பிரச்சாரங்களும் அமைந்தன.
உலகத்திலேயே இப்படி ஓர் இயக்கம் – மக்கள் மத்தியிலே கருத்துகளைக் கொண்டு சென்ற இயக்கம் – அதற்காக மாநாடுகளைக் கூட்டிய இயக்கம் – அந்த மாநாடுகளில் யாரும் எதிர்பாராத காலகட்டத்திலே தீட்டிய தீர்மானங்கள் – போராட்டக் களங்கள் – பேர ணிகள் – மக்களை நோக்கித் திருப்பித் திருப்பி கருத்து களை எடுத்துச் சொன்ன விதம் – பிற்காலத்தில், அர சாங்கங்களே அந்தத் தீர்மானங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்த ஒரு நிலைமையும், புரட்சியும் தந்தை பெரியா ரின் சுயமரியாதை இயக்கத்தால் உண்டானவைதான்!
சுயமரியாதை இயக்க மாநாட்டின் தீர்மானங்களும் – பிற்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களும்!
இன்றைக்கு ஏற்பட்டு இருக்கின்ற பல்வேறு சட்டங்கள் – துருவி ஆய்வு செய்வோமேயானால், எப்படியோ ஒரு வகையிலே, சுயமரியாதை இயக்கத் திற்கும், அதற்கும் தொடர்பு இருக்கிறது. அது சுயமரி யாதைத் திருமண வடிவ சட்டமாக இருந்தாலும் சரி, சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வந்தாலும் சரி, ஹிந்தி எங்களுக்குத் தேவையில்லை. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகள்தான் என்கின்ற நிலை முதலமைச்சர் அண்ணாவின் ஆட்சியில் சட்ட வடிவமாக வந்தாலும் சரி, சமூகநீதியில் இன்றைக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெறுவதாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசிலே இட ஒதுக்கீடு கிடைத்தது என் றாலும் சரி, எல்லாவற்றிற்கும் அடிப்படை சுயமரியாதை இயக்கம் என்ற வித்து இருந்திருக்கின்றது என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடம் இருக்க முடியாது.
சுயமரியாதை இயக்கம் உலகம் தழுவிய இயக்கம் – தந்தை பெரியார்
தந்தை பெரியார் சொல்கிறார், ‘‘குறுகிய ஆண்டு களிலே நான் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் – மலபார், ஆந்திரா போன்ற இடங்களில் மக்களைக் கலக்கி இருக்கிறது. காந்தியாரையே குட்டிக்கரணம் போட வைத்திருக்கிறது. இது ஏதோ இந்த மாநிலம் அளவில் மட்டும் இருந்துவிடும் என்று கருதாதீர்கள். இந்த இயக்கம் உலகம் தழுவிய இயக்கமாகப் போகக்கூடிய காலம் வரும்” என்று சொன்னார்.
இன்றைக்கு அரசியல் மேடை எப்படி இருக்கிறது?
நடந்து முடிந்த தேர்தல் எப்படி இருக்கிறது?
அடிப்படையில் பார்த்தீர்களேயானால், சுயமரியாதை இயக்கத்திற்கும் – ஸநானத்திற்கும் எதிர்ப்பாக நடை பெறக்கூடிய போராட்டமாகத்தான் இருந்து கொண் டிருக்கின்றது.
தந்தை பெரியாருக்கு சிருங்கேரி சங்கராச்சாரியார் கடிதம்!
1930 ஆம் ஆண்டு சிருங்கேரி சங்கராச்சாரியார் தந்தை பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
தந்தை பெரியாரைப் பெருமைப்படுத்தி, அவருடைய பொதுத் தொண்டையெல்லாம் சிறப்பாகக் கூறி, ”நீங்கள் தன்னலமற்ற பெரிய தொண்டைச் செய்துகொண்டிருக் கின்றீர்கள், நான் அறிவேன். நீங்களும், உங்களுடைய பாரியாளும் எங்களுடைய மடத்திற்கு வந்து, நாம் உரையாட விரும்புகின்றோம்” என்று கடிதம் எழுதுகிறார்.
