புதுடில்லி,ஏப்.21- தன் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு தடை கோரி சாமியார் ராம்தேவ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புகார்தாரர்களையும் பிரதிவாதி களாக இணைக்கும்படி அவருக்கு 19.4.2024 அன்று உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
கரோனா பெருந்தொற்றின் போது, ‘கரோனில்’ என்ற ஆயுர்வேத மருந்தை விற்பனை செய்தார். ‘கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேதம் தான் சிறந்தது. அலோபதி மருத்துவ முறை ஏமாற்று வேலை’ என, கருத்து தெரிவித்தார்.
அலோபதி மருத்துவத்தை தரம் தாழ்த்தி விளம்பரங்கள் வெளியிட்டார். மருத்துவர்கள் ராம்தேவுக்கு எதிராக திரும்பினர்.
பீகாரின் பாட்னா மற்றும் சத்தீஸ்கரின் ராய்பூர் பிரிவு களைச் சேர்ந்த இந்திய மருத்துவ சங்கத்தினர், ராம்தேவுக்கு எதிராக 2021இல் பல்வேறு புகார்களை அளித்தனர். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராம்தேவ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்த உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் தன் மீதான குற்றவியல் நடவடிக் கைக்கு தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ராம்தேவ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று முன்தினம் (19.4.2024) விசாரணைக்கு வந்தபோது, ராம்தேவ் மீது புகார் தெரிவித்தவர்களையும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக இணைக்கும்படி நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.
கோடை விடுமுறைக்கு பின், மே 20ஆம் தேதிக்கு மேல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.