பேராசிரியர் ந.வெற்றியழகன்
இறப்பு என்றால் என்ன?
நாளேடு ஒன்றில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
கட்டுரையின் பெயர்: “மரணத்துக்குப் பின் நடப்பது என்ன?”
அதில் கூறப்பட்டுள்ள சில முதன்மையான கருத்துகளையும் அதற்கான மறுப்பு விளக்கத்தையும் இப்பொழுது பார்க்க இருக்கிறோம்.
கட்டுரையின் ஒரு கருத்து இது:
“மரணம் என்றால் என்ன?…
உடலில் இருந்து உயிர் ‘ஆன்மா’ (ஆத்மா) பிரிவதை மரணம் என்கிறோம்.”
என்ன அற்புதமான விளக்கம் பார்த்தீர்களா?
உடலிலிருந்து உயிர் பிரிவதாம்! அதுதான் மரணமாம்! அதாவது, உடல் வேறு; உயிர் வேறு என்கிறது கட்டுரை. இது உண்மையா?
உடலுக்குள் உயிர் (ஆன்மா) ஆத்மா பிரியுமாம்! உடலுக்குள் உயிர் தனியே இருந்து அது பிரியுமாமே? இந்த உயிர் அல்லது ‘ஆத்மா’ பற்றிய ஒரு செய்தியினையும் குறிப்பிட விரும்புகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மடச்சாமியார் (மடத்து அதிபர்) ஒரு கூட்டத்தில் ‘ஆத்மா’ பற்றி விளக்கிப் பேசி முடிக்கப் போனார்.
கூட்டத்தில் இருந்த ஒரு சீடன்: “சாமி, நீங்கள் இவ்வளவு நேரம் ‘ஆத்மா’ குறித்துப் பேசியதில் எனக்கு எதுவும் விளங்கவில்லை. என்ன செய்வது?”
சாமியார்: “மகனே! ‘ஆத்மா பற்றி என்ன சொன்னாலும் உன் போன்ற ஆத்மாக்களுக்கு ஒன்றும் புரியாது. அதற்கு நான் என்ன செய்ய?”
சீடன்: “சாமி, அப்படியா? அப்பொழுது யாருக்குப் புரியும்?”
சாமியார்: “உனக்குப் புரியாது! அவ்வளவுதான். அதாவது உன்னைப் போன்ற சாதாரண அல்பாத்மாக்களுக்குப் புரிந்துகொள்ள முடியாது.”
சீடன்: “நான் யாருக்குப் புரியும் என்று கேட்டேன்.”
குரு: “அப்பனே! அது பெரிய மஹாத்மாக்களுக்குத்தான் புரியும்.”
(மகன் இப்பொழுது அப்பன் ஆகிவிட்டார்!)
சீடன்: ‘மஹாத்மா’ என்றால் யார்?
குரு: ‘அந்தராத்மா’ யாரிடம் வந்து அடிக்கடி, பேசுகிறதோ, அவர்தான் ‘மஹாத்மா’
சீடன்: “என்ன சாமி! ஏன் சாமி அப்படி?”
குரு: “ஆத்மாவில் ஜீவாத்மா – பரமாத்மா என்று இரண்டு வகை உண்டு. அப்பனே! அதைப் புரிந்தவருக்குத்தான் புரியும்.”
சீடன்: ” ஒரு ‘ஆத்மா’வே புரியவில்லை! அதற்குள் இத்தனை பிரிவா?
குரு: சாமி, போதும்! என் ‘ஆத்மா’வே பிரிந்து போய்விடும் போலிருக்கிறது.”
சீடன்: “இன்னும் கேட்டால் மேலும் ஆத்மாக்கள் வந்துவிடும்.”
கூட்டம் முடிகிறது.
அந்தச் சீடன் கதைதான் நமக்கும் வந்துவிடும்.
ஆத்மா பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை! அப்படி ஒன்று இருந்தால்தானே?
நானே நானா? யாரோ தானா?
இந்த ‘ஆத்மா’ பற்றி ஆதிசங்கரரின் வேதாந்தம் என்ன கூறுகிறது?
