இஸ்ரோ தற்போது ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இன்ஜின் நாசிலில் புதிய தொழில்நுட்பம் ஒன்றே புகுத்தி குறைந்த எடை கொண்ட கார்பன் மெட்டீரியலால் செய்யப்பட்ட புதிய நாசிலை வடிவமைத்துள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் ராக்கெட்டில் சுமந்து செல்லும் பேலோடின் எடையை அதிகரிக்க முடியும். அதே நேரம் இது அதிக திறனுடன் உழைக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆய்வுமயமான இஸ்ரோ உலக அளவில் மிக முக்கியமான விண்வெளி ஆய்வு மய்யமாக திகழ்ந்து வருகிறது. சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை இஸ்ரோ செய்து வருகிறது. மேலும் தனது ஒவ்வொரு தயாரிப்பையும் மேம்படுத்தும் பணியையும் அவ்வப்போது செய்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ராக்கெட் இன்ஜின்களில் இன்ஜின் நாசில் என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. நாம் கார் பைக்குகளில் எரிபொருள் எரிவதன் மூலம் ஏற்படும் சக்தியை மெக்கானிக்கல் சக்தியாக மாற்றி அதன் மூலம் சுழற்சியை ஏற்படுத்தி அதை பயன்படுத்தி வாகனத்தின் வீலை சுற்ற வைத்து பயணம் செய்கிறோம். ஆனால் ராக்கெட் என்பது முற்றிலுமாக வேறு தொழில்நுட்பம். எரிபொருள் எரியும்போது கிடைக்கும் சக்தியை உந்து சக்தியாக பயன்படுத்தி ராக்கெட் கீழிருந்து மேலே எழும்புகிறது.
இதனால் அதிக எரிபொருளை எரிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதிக எரிபொருளை எரிக்கும் போது அதிகமான வெப்பம் தேவைப்படுகிறது. மேலும் இந்த வெப்பத்தை சரியான முறையில் கையாள வேண்டிய மற்ற உபகரணங்களையும் தயாரிக்க வேண்டியது இருக்கிறது. இப்படியாகத்தான் ராக்கெட் இன்ஜினில் பொருத்தப்படும் நாசிலில் மிக முக்கியமான பாகமாக பார்க்கப்படுகிறது.
ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இன்ஜினில் பொருத்தப்பட்டுள்ள நாசில்கள் கனமான மெட்டலை கொண்டு தான் உருவாக்கப்பட்டது. அப்பொழுதுதான் அதிகமான வெப்பத்தையும் அதே நேரம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அங்குள்ள தட்பவெப்ப நிலையும் தாங்கும் நிலையில் இருக்கும். அதிக கனம் மற்றும் மெட்டல் பாகமாக இது இருந்ததால் இதன் எடை அதிகமாக இருந்தது. இதன் எடை அதிகமாக இருந்ததால் குறைந்த எடை கொண்ட பேலோடு தான் எடுத்துச் செல்ல முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து இரண்டு கார்பன் மூலக்கூறுகளை இணைத்து அதன் மூலம் இந்த நாசிலை உருவாக்கியுள்ளார்கள். இந்த மெட்டீரியல் எடை குறைவாக இருக்கும். அதே நேரம் அதிக வெப்பம் மற்றும் அனைத்து விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாங்கும் வகையில் உறுதியாக இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இதை வெற்றிகரமாக சோதனையும் செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனையில் கார்பன் நாசில்கள் சோதனை செய்யப்பட்டு அதிகமான வெப்பத்தை தாங்குகிறதா என சோதனை செய்யப்பட்டது. முதல் சோதனையில் தொடர்ந்து 60 நொடிகள் அதிக உயரத்தில் இது செயல்படுமா என சோதனை செய்யப்பட்டது. இது வெற்றி பெற்ற பின்பு, 200 நொடிகள் அதிக வெப்பத்தை தாங்குமா எனவும் சோதனை செய்யப்பட்டது.
இந்த இரண்டு சோதனைகளிலும் இஸ்ரோ தயாரித்து உள்ள இந்த கார்பன் நாசில் உதிரி பாகம் பாஸ் ஆகியுள்ள நிலையில் விரைவில் இதை பிஎஸ்எல்வி ராக்கெட்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நான்காவது ஸ்டேஜ் இன்ஜினில் தற்போது உள்ள நாசில் என்பது கொலம்பியம் அலாய் என்ற மெட்டலை கொண்டு உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.
அதை நீக்கிவிட்டு இந்த கார்பன் மூலம் தயாரிக்கப்பட்ட நாசிலை பயன்படுத்தினால் நான்காவது ஸ்டேஜின் எடை 67% வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அது சுமந்து செல்லும் பேலோடின் எடை 15 கிலோ வரை அதிகப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருங்காலங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செல்லும் போது இந்த நாசில்கள் தான் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ராக்கெட் இன்ஜினில் நாசில்கள் மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. இதன் எடை குறைந்தாலே ராக்கெட்டின் பெரும்பான்மையான எடை குறைய வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் கார்பன் மூலக்கூறுகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நாசில் பயன்பாடு வெற்றி பெற்று விட்டால் எதிர்காலத்தில் உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைக்கும் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.