தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் மதம் தொடர்பான பிரச்சினைகள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில் தமிழ்நாடு தேர்தல் முடிந்ததும் வடஇந்தியாவில் மத ரீதியான விடயங்களை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (19.4.2024) நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் திருவிழா பிரமாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (19.4.2024) மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
மொத்தமுள்ள 534 மக்களவைத் தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.
தமிழ்நாடு (39), அருணாச்சலப் பிரதேசம் (2 மக்களவை தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்தியப் பிரதேசம் (6), மகாராட்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என வாக்குப்பதிவு நடந்தது.
இதற்காக நடந்த பிரச்சாரம் பெரும்பாலும் பின்வரும் விடயங்களை மய்யப்படுத்தி இருந்தது.
உள்ளூர் பிரச்சினை, முதலீடுகள், ஜிஎஸ்டி, கச்சத்தீவு, டோல் கேட், நீட், ரயில்வே பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று ஆக்கபூர்வமான விடயங்களை மய்யப்படுத்தியே பிரச்சாரம் நடந்தது. தமிழ்நாட்டில் மத ரீதியாக பிரச்சாரம் நடக்கவில்லை.
பல முறை தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி எங்கும் மதம் பற்றி பேசவே இல்லை. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் மதம் தொடர்பான பிரச்சினைகள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில் தமிழ்நாடு தேர்தல் முடிந்ததும் வடஇந்தியாவில் மத ரீதியான விடயங்களை பாஜக கையில் எடுத்துள்ளது.
எடுத்துக்காட்டாக இரண்டாம் கட்ட தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. ராஜஸ்தானிலும் தேர்தல் நடக்க உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கிருந்து மொத்தம் 25 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாவார்கள்.
இதனால் அங்கு தீவிரமான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் வேகமாகப் பரவியது. அதில்,
“நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் பறி போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்குக் கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. “அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு” என்று சொன்னார்கள்.
இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர் களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தவற்றை எல்லாம் ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக்கூட விட்டுவைக்காது”, என்று பிரதமர் மோடி வெறுப்பு உமிழும் வகையில் பேசி இருக்கிறார்.
பாஜக கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய அளவிலான வளர்ச்சி பற்றி பேசாமல் மதம் பற்றி பேசுவானேன்?
அதேபோல் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் காட்சிப் பதிவு ஒன்று முக்கிய இடம் பெற்றது. அதில் அய்தராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா அங்கிருந்த மசூதியை நோக்கி அம்பு விடுவதைப் போலச் சைகை காட்டினார். இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. பலரும் அவரது செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றுகூட குரல்கள் எழுந்தன.
இதற்கிடையே லதா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 295கி (மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பேகம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், “வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் லதா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவர் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில், கருத்து தெரிவித்து வருகிறார். (‘Daily Hunt’ – 23.4.2024)
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் வந்தார். வேறு சில ஒன்றிய அமைச்சர்களும் வந்தனர்.
தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்திற்கு வந்த போது ராமனைப் பற்றியோ, ராமர் கோயில் பற்றியோ மூச்சு விடவில்லை.
1971இல் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் ராமனைக் கையில் எடுத்தவர்கள் என்ன கெதிக்கு ஆளானார்கள் என்பது உலகம் அறிந்ததே.
வட மாநிலங்களில் பழைமை வாதங்களும், ராமன் பற்றிய பக்தி மயக்கமும் பெருக்கெடுத்து ஓடுவதால், அவற்றைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.
தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் எத்தகைய சிந்தனைப் புரட்சியைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் நீங்கள் கால் பதிக்க முடியாது என்று இளந்தலைவர் ராகுல் காந்தி, மோடியைப் பார்த்து கூறியதையும் இந்த இடத்தில் இணைத்துப் பாருங்கள் – காரணம் பளிச் சென்று புரியும்.