தீப்பந்தங்களை வீசிக்கொண்ட பக்தர்கள்
மங்களூரு,ஏப்.23- கருநாடகாவில் கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோயிலில் 21.4.2024 அன்று ஒருவருக் கொருவர் தீபந்தங்களை வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினராம்.
கருநாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள கட்டீல் சிறீதுர்கா பரமேஸ்வரி கோயிலில் வருடாந்திர திருவிழா நடந்தது. திருவிழாவின் இறுதி நாளன்று அதிகாலை அட்டூர் மற்றும் கொடத்தூர் ஆகிய இரு கிராமங் களைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திகடன் பெயரால் தீப்பந் தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டனராம். பக்தர்கள் வீசிக் கொள்ளும் தீப்பந்தம் மிகப்பெரிய போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதில் யார் பின் வாங்குகிறார்களோ அவர்கள் தோற்றதாக கருதிக் கொள்ளப்படுகிறதாம்….?
ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகளால் மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு
சென்னை,ஏப்.23- கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ 10 முதல் ரூ.250 வரை உயர்ந்து இருக்கிறது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்து வருகிறது.
மளிகை பொருட்கள்
ஒவ்வொரு இல்லத்தரசிகளின் மாதாந்திர ‘பட்ஜெட் டில்’ பெரிய இடத்தை பிடிப்பது மளிகைப்பொருட்கள்தான். மாதத்தின் தொடக்கத்தில் வீட்டுக்கு தேவையான மளிகைப்பொருட்களை பட்டியலிட்டு வாங்கி சேமித்து, அந்த மாதத்தின் தேவையை பூர்த்தி செய்வார்கள்.
அந்த வகையில் மளிகைப் பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் சத்தம் இல்லாமல் உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
அதேபோல் கடந்த மாதத்துடன் மளிகைப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்கும்போது பருப்பு, மசாலா, நறுமணம் உள்ளிட்ட பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ 10 முதல் ரூ.250வரை உயர்ந் துள்ளது.
விலை உயர்வு
அதன்படி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சுண்டல், பட்டாணி மற்றும் மசாலா வகைகளில் மஞ்சள்,மிளகாய்,மல்லித்தூள் விலை கடந்த மாதத்தை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து இருக்கிறது.
இது தவிர,மிளகு, கடுகு. சீரகம், சோம்பு, வெந்தயம், மிளகாய், மல்லி ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.50 வரை அதிகரித்து இருப்பதை காண முடிகிறது. ரூ.40-க்கு விற்கப்பட்ட சர்க்கரை, இந்த மாதம் ரூ.48-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல், நறுமணப் பொருட்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகிய வற்றின் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தைவிட பட்டை கிலோவுக்கு ரூ.60-ம், கிராம்பு ரூ.90-ம், ஏலக்காய் ரூ.250-ம் உயர்ந்து இருக்கிறது.
லிட்டருக்கு ரூ.30 வரை அதிகரிப்பு
இதேபோல், எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் வகைகள் லிட்டருக்கு ரூ.12 முதல் ரூ.30 வரை அதிகரித்து இருக்கிறது. ‘ரீபைண்டாயில்’ எண்ணெயும் உயர்ந் துள்ளது. நெய்யை பொறுத்தவரையில், லிட்டருக்கு ரூ.50 வரை கடந்த மாதத்தைவிட அதிகரித்திருக்கிறது.
இது மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கிடுகிடுவென உயர்த்து, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை ஆனது.
அதன் பின்னர் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை ரூ.100 வரை விற்பனை ஆன பூண்டு, நேற்று (22.4.2024) ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது
காரணம் என்ன?
மேற்சொன்ன பொருட்கள் சார்ந்த விளைச்சல் உற் பத்தி குறைவு வண்டி வாடகை, ஆட்கள் கூலி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மளிகை மற்றும் எண்ணெய் பொருட்கள் விலை உயர்த்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
வரக்கூடிய நாட்களிலும் லேசான விலை உயர்வு இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
மளிகைப்பொருட்களின் விலை நிலவரம்
மளிகை மற்றும் எண்ணெய் பொருட்களின் விலை நிலவரம்(ஒருகிலோ,ஒரு லிட்டர்)வருமாறு உளுத்தம் பருப்பு. ரூ.145, துவரம் பருப்பு ரூ.170, கடலைப் பருப்பு- ரூ.80, பொட்டுக்கடலை- ரூ.100, சுண்டல் ரூ.100 முதல் ரூ.145 வரை, பச்சைப் பட்டாணி- ரூ.100. கடுகு-ரூ.95, மிளகு-ரூ.540. சிரகம்-ரூ.330, சோம்பு-ரூ.170, வெந்தயம்- ரூ.90, சர்க்கரை- ரூ.48. மிளகாய்- ரூ.220. மல்லி-ரூ.125, பட்டை-ரூ.350. கிராம்பு – ரூ.990, ஏலக்காய்- ரூ.1,800, மஞ்சள் தூள்-ரூ.222, மிளகாய் தூள்-ரூ.310, மல்லித் தூள்-ரூ.205.
தேங்காய் எண்ணொய்-ரூ.150, நல்லெண்ணெய்- ரூ.270, பாமாயில்- ரூ.93, ரீபைண்டாயில் – ரூ.102 முதல் ரூ.112 வரை. நெய்- ரூ.730.
பக்தியால் விளைந்த கேடு
கோவில் திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் முதியவர் கொலை
திருவாரூர், ஏப்.23- திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள எண்ணக்குடி கிராமத்தில் சித்திரபட்டன் வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாத முழு நிலவு அன்று திருவிழா நடப்பது வழக்கமாம். இந்த ஆண்டு திருவிழா நடத்துவதற்கான ஊர் கூட்டம் 21.4.2024 அன்று கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகருக்கும் (வயது58), விஜயராகவனுக்கும்(31) இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த விஜயராகவன் தனது காலால் சந்திரசேகரை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
இதில் சந்திரசேகர் மயங்கி கீழே விழுந்தார்.உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, சந்திர சேகர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கொலை வழக்கு பதிந்து விஜயராக வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.