அந்தக் கடிதத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் பதில் கடிதம் எழுதுகிறார், மிக மரியாதையோடு.
‘‘தங்கள் கடிதம் கிடைத்தது. எனக்கு வரவேண்டும் என்று ஆசைதான். ஆனால், அந்தக் கடிதத்தில் சில நிபந்தனைகள் இருக்கின்றன.” என்றார்.
‘‘ஸநாதனம் கெடாமலும், பழைய சாஸ்திர வேதத்தினுடைய கருத்துகள் மாறாமலும், நம்மிடையே கலந்துரையாடல் இருந்தால் சிறப்பாய் இருக்கும்” என்று சொன்னபொழுது,
தந்தை பெரியார் அவர்கள், ‘‘எனக்கு வருவதற்கு விருப்பம்தான். ஆனாலும், நீங்கள் வைத்திருக்கின்ற நிபந்தனைகள் எனக்கு உடன்பாடு உடையவையல்ல’ என்று பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
அப்பொழுதே ஸநாதனப் பிரச்சினை வந்துவிட்டது.
சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸநாதனத்தைப்பற்றி சொன்னதும், தந்தை பெரியார் அவர்கள், அந்த ஸநாதனம் என்ற அந்த சொல்லை வைத்துக்கொண்டு, இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று பதில் கடிதம் எழுதியதெல்லாம் கடந்த கால முக்கிய வரலாறு என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
இந்த சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி ஆர்.பிஅய். என்கின்ற லண்டனிலிருந்து வரக்கூடிய ஒரு பத்திரிகை, 1931 ஆம் ஆண்டு எழுதியது.
‘‘இந்திய வரலாற்றில் ஏற்கத்தக்கபடி சென்ற அய்ந் தாண்டு காலத்தில், ஒரு புதிய புத்துணர்ச்சி வெள்ளம் இரு கரையும் புரண்டு போய்க் கொண்டிருக்கிறது.
அதாவது சுயமரியாதை இயக்கம் என்ற ஓர் இயக்கம் சென்ற அய்ந்தாண்டுகளுக்கு முன்பு, சென்னை மாநிலத் தில் தொடங்கப்பட்டு, மக்களால் நெடுங்காலமாக மரி யாதை செய்யப்பட்டு வந்த கருத்துகளுக்கும், நம்பிக் கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிப்படையில் ஆட்டம் காணச் செய்துவிட்டது” என்று கிட்டத்தட்ட இன்றைக்குத் 93 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது? என்பதைப்பற்றி ஆர்.பி.அய். கூறுகிறது. ஆர்.பி.அய். வெளியிட்ட பல நூல்களைத் தந்தை பெரியார் அவர்கள் மொழி பெயர்த்து தமிழிலும் வெளியிட்டு இருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
சுயமரியாதை இயக்கம்பற்றி
பொருளாதார மேதை – அசோக் மேத்தா!
அதுபோலவே, பொருளாதார மேதை அசோக் மேத்தா அவர்கள், 1977 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்பொழுது ஒரு பேட்டியில் ஒரு செய்தியைச் சொல்கிறார்.
‘‘தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில், இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது, உயர்ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து, சுயமரியாதை இயக்கம் அறைகூவல் விடுத்தது; பிற்படுத்தப்பட்ட மக்கள் அதில் வெற்றி கண்டு, அரசி யலையும் கைப்பற்றினார்கள். தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடந்துள்ள இத்தகைய மாற்றத்தின் எதிரொலியை அண் மையில் சில மாதங்களாக வட மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களில் காண முடிகிறது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களாய் இருப்பவர்கள் விவசாயிகள்தான். அத்தகைய பிற்படுத் தப்பட்ட மக்கள் இப்பொழுது வட மாநிலங்களில் அரசி யலைக் கைப்பற்றிக் கொண்டு வருகிறார்கள்.
