வல்லம், ஏப்.29- பெரியார் மணியம்மை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் நிகழ்ச்சியின் முதல் நாள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
1993 ஆம் ஆண்டு தொடங்கி சில ஆண்டுகள் நடைபெற்று வந்த குழந்தைகளுக்கான பழகு முகாம், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் அவர்களின் முன்னெடுப்பில் 2010 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டிலும் ஏப்ரல் 28 ஆம் நாள் முதல் மே 2 ஆம் நாள் வரையிலான 5 நாட்கள் 8 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வு வழமை போல பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.04.2024) முதல் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு தழுவிய அளவில் 51 மாணவர்கள், 27 மாணவிகள் என மொத்தம் 78 பெரியார் பிஞ்சுகள் பங்கேற்றுள்ளனர். பெரியார் பிஞ்சுகளின் தங்கும் இடமான சொர்ணா ரங்கநாதன் விடுதியில் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் வழிகாட்டுனர்களான பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சி பெறும் பெண்கள் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் முகாம் ஒருங்கிணைப்பாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
அறிவியல் அறிஞர் அய்ன்ஸ்டின் அரங்கில் தொடக்க விழா முடிந்து முதல் வகுப்பை 11:30 மணியளவில் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் நடத்தினார். வகுப்பினிடையே பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பூ.கு.சிறிவித்யா அவர்கள் திடீர் வருகை தந்து, பிஞ்சுகளை வரவேற்றும், முகாம் சிறப்பாக நடைபெற வாழ்த்தியும் பல்வேறு பணிகள் காரண மாக விடை பெற்றுக் கொண்டார். முகாமின் ஒருங்கிணைப்பு ஆலோசகரான பெரியார் நூற்றாண்டு பல்தொழில்நுட்பக் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர் பர்வீன் கலந்து கொண்டு ஒருங்கிணைப்பாளர்களை உற்சாகப்படுத்தினார். இரண்டாம் வகுப்பை அறிவியல் வெளியீடு மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் இயக்குநர் பாலகுமார் பிச்சை கதை சொல்லல் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டியதோடு மாணவர்களையும் கதை சொல்ல அனுமதித்து வகுப்பை உயிரோட்டமாக வைத்துக்கொண்டார். தொடர்ந்து மென்பொருள் துறையின் உதவிப் பேராசிரியர் பர்வீன் பேகம் கைகளாலேயே அணிகலன்கள் செய்யும் பயிற்சியை வழங்கினார். மதிய உணவுக்குப் பிறகு அதே அரங்கில் அதே பேராசிரியரான பர்வீன் பேகம் உதவிப் பேராசிரியர் நித்யா அவர்களுடன் இணைந்து கணினியில் ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்தார். அதில் எழுத்துகள் மூலம், எண்கள் மூலம் வரைந்து காட்டி பிஞ்சுகளைக் கவர்ந்தனர். வகுப்புகளுக்கு இடையிடையே முகாம் ஒருங்கிணைப்பாளரான ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பேய், பிசாசு பற்றிய உரையாடலை கலகலப்பாக நடத்தி மாணவர்களின் பகுத்தறிவுக்கு வேலை கொடுத்தார்.
தொடர்ந்து அறிவியல் மய்யம் வளாகத்தின் நான்காம் மாடியில் உள்ள ஸ்டுடியோவில் மாணவர்களுக்கு கிரீன் மேட் அனிமேஷன், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஊடகங்களில் பங்கேற்பது பற்றி பயிற்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவையான போட்டி விளையாட்டின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன என்று உணரும் படியாக பிஞ்சுகளை 10 குழுக்களாக பிரித்து நிகழ்ச்சியை அமைத்து மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார் கீர்த்தி வாசன். இறுதியில் ஒட்டுமொத்த பேரையும் சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் படியாக உறுதிமொழி எடுக்கச் செய்தார். பிஞ்சுகள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வகுப்பில் பங்கேற்று வகுப்பாசிரியருக்கு ஓயாமல் நன்றி தெரிவித்த வண்ணம் இருந்தனர். போட்டியின் முடிவை அறிவிக்கும் போது அனைவரும் முதலில் வருவது எந்தக்குழு என்று ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருந்த போது, “எந்தக்குழு அதிக மதிப்பெண் பெற்றது என்பதில் நமது வெற்றி இல்லை. இந்த சுற்றுச்சூழலை யார் காப்பாற்றுகிறார்கள் என்பதில்தான் நமது வெற்றி இருக்கிறது” என்று சொல்லி எல்லோரையுமே வெற்றியாளர்களாக உணரவைத்து பிஞ்சுகளிடம் பாராட்டையும் பெற்றார்.
சிற்றுண்டி இடைவேளைக்குப் பிறகு “பெரியார்” திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது. திரையிடலுக்கு முன்பு பேராசிரியர் நம். சீனிவாசன் பெரியார் பற்றி ரத்தினச் சுருக்கமாக பிஞ்சுகளுக்கு அறிமுகம் செய்தார். பின்னர் திரையிட்டு காட்டப்பட்டது. பெரியார் பிஞ்சுகள் பலரும் படம் முடிந்து, ”இறுதிக்காட்சி எங்களை கண் கலங்க வைத்துவிட்டது” என்று நம்முடன் பகிர்ந்து கொண்டனர். அந்த அளவுக்கு பெரியார் திரைப்படம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தஞ்சமடைந்து அறை பொறுப்பாசிரியர்களுடன், வருகைப் பதிவு சரிபார்ப்பு குழுவினரிடம் அரட்டையடித்த வண்ணமும், பெற்றோர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியுடன் முதல் நாளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டும் உற்சாக உருவங்களாக விளங்கினர். முதல் நாளில் பெற்றோரை எண்ணி யாரும் கண்ணீர் சிந்தவில்லை என்பதும் ஏங்கவில்லை என்பதும் இந்த ஆண்டின் புதுமையான நிகழ்வாகும். மற்றொரு புதுமை வகுப்பாசிரியர் பற்றிய அறிமுகத்தை காணொலிகளாகவே திரையிட்டுக்காட்டினர் ஒருங்கிணைப்பாளர்கள். முகாம் ஒருங்கிணைப்பாளரான புதுவை சிவ.வீரமணி பிஞ்சுகள் எவ்வளவு உண்கிறார்கள் என்பது முதல் அவர்களது ஒவ்வொரு அசைவுகளையுமே தொடர்ந்து கண்காணித்து, இரவு அவர்கள் அறைகளுக்கு வரும் வரையில் உடனிருந்து உற்சாகப்படுத்தினர்.