இசைத்தட்டு வெளியிடும் நிறுவனம், (Eco Recording) இசை அமைப்பாளர் இளையராஜாவிற்கு அளிக்கும் காப்புரிமைத் தொகை தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே 2019 ஆம் ஆண்டில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பில் திரை இசை அமைப்பாளர் இளையராஜா இசை அமைத்து வெளி வந்த (1970இல் இருந்து 1990 வரை) திரைப்படங் களுக்கான உரிமைத் தொகையை அளிக்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.
இசைத்தட்டுகளை வெளியிடும் நிறுவனம் (Echo Recording) படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பணத்தை அளித்து உரிமையைத் தாங்கள் பெற்று விட்டதால் காப்புரிமைத் தொகையை இளைய ராஜாவிற்கு அளிக்கும் தீர்ப்பைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்கைத் தொடர்ந்துள்ளது.
மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயணன் இந்நிறுவனத்திற்காக வாதாடி வருகிறார். இளையராஜா சார்பில் வழக்குரைஞர் சதீஸ் பராசரன் வாதாடி வருகிறார். ஏப்ரல் 10 ஆம் நாள் நடைபெற்ற விசார ணையின்போது இளையராஜா அனைவருக்கும் மேலானவர். கடவுளுக்கு மட்டும் கீழானவர் என்று நீதிமன்றத்தில் சதீஷ் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 17 ஆம் நாள் விசாரணையில் மூத்த நீதிபதி மகாதேவன் இசை மூவர் என்று குறிப் பிடப்படுகின்ற, முத்துசாமி தீட்சிதர், தியாகராசர், சியாமா சாஸ்திரி ஆகியோர்தான் இசையில் எல்லோ ரையும் விட மேலானவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இளையராஜாவை இது போன்று சொல்லப் படுவதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் இசை உலகின் வரலாற்றில் 16ஆம் நூற்றாண்டில் பிறந்த முத்துத்தாண்டவர், 18 ஆம் நூற்றாண்டில் பிறந்த அருணாசலக் கவிராயர், மாரி முத்தாப்பிள்ளை ஆகிய மூவர்தான் தமிழ்இசையின் முன்னோடிகள் என்று தமிழறிஞர்களாலும், இசை ஆய்வாளர்களாலும் போற்றப்படுகிறார்கள்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இசைப் பேரறி ஞர்கள் தங்களின் தனித்த ஆளுமையால் உயரிய பங்களிப்பை இசை உலகிற்கு அளித்து வந்துள்ளனர். வருகின்றனர். மேலும் இந்த வழக்கு காப்புரிமைத் தொகை தொடர்பானதே ஒழிய யார் பெரியவர் யார் சிறியவர் என்பதைப் பற்றிய வழக்கும் அல்ல.
17-4-2024 அன்று நடந்த விசாரணையின்போது இசை நிறுவனத்தின் மூத்த வழக்குரைஞர் வராததால், அவரது சார்பில் வழக்குரைஞர் சரவணன் இந்த வழக்கில் மற்றொரு நாளில் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இந்த வழக்குச் சென்ற முறை நடைபெற்ற போது மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயணன் இடைக் காலத் தடை ஆணையை வலியுறுத்திய போது சதீஸ் பராசரன் இதற்குக் கடுமையான முறையில் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
அதற்கு வழக்குரைஞர் விஜய் நாராயணன் தன்னை எல்லோருக்கும் மேலானவர் என்று சதீஸ் பராசரன் நினைத்துக் கொள்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக சதீஸ் பராசரன், ஆம். நான் எல்லோரையும் விட மேலானவன். இது ஆணவமாகத் தெரியலாம். உறுதியாகக் கடவுளுக்கு மேலானவன் அல்ல. கடவுளுக்குக் கீழானவன் ஆனால் நான் எல்லோரையும் விட மேலானவன் என்று குறிப் பிட்டுள்ளார்.
இதில் வியப்பு என்னவென்றால் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகளும் வாதாடிய வழக்குரைஞர்களும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை நன்கு படித்து அறிந்தவர்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் 14ஆவது பிரிவில் வலியுறுத்துகிற சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Right to Equality) என்பது கோட்பாடாகும்.
ஆனால் வழக்குரைஞர் சதீஸ் பராசரன் முதலில் இளையராஜா மேலானவர் என்றார். தன்னைக் கடவுளுக்கு மட்டும் கீழானவன். எல்லோருக்கும் மேலானவன் என்கிறார். மனு நீதியில் தான் உயர்ந் தவன் தாழ்ந்தவன் என்று கருத்தியல் சுட்டப்படுகிறது. அரசமைப்புச் சட்டவிதிகளின் படி இயங்கும் உயர் நீதிமன்றத்தில் இது போன்ற கருத்துகளை முன் வைக்கலாமா?
நாட்டிற்கும் மக்களுக்கும் தேவை அரசமைப்புச் சட்டம் வழங்கிய நீதிதான்.
மனு நீதியன்று.