வடநாட்டிற்கும், தென்னாட்டிற்கும் இடையே இப்படிப்பட்ட சிந்தனைப்பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம், சுயமரியாதை இயக்கம்” என்று பொருளாதார மேதை அசோக் மேத்தா அவர்கள், 1977 இல் சொல்லுகிறார்.
காலத்தைக் கடந்து வென்றது இந்த இயக்கம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்த இயக்கத்தின்
அஸ்திவாரம் என்ன? – தந்தை பெரியார்!
சுயமரியாதை இயக்கம் என்று சொல்லுகின்றபொழுது, அதற்கு அஸ்திவாரம் என்ன? என்பதைப்பற்றியும் தந்தை பெரியார் குறிப்பிடுகின்றார்.
‘‘இந்த இயக்கத்தை ஆரம்பிக்கும்பொழுதுகூட, நான் என்னையே எண்ணி இப்பெரும் பணி ஏற் றேன்” என்று ஒரு பாட்டில் சொல்லப்படுவதுபோல, நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவி யாளராகவும் எண்ணியும், நம்பியேதான் இக்காரி யத்தில் இறங்கவேண்டுமே ஒழிய, நமக்குத் தொண்டர்கள் உண்டு; தலைவர்கள் உண்டு; சிநேகிதர்கள் உண்டு; பண உதவி செய்பவர்கள் உண்டு என்று நினைத்து, அவர்கள் உதவி கிடைக் கும் என்று நம்பிக்கை வைத்து, இவ்விஷயத்தில் நாம் இறங்கவில்லை.
ஆனால், நமது கொள்கைகளை உத்தேசித்து வருகிறவர்களை வரவேற்கவேண்டியதும், போகிற வர்களை போகச் சொல்ல வேண்டியதும், ஒழுக்க மற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களும் தள்ளப் பட வேண்டியதும் இவ்வியக்கத்தின் கடமையாகி விட்டது.
இவ்விஷயத்தில் நமக்குள்ள உறுதிதான், இவ்வியக்கத்திற்குச் சொத்தும், அஸ்திவாரமும் தவிர, வேறொன்றுமில்லை.”
இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம் – கருத்துப் புரட்சி மட்டுமல்ல – அதன் அடிக்கட்டுமானம் எப்படி இருக்கிறது? இந்த இயக்கம் எந்தப் பாதையை நோக்கிச் செல்லவேண்டும்?
நமக்கு ஆதரவு கிடைக்கும்; பசை உள்ளவர்கள் வருவார்கள்; இவர்களை நம்பி இந்தக் காரியத்தை நடத்தலாம் என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை.
பெரியார் சொல்கிறார், ‘‘நான் போகும்போது, என் பின்னால் யார் வருகிறார்கள் என்று நான் திரும்பிக்கூட பார்த்ததில்லை” என்பார்.
அப்படி ஒரு தன்னம்பிக்கை. அந்தத் தன்னம்பிக்கை யினுடைய மறுபெயர்தான் சுயமரியாதை!
தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா என்று கேட்டவர்களுக்குப் பதிலடி என்பது இருக்கிறது – வலிமையாக இருக்கிறது!
இந்த இயக்கம் தந்தை பெரியாருக்குப் பின் இருக் குமா? அவர் பெரிய மேரு மலையாயிற்றே என்று அக்கறை உள்ளவர்கள்போன்று பேசினார்கள்.
இயக்கம் இருக்கிறது; வலுவாக இருக்கிறது; முன்பு இருந்ததைவிட, இளைஞர்களுடைய பாசறையாக இருக்கிறது.
இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட பல சமூக சீர் திருத்த இயக்கங்கள் – அந்தத் தோற்றுநர்கள், தலை வர்களின் மறைவிற்குப் பின்னால், அந்த இயக்கங்கள் முகவரி இல்லாமல் போய்விட்டன. நான் பெயர்களை சொல்ல விரும்பவில்லை.
