புதுடில்லி, ஏப்.25 இமாச்சல பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன் றில் புவியியல் துறையின் துணை பேராசிரியராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கோரிக்கை மனு மீதான விசாரணை 22.4.2024 அன்று நடைபெற்றது.
சம்மந்தப்பட்ட பெண்ணின் மகன் தீரா பரம்பரை நோயால் பாதிக்கப்பட்டவர். பிறந்தது முதல் அந்த சிறுவனுக்கு பலவிதமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள் ளப்பட்டிருக்கிறது. இதனால் மகனை பராமரிக்க அரசு பணி புரிபவர்களுக்கு வழக்கமாக அனு மதிக்கப்பட்ட அத்தனை விடுப்பு களையும் அந்த பெண் ஏற்கெனவே எடுத்துவிட்டார். மேற்கொண்டு விடுப்பு கோரியபோது அதனை கல்வி நிறுவனம் வழங்கிட மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி பர்திவாலா அடங்கிய அமர்வு கூறியதாவது: பணிச்சந்தையில் பெண்களின் பங்கேற்பு என்பது ஏதோ அவர்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல, அது அவர்களது உரிமை.இதனை மாநில அரசு ஒரு போதும் மறக்கலாகாது. பணிச் சந்தையில் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதுஅரசமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.
இதில் குழந்தை பராமரிப்புக்காக அவர்களுக்கு அளிக்கப்படும் விடுப்பும் அடங்கும். ஒருவேளை இத்தகைய பணிபுரியும் பெண் களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு மறுக்கப்படுமேயானால் அவர்கள் பணியை விட்டு விலகும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதன்பொருட்டு ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அய்ஸ்வர்யா பாட்டி, இமாச்சலப் பிரதேசத்தின் தலைமை செயலா ளர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சமூக நலத்துறை ஆகியவற்றின் செய லாளர்கள் அடங்கிய குழு இது தொடர்பாக வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண் டும். மாற்றுத் திறனாளி குழந்தை களை பராமரிக்கும் பெண் ஊழி யர்களுக்கு ஏற்றாற்போல் மாநில அரசு கொள்கை வகுக்கும்படி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.