3.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் ஏழுமலையான் உண்டியலில் காணிக்கை
நோட்டுகள் கள்ள நோட்டா? நல்ல நோட்டா? என்று ஏழுமலையானுக்கு எங்கே தெரியப்போகிறது!
திருமலை, ஏப்.27 திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் நாள்தோறும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை செலுத்தி வருகின்றனர். உண்டியல் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.
இதனிடையே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. எனினும், ஏழுமலையான் கோயில் உண்டியலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் தொடர்ச்சியாக செலுத்தி வந்தனர். கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி வரை ரூ.3.20 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் உண்டியலில் செலுத்தப்பட்டன.
அவற்றை மாற்ற அனுமதிக்கவேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியது. இதற்கு 5 தவணையாக மாற்ற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதன்படி ரூ. 3.20 கோடியை தேவஸ்தானம் மாற்றியுள்ளது.
இதேபோல் பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளும் திருப்பதி உண்டியலில் செலுத்தப் பட்டன. ரூ. 500 கோடி வரை செலுத்தப்பட்ட பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ள வில்லை. ஆதலால் அவை இன்னமும் தேவஸ்தான கிடங்கில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.