இன்று (15.9.2023) அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள்.
1935இல் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் வாலிபர் மாநாட்டில் தந்தை பெரியாரும் பங்கேற்றார், அண்ணாவும் பங்கேற்றார். அந்த மாநாட்டைத் தொடர்ந்து தந்தை பெரியாரின் சீடர் ஆனார் அண்ணா.
“கடைசி வரை நான் கண்ட – கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியாரே” என்று சொன்னவர் அண்ணா.
18 ஆண்டுகள் தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்த நிலையிலும், 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், வெற்றி பெற்ற நிலையில், தன்னோடு தேர்தல் கூட்டணியில் அங்கம் வகித்த ராஜகோபாலாச்சாரியாரைப் புறந்தள்ளி, திருச்சியில் இருந்த தந்தை பெரியாரைத் தேடிச் சென்று தன் நன்றி உணர்வையும், கொள்கை உணர்வையும் வெளிப்படுத்தியவர் அண்ணா.
தமிழ்நாடு சட்டப் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் திரு. முனு ஆதி அவர்கள் “தந்தை பெரியாருக்குத் தியாகி மான்யம் கொடுக்கப்படுமா?” என்று எழுப்பிய கேள்விக்கு “இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்று பிரகடனப்படுத்தியவர் முதல் அமைச்சர் அண்ணா!
தந்தை பெரியார் 1928இல் சுக்கிலநத்தம் என்ற ஊரில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணத்திற்கு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்ட வடிவம் கொடுத்தவர் அண்ணா.
சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவரும் அவரே! தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை; தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் என்ற நிலைப்பாட்டை சட்டமாக்கிக் கொடுத்தவரும் அந்தப் பெரு மகனாரே!
இந்தியா மதச் சார்பற்ற தன்மை உடையது; எனவே அரசு அலுவலகங்களில் எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இடம் பெறக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவரும் அவரே!
இன்றைக்கு அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு இந்த வரலாறு எல்லாம் புரியுமா?
அண்ணாவின் ‘ஆரிய மாயை’ என்ற நூலைப் படித்ததுண்டா? அண்ணாவின் ‘தீ பரவட்டும்’ என்பதைப் பற்றிக் கேள்விப் பட்டதுண்டா?
இன்றைக்குச் ஜனாதனத்துக்குச் சப்பைக் கட்டுக் கட்டும் அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்த பெரும் புள்ளிகளுக்கு “வர்ணா சிரமம்” என்ற நூல் அண்ணாவால் எழுதப்பட்டது என்பது தெரியுமா?
“புராண மதங்களில்” ஸனாதனத்தைப் புட்டுப் புட்டு வைத்திருக் கிறாரே – புரியுமா இந்த அ.இ.அ.தி.மு.க.வினருக்கு!
“விதைக்காது விளையும் கழனி” என்ற நூலைப் படித்ததுண்டா? ஆரியம்தான் விதைக்காது விளையும் கழனி என்று கழன்றார் அண்ணா.
“நாலு தலைச் சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள் ஆயிரம் கண்சாமி, காளை ஏறும் சாமி, காக்கைமீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடு நிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக் கொண்டு தொழ வேண்டுமே, இந்தச் செய்தியைக் கேட்டால் உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே!
இந்தக் கண்ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக் கொள்ள நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவே தான் நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்” என்று எழுதினாரே அறிஞர் அண்ணா (‘திராவிட நாடு’ 26.9.1943).
அந்த அண்ணாவைக் கட்சியின் பெயரிலும், அவரது உருவத்தைக் கொடியிலும் பொறித்திருக்க அண்ணா தி.மு.க.வுக்கு அருகதை உண்டா?
அண்ணாவின் கருத்துகளை, கொள்கைகளை, எழுத்துகளை ஒரு வரி படித்து உள் வாங்கி இருந்தால்கூட அண்ணா தி.மு.க.வினர் ஸனாதனத்துக்கு முட்டுக்கொடுப்பார்களா?
“சந்திரமோகன்” அல்லது “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகத்தை எழுதி, அதிலே காகப்பட்டராக நடித்துக் காட்டியவர் அறிஞர் அண்ணாவாயிற்றே! அதில் சிவாஜி பாகத்தை ஏற்று சிறப்பாக நடித்த வி.சி. கணேசனுக்கு சிவாஜிகணேசன் என்று பட்டம் கொடுத்தவர் தந்தை பெரியார் (15.12.1945 சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் நடந்த நாடகத்தின் போது) என்பது எல்லாம் அண்ணா தி.மு.க. தொண்டர்களை விட்டுத் தள்ளுங்கள் – தலைவர்களுக்குத் தெரியுமா?
ஆரியத்திற்கு அடி பணிந்து கஜானா காலியாகி நொந்த மனத்தோடு தன் கடைசி கால வாழ்வை முடித்துக் கொண்டான் சிவாஜி என்பதை வரலாற்று ரீதியாக, ஆதாரங்களோடு அக்கக்காக, ஆணி வேர் அறுபட ஆரியத்தைப் படம் பிடித்துக் காட்டினாரே அறிஞர் அண்ணா.
இதைப்பற்றி எல்லாம் தெரிந்த ஒரே ஒருவரைக் கூட அ.இ.அ.தி.மு.க.வில் காண முடியவில்லை என்பது எவ்வளவுக் கெட்ட வாய்ப்பு!
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பி.ஜே.பி.க்கு வால் பிடிக்கும் தன்மையிலிருந்து விடுபடாத வரை – அண்ணா பெயரை எந்த வகையிலும் பயன்படுத்த அண்ணா தி.மு.க.வுக்கு அருகதையும் இல்லை – உரிமையும் இல்லை.
மானமிகு உதயநிதி ஸ்டாலின் கூறிய – கூறிவரும் கருத்துகள் அய்யா, அண்ணா சொன்னவைதான் அதனைப் புரிந்து கொள்ளாமல் திராவிட இயக்கக் கொள்கைகளை வெறும் அரசியல் சுய இலாபத்துக்காக அடகு வைப்பது வெட்கக் கேடே!
அண்ணா பிறந்த நாளில் அண்ணா பேசியவற்றை, எழுதியவற்றை இளைஞர்கள் ஒருமுறை படித்துப் பார்ப்பது நல்லது.
அதுதான் அறிஞர் அண்ணாவுக்குக் காட்டும் உண்மையான மரியாதை!