ஆனால், ஒரு சமூகப் புரட்சி இயக்கம் – அதன் தோற்றுநர், அதன் தலைவர் மறைவிற்குப் பின்னால், இருக்கிறது; வலுவாக இருக்கிறது. உலகம் தழுவிய அளவில் இருக்கிறது என்று சொன்னால், அது தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமே!
‘‘இந்த இயக்கம் தனக்குப் பின்னால் எப்படி இருக்கவேண்டும்?
அமைப்பு முறைகள் எப்படி இருக்கவேண்டும்?
பிரச்சாரங்கள் எப்படி இருக்கவேண்டும்?
களங்கள் எப்படி காணப்படவேண்டும்?” என்று இந்த இயக்கத்தை யார் தலைமை தாங்கி நடத்திச் செல்ல வேண்டும் என்கின்ற வரையில், அடையாளங்காட்டி, தந்தை பெரியாருக்குப் பின்னால், அன்னை மணியம் மையார்; அன்னை மணியம்மையாருக்குப் பின்னாலே, நம்முடைய தமிழர் தலைவர் என்று, இந்த இயக்கம் – பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் அருகிவிட்ட நிலையில், இந்த இயக்கம் மட்டும்தான் நிலைத்து நிற்கிறது; காரணம், இந்த இயக்கம் மனிதனுக்குத் தேவையான பிராண வாயு போல!
பதவி பக்கம் ஏன் தந்தை பெரியார் செல்லவில்லை?
தந்தை பெரியார் அவர்கள் நினைத்திருந்தால், எந்தப் பதவிக்கும் சென்றிருக்க முடியும்; மிகப்பெரிய பதவிகளுக்குச் சென்றிருக்க முடியும். பதவிகள், அவர் வீட்டின் கதவைத் தட்டின.
வெள்ளைக்காரர்கள் காலத்தில், இரண்டு முறை தந்தை பெரியாரை பிரதமராக (பிரீமியராக) இருக்க வேண்டும் என்று கேட்டபொழுதுகூட, தந்தை பெரியார் அவர்கள், ‘‘நீங்கள் அட்ரஸ் தெரியாமல் வந்துவிட்டீர்கள்; நீங்கள் சொல்லுகின்ற பதவிக்கு வருவதற்கு, நாட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள்; ஆனால், நான் செய் கின்ற இந்தப் பணியை செய்வதற்கு, என்னை விட்டால், வேறு நாதியில்லை” என்று சொன்னார்.
எந்த மனிதனும் சபலத்திற்கு ஆளாகக்கூடிய இடம் அந்தப் பதவி. அந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்கள் சற்று சறுக்கியிருந்தால், நம்முடைய நிலை என்னவாகி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டு மக்களின் நிலை என்னவாகி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். பார்ப்பனரல்லா தாருடைய மக்களின் நிலை என்னவாகி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஆகவே, தந்தை பெரியாரை, யாருடனும் ஒப்பிட முடியாது. தந்தை பெரியாரால் கண்டெடுக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தையும், எந்தக் கட்சியோடும், எந்த இயக்கத்தோடும் ஒப்பிடவும் முடியாது என்பதிலே தெளிவாக நாம் இருக்கிறோம்.
வரலாற்றில் இடம்பெற்ற இயக்கமல்ல – வரலாற்றை உருவாக்கும் இயக்கம்!
இது வரலாற்றில் இடம்பெறும் இயக்கமல்ல; வரலாற்றை உருவாக்குகின்ற ஓர் இயக்கம் என்பதை எண்ணிப் பார்த்து, இந்த இயக்கத்தினுடைய பயணம் இன்னும் தொடரவேண்டி இருக்கிறது; அதற்காக நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டு, பாடுபடுவோம், உழைப்போம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நோக்கவுரையாற் றினார்..