“எல்லாச் சரீரங்களிலும் இதயமாகிய குகையில் வசித்துக் கொண்டும், ‘நான்’, ‘நான்’ என்று ஸ்புரித்துக் கொண்டும் உள்ள கேவல ஞானாகார வஸ்துவே ‘ஆத்மா’வாம்!
எது அந்தக் காரண விருத்தியுடன் கூடி, நேத்திரந்திரிய வாயிலாக எல்லா வஸ்துவாயும் இருக்கிறதோ, எது சுரோத்திரியேந்திரத்தின் மூலமாக ஸப்தங்களை அறிகிறதோ, எது கிராணேந்திரிய துவாரா வாசனை அறிகிறதோ, அது ஞான வடிவுள்ள ஆத்மாவாம்!” (நூல்: “ஞானசூர்யோதயம்” என்னும் வேதாந்த இரகசியார்த்த வினா விடை: பக்கம் 63-64)
மூச்சு வாங்குகிறதா?
ஏதேனும் புரிகிறதா? புரிந்தது போலாவது இருக்கிறதா?
மண்டையைப் பிய்த்துக் கொள்ளும்படித் தோன்றுகிறதா?
இராமானுஜ விளக்கம் இது :
“ஆத்மா, தேகம், இந்திரியங்கள், மனம், ப்ராணன், புத்தி முதலிய பற்றைக் காட்டிலும் வேறுபட்டது.
கர்ப்ப, ஜென்ம, பால்ய, யவ்வன வார்த்தக்ய மரணாதி விகாரங்கள் இல்லாதது…
“டேஷத்துவத்தோடு கூடி ஜ்யாத்ருத்வம்
ஆத்மாவுக்கு லட்சணம்…” (நூல்: சிறீவைஷ்ணவம், பகுதி: தத்வத் திரயம் – பக்கம் 43)
போதும் போதுமே!
இன்னும் இவை போல்வன ஏராளமாக உள்ளன.
அவற்றைப் படித்தால் படிப்பவர்க்கு பைத்தியமே பிடித்துவிடும்.
வேண்டாம்! இத்தோடு நிறுத்தி விடுவோம்.
அழிவில்லாத ‘ஆத்மா’
தினத்தந்தி கட்டுரையாளர் மேலும் எழுதுகிறார்:
“அர்ஜூனனுக்கு கிருஷ்ணன் போதிக்கையில், அர்ஜூனா, உடலுக்குத்தான் அழிவு உண்டு. அதில் இருக்கும் ஆன்மாவுக்கு அழிவு இல்லை!
இந்த உடலை விட்டு, பிரிந்ததும், அது வேறொரு பிறவி எடுக்கும்!!
ஆத்மா அல்லது உயிர் பற்றிய அறிவியல் விளக்கம்
‘ஆத்மா’ என்பதாக எதுவும் இல்லை! அது உடலுக்குள் இருந்து வெளியேறுவதும் இல்லை.
உடலில் இருக்கும் உயிர்ப்புத்தன்மையே ‘உயிர்’ என்கிறது அறிவியல்.
இந்த உயிர் என்பது உடல் இல்லாமல் இல்லை.
இதனை ‘Life’ என்னும் ஆங்கிலச் சொல் குறிப்பிடுகிறது.
“உயிரினப் பொருள்களில் (Organism) காணப்படும் புரதம், கொழுப்பு, குளுக்கோஸ் முதலிய சத்தூட்டும் பொருள்களின் வழி நிகழும் மெதுவான மூச்சு இயக்கத்தின் விளைவின் ஆற்றலின் எழுச்சிதான் உயிர்.”
சுருங்கக் கூறின்,
“செல்களில் நிகழும் ஒரு வேதியியல் எதிர் விளைவே உயிர்.”
(Product of a Chemical Reaction)
என்கிறது அறிவியல்.
வேறு வகையில் கூறினால்,
“உடலின் பல்வேறு அமைப்புகளின் செயல்திறன்களும், அவற்றின் இயக்கங்களுக்கு இடையில் ஒருங்கமைந்த ஒருங்கமைப்பே உயிர்.”
(The functions of the various systems within the body and the functional integration or coordination we call ‘Life’)
இறப்பு என்பது என்ன?
