சபர்கந்தா, ஏப்.22 குஜராத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு ஜாடி’ மீது சத்தியம் செய்துள்ளனர். ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரை அவர்கள் முற்றுகையிட்டனர்.
சபர்கந்தா பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரமண்லால் ஓரா-வை ராஜ்புத் சமூகத்தினர் முற்றுகையிட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி யுள்ளது. பாஜக ஆட்சியில் ராஜ்புத் சமூகத்தினர் புறக்கணிக்கப் படுவதாகவும் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குஜராத் தவிர, ராஜஸ்தான், உ.பி. உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள ராஜ்புத் சமூகத்தினரும் பாஜக-வுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர்.அதேவேளையில், ராஜ்புத் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருவாரங்களுக்கு முன் ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா பேசியது அந்த சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு ஜாடி’ மீது சத்தியம் செய்தனர். ராஜ்புத் சமூகத்தினரின் இந்த சத்தியப் பிரமாணம் குஜராத் அரசியலில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் அம்மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினரை அவர்கள் முற்றுகையிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.