ராஷ்ட்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி ‘‘பிரண்ட்லைன்” இதழுக்கு அளித்த பேட்டி
பாட்னா, ஏப்.24 ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசின் எதிர்க் கட்சிகளின் மீதான தாக்குதல்கள் அரசியல் நோக்கம் கொண்டவை; எதிர்க்கட்சிகள் மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளோம் என்றார் ராஷ்ட்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி.
பீகாரில் இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங் கும் ராஷ்ட்டிரிய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி “பிரண்ட்லைன்” இதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:
பீகாரில் பாஜக கூட்டணி பல்வேறு ஜாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட கூட்டணியாக உள்ளது. ஆதிக்க ஜாதிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் ஆகிய பிரிவினரைக் கொண்ட கூட்டணியை, தங்களின் முஸ்லிம்கள் – யாதவர்கள் ஃபார்முலா மூலமாக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
முதலாவதாக, சமுதாய உறவுகள் மாறாதது அல்ல. அது ஒரு காலத்தோடு உறைந்து, இறுகிப் போய்விடுவது கிடையாது. அது மிகவும் ஆற்றல் மிக்கதாகும். இரண் டாவதாக, ஜாதிய அடையாளங்கள் அரசியலில் முதலும் முடிவும் ஆனதல்ல. மூன்றாவதாக, நீங்கள் சொல்லுகிற அந்த கூட்டணியின் தலைவர்கள் சொல்லுவதே இறுதி யானதல்ல; அவர்கள் சொல்லுவது போல வாக்காளர்கள் வாக்களிக்கப் போவதில்லை. கடந்த நூற்றாண்டின் சமூகக் கட்டமைப்புகளை உடைப்பதும், சமூகத்தில் நடைபெறும் மாற்றங்களை கவனத்தில் கொள்வதும் முக்கியமானதாகும். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கொள்கைகளுக்கு மக்களிடம் பேராதரவு உள்ளது. அதைக் குறைத்து மதிப்பிடுபவர்களின் கணக்கீடுகளை நான் பொருட்படுத்த விரும்பவில்லை.
பீகார் மாநில ஆட்சியின் முகமாக நிதீஷ் குமாரும், ஒன்றிய அரசின் முகமாக மோடியும் இருக்கும்போது மக்கள் ஏன் தேஜஸ்விக்கு வாக்களிக்க வேண்டும்?
மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தான் பெரிய கட்சி. அரசியல் உறுதி இருந்ததால், பீகார் மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை ஏற்கெனவே நிரூபித்துள்ளது ஆர்ஜேடி. – மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் முகங்களாக நீங்கள் சொல்பவர்கள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கு வதிலும் ஆர்வமும், அக்கறையும் காட்டவில்லை. ஒரு இன்ஜின் பழுதானால் அல்லது ஒரு இன்ஜின் போதுமானதாக இல்லாவிட்டால் மட்டுமே இரட்டை இன்ஜின் தேவைப்படும்.
உங்களின் பேரணிகளில் ஏராளமான மக்கள் கூடுகின்றனர். ஆனால், அவை எல்லாமே உங்களுக்கு வாக்குகளாக மாறுமா? கடந்த காலத்தில் நடை பெற்றத் தேர்தல்களை விட தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தல் எந்த விதத்தில் மாறுபட்டது?
பீகார் தேர்தல் பிரச்சாரத்தைக் கவனிக்கும் எவரும் ஆர்ஜேடி கட்சிக்குப் பெருகிவரும் மக்கள் ஆதரவைப் பார்க்க முடியும். தங்களின் குரல் காது கொடுத்து கேட்கப் படாத போது, மக்கள் வீதிகளில் அணி திரள்கின்றனர். நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். வாக்காளர்களிடம் உள்ள தொடர்பை வலுப்படுத்தி உள்ளோம். இந்தத் தேர்தலில், நாகரிக அரசியலையும், சிறப்பான ஆட்சி நிர்வாகத்தையும் மீட்டெடுப்பதே எமது நோக்கமாகும்.
பீகாரின் பிரச்சினைகள் என்ன? ஏன் மோடியின் மேஜிக் வேலை செய்யாது என்று சொல்கிறீர்கள்? இந்து- முஸ்லிம் பிரச்சினையில் பீகார் எந்த அளவுக்கு பிளவு பட்டுள்ளது?
பிரதமர் மோடி மந்திரவாதியா என்பது பற்றி எனக்குத் தெரியாது. உண்மையான பிரச்சினைகளில் இருந்து, கவனத்தை திருப்பும் பாஜகவின் திசை திருப்பல் தந்திரங்களை மக்கள் புரிந்து கொள்ள ஆரம் பித்துவிட்டனர். பீகாரில் இந்து – முஸ்லிம் பிரிவினைகள் இல்லை.
ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புவேன் என்கிறார் மோடி. எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது ஊழல் வழக்குகள் இருக்கின்றன. அவர்களில் பலரும் நீதிமன்றங்களில் பிணையம் பெற்று வெளியில் உள்ளனர் எனும் போது இவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
எங்கே மோடி பத்திரிகையாளரின் கூட்டத்தை நடத் தட்டும் பார்ப்போம். பத்திரிகையாளர்கள் ஊழலைப் பற்றி சில கேள்விகளைக் கேளுங்கள். ஊருக்குத்தான் உபதேசம், அவரின் சொல் வேறு, செயல்கள் வேறு என்பதை அறிந்து கொள்வீர்கள். எதிர்க்கட்சிகளின் மீதான தாக்குதல்கள் அரசியல் நோக்கம் கொண்டவை. அரசமைப்புச் சட்டரீதியான சுயாட்சி அதிகாரம் மிக்க நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. இவை யெல்லாம் இருந்த போதிலும் உண்மை வென்றே தீரும். அரசமைப்பு நிறுவனங்கள்மூலம் எதிர்க்கட்சிகளை கண்காணித்தல், மிரட்டுதல் அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றுக்கு சுயேச்சையான அதி காரம் கொண்ட நிறுவனங்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளன. ஆனால் பலன் ஒன்றுமில்லை.
ஆர்ஜேடி -காங்கிரஸ்- இடது கூட்டணி பீகாரில் எதை பிரதிநிதித்துவப்படுத்து கிறது? பீகார் அரசியலில் ஜாதி ஆதிக்க த்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறுவது பற்றி…
மக்கள் எங்களுக்கு அளிக்கும் அமோக ஆதரவு, மக்கள் எங்களை நம்புவதைக் காட்டுகிறது. எமது கட்சி எப்போதும் சமூகநீதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. ஆர்ஜேடி எந்த சமூகத்தையும் விலக்கி வைப்பது கிடையாது. சமூகநீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை ஆதரிப்பவர்கள் அதன்மீது அக்கறை கொண்டவர்கள் எங்கள் கட்சியின் அடிப்படைக் கொள் கைகளை நிச்சயமாக புரிந்து கொள்வார்கள்.
நீங்கள் நிதீஷ்குமாருடன் பலமுறை கூட்டணி சேர்ந்து இருக்கிறீர்கள். பின்னர், அவர் உங்களைக் கைவிடுகிறார் இப்போது, மகா கூட்டணியை விட்டு நிதீஷ்குமார் விலகிச் சென்றதற்கு என்ன காரணம்?
எங்களை விட்டு ஏன் விலகிச் சென்றார் என்பதற்கு நிதீஷ்குமார்தான் சிறப்பாக பதில் அளிக்க முடியும். சமீப காலத்தில் நடந்தவைகளில் இருந்து, கட்சிகளை உடைப்பதில் யார் வல்லவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
2024 நாடாளுமன்ற தேர்தலின் முக்கி யத்துவமாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? (பாஜகவுக்கு) ‘மாற்று இல்லை’ எனும் காரணி பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறதா?
அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாப்பதற் கும், பலப்படுத்துவதற்குமான தேர்தலாகும் இந்த நாடாளுமன்றத் தேர்தல். மக்களுக்குப் பதில் அளிக்கும் கடமை கொண்ட ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதற் கான தேர்தலாகும் இது. ஆட்சி நிர்வாகத்தில் தேர்தல் நன்கொடையாளர்களின் குரலை அல்ல, மக்களின் குரலை செவிமடுத்துக் கேட்பதற்கான ஆட்சி மீட் டெடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு விடயத்திற்காகவும் தாங்கள் ஒடுக்கப்படுவது இல்லை எனும் சுதந்திரமான உணர்வை மீட்டெடுப்பதற்கான தேர்தலாகும் இது. பத்திரிகை சுதந்திரத்திற்கான தேர்தல் இது.
உலகளாவிய குறியீட்டில் இந்திய பத்திரிகை சுதந்திரத்தின் நிலை எங்கு நிற்கிறது என்பது உங்களுக் கெல்லாம் தெரியும். இவை யாவற்றிற்குமான தேர்தல்தான் நடப்பு நாடாளுமன்றத் தேர்தல். ஏராளமான அரசியல் மாற்றுகள் நாட்டில் உள்ளன. எதிர்க்கட்சிகள் மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளன. நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உள்ள தேசத்தில் ஒரே ஒரு திறமையான தனிநபர் தான் இருக்கிறார் என்று அரசியல் ஆய்வாளர்கள், பார்வையாளர்கள் கருதினால் அது அவர்களின் சிந்தனை வறுமையைத்தான் காட்டுகிறது.
நன்றி:
‘தீக்கதிர்’, 24.4.2024