உடலிலிருந்து உயிர் பிரிந்து போவதுதான் மரணம் என்கிறார் தினத்தந்தி கட்டுரையாசிரியர்.
அறிவியலின்படி, உடல் வேறு வேறு அல்ல; உயிர் வேறல்ல; உடலின் பல்வேறுஅமைப்புகளின் இயக்கங்களின் ஒருங்கமைவே உயிர் என்று அறிவியல் வழிநின்று பார்த்தோம்.
இனி, மரணம் என்றால் என்ன?
அறிவியல் விளக்கத்தைப் பார்ப்போம்.
“மூளை இயங்காத நிலை ஏற்படுமானால் அதுவே இறப்பு என்கிறது அறிவியல் (Brain demise). இதயம் இயங்கினாலும்கூட அவன் உயிரோடு இல்லை என்றே பொருள்!
மூளை இயக்கம் நின்ற பிறகும் இதயம் ஒரு மாதம் கூட அடித்துக் கொண்டே இருக்கும். அவர் ஒரு மாதப் பிணம்தான்!
இறப்பு தொடர்கிறது!
ஒரு 5-10 மணித்துளிகள் மூளைக்கு உயிர் மூச்சு (ளிஜ்ஹ்ரீமீஸீ-ஆக்சிஜன்) சென்றடையாமல் போனால் மூளை, மீண்டும் சரிப்படுத்தப்படாதபடி முழு இயக்கமும் நின்றுவிடும்.
கீழ்வரும் இயக்கங்கள் நின்றுவிட்டால் உடலின் இறப்பு என்பது உறுதியாகிறது.
அந்த இயக்க உறுப்புகள்:
1. நாடித்துடிப்பு, 2. இதயத் துடிப்பு, 3. மூச்சியக்கம், 4. மூளையின் செயல்பாடு. (1. Pulse, 2. Hear beat, 3. Reflexions of breathing, 4. Brain activity).
If the oxygen is not supplied to Brain for 5-10 minutes, it becomes demaged beyond regain.
If the following five functions cease, the death of body is comformed. Pulse, heart beat, reflexions folllowing breathing and brain activity)
மடமையின் சிகரம் மறுபிறவி“இந்த உடம்பைவிட்டு உடல் பிரிந்ததும் அது வேறொரு பிறவி எடுக்கும் என்கிறார் கிருஷ்ணன்.”
என்று, தினத்தந்திக் கட்டுரையாளர் எழுதுகிறார்.
எப்படி இந்த உயிர் மறு பிறவி எடுக்கும்?
மறுபிறவியில் ஒரு தாயின் வயிற்றுக்குள் எப்படிப் போகும்?
எந்த வழியே உள்ளே போகும் அந்த ஆத்மா?”
முன் வாய் வழியிலா? ஆசன வாய் வழியிலா? காது வழியிலா? மூக்கு வழியிலா?
இதைப் பற்றி எதுவும் சொல்லாமல் வேறொரு பிறவி எடுக்கும் என்று எப்படிக் சொல்லலாம்?
மறு பிறவியாம், மண்ணாங்கட்டி!
ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவரது உடல் மண்ணில் புதைக்கவோ, எரிக்கவோ செய்யப்படுகிறது.
மண்ணோடு மண்ணாய்ப் போய்விடுகிறது; தீயினால் எரிக்கப்பட்டு அழிந்து போகிறது! பின் எப்படி – அதன் உயிர் மட்டும் தனியே பிரிந்து மறு பிறவி எடுக்கிறதா?
இறப்புக்குப் பின் உயிர் இல்லை; உடலில் தோன்றிய உடலோடு போய்விடுகிறது.
இதனை, ஓர் அருமையான உவமைமூலம் டாக்டர் ஆபிரகாம் டி.கோவூர் பின்வருமாறு கூறுகிறார்.
“எரிபொருள் இல்லையேல் எரியும் நெருப்பின் சுடரும் இல்லை! அதுபோல், உடல் இல்லாமல் உயிரும் மனமும் இல்லை.”
“Just as there cannot be fire without fuel there cannot be life and mind” – ‘Begone godmen’ (Book)
இவ்வாறு, உயிரும் மனமும் இல்லாமல் இறந்த உயிர் எப்படி மறு பிறவியில் முன்பிறவி நிகழ்வுகளைக் கூறுகிறது?
