அய்தராபாத், ஏப்.27 தெலங்கானா மாநில மேனாள் முதலமைச்சரும், பிஆர் எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் பேருந்துப் பயணம் மூலம் தனது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் நடத்தி வருகிறார். இதில், புவனகிரி பகுதியில் நடை பெற்ற பிரச்சாரத்தின்போது பேருந்தில் இருந்தபடியே அவர் பேசியதாவது:
ஒன்றியத்தில் பாஜக அரசு 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. இதனால் நாட்டுக்கு எந்தவொரு பலனும் இல்லை. இவர்களது ஆட்சியில் நாட்டின் மானம்தான் பறிபோனது. எவ்வித வளர்ச்சியும் இல்லை.
குறிப்பாக தெலங்கானா மாநிலத்துக்காக பாஜக எதுவுமே செய்யவில்லை.ஆதலால், அவர் களுக்கு இங்கு ஓட்டு கேட்கவும் உரிமையில்லை. ஒன்றிய இணை அமைச்சர் என்று ஒருவர் இங்கு இருந்தும் (கிஷண் ரெட்டி) ஒரு பைசா கூட தெலங்கானா மாநிலத்துக்கு வாங்கித் தரவில்லை. பாஜக என்றாலே அட்சதை, புளியோதரை, தீர்த்தம் மற்றும் காவி நிறம் மட்டுமே. யாதாத்ரி நரசிம்மர் கோயிலை நான் மிகவும் அற்புதமாக சீரமைத்தேன். ஆனால், அது குறித்து நான் எப்போதாவது பேசினேனா ? அரசியல் செய்தேனா ? இல்லை. என் மகளை (கவிதா) பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். நான் பிறந்ததே தெலங்கானாவுக்காக. இவ்வாறு சந்திர சேகர ராவ் பேசினார்.