பீம்சிங், இது என்ன ஒரு புதுக் குழப்பம்?
தினத்தந்தி கட்டுரையாளர் ஒரு புதிய குழப்பச் செய்தியினை வெளியிடுகிறார்.
அதாவது, “இறந்தவர்களின் ஆன்மா உடனடியாக இந்தப் பூமியை விட்டுப் போவதில்லை!” என்றும், சில நாட்கள் தாம் இருந்த வீட்டிலேயே உலவும் என்றும், அப்போது அங்கு நடப்பதையும், தனது உறவினர்களையும் அது பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
மரணம் நிகழ்ந்த சில வீடுகளில், அறையில் யாரோ நடந்து செல்வது போலவும், இறந்தவர் பயன்படுத்தும் வாசனைத் திரவத்தின் வாசனை நுகர்வது போல உணர்ந்ததாகவும் அங்குள்ளவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்!
உளறலின் உச்சகட்டம்
மேலே சொல்வதுபோல, உண்மையில் இறந்தவர் வீட்டில் எவரும் அவ்வாறு நடந்தால் அங்கு இருக்க முடியாது.
உலவுதல், நடத்தல், பொருள்களைப் பார்த்தல், தொடுதல், முகர்தல் என்பன நடைபெறும் என்பது மெய்யாக இருக்க முடியுமா?
அப்படியானால், தனக்குப் பிரியமான இளம் மனைவியைத் தொட முடியுமே? உடலுறவு கொள்ள முடியுமே? அப்பெண்ணின் கதி என்னாவது? கருவுற்றால் அவள் என்ன பாடுபடுவாள்?
கண்ணில்லாமல் பார்க்க முடியும்; மூக்கில்லாமல் முகர முடியும்! காலில்லாமல் உலவ – நடக்க முடியும்; கையில்லாமல் பொருள்களைத் தொட்டுப் பயன்படுத்த முடியும் – என்பது எப்படிச் சரியாகும்? உண்மையாகும்?
இதுபற்றி, டாக்டர் கோவூர் கூறுவதை யோசிப்போம்!
“ஆவிகள் ‘பொருளியல் உடல்’ இல்லாமல் பேச்சு, கத்துதல், நடத்தல், ஓடுதல் அல்லது பொருள்களை வெளியில் தூக்கி எறிதல் முதலியவற்றைச் செய்யும் திறன் கொண்டவை என்று நினைப்பது முழு முட்டாள்தனம்.”
It is utter foolishness to think that the spirits without ‘material bodies’ are capable to talking, shouting, walking, running or throwing objects out.”
முன் பிறவி நினைவுகள்
சென்ற பிறவியில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி தற்போதைய பிறவியில் நினைவு கூர்ந்த செய்திகள் சிலவற்றைக் கட்டுரையாளர் கதைக்கிறார்.
இது எப்படிச் சாத்தியம்?
உடல் இன்றேல் உயிர் இல்லை. உயிர் இல்லையேல் மனம் இல்லை; மனம் இல்லையேல் நினைவுகள் இல்லை!
உடல் இல்லாத – மூளை இல்லாத நிலையில், அப்படி முன் பிறவி நிகழ்வுகளை எப்படி தற்போதைய பிறவியில் நினைவுகூர முடியும்?
இதுபோன்ற சில கதைகள் கூறுகிறார். எல்லாவற்றிற்கும் விளக்கம் மேலே கூறியுள்ளேன்.
இதுவரை கூறியதிலிருந்து மரணத்திற்குப் பிறகு ஆவி (ஆத்மா) பிரிவதும் இல்லை; பிரிந்து வேறொரு பிறவி எடுப்பதும் இல்லை.
இது அறிவியல் வழிக் கூறப்படும் உண்மைகள்!
மரணம், மறு பிறவி, ஆவி, ஆத்மா பற்றி அவிழ்த்து விட வேண்டாம்! (‘கப்சா’க்களை விட்டால்) நாங்கள் சும்மா விட மாட்டோம். பதிலடி கொடுப்போம்!!