மதுரையில் நடந்தது என்ன?
‘‘விதவைப் பெண்” அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கலாம்; ஆனால், மீனாட்சிக் கோவில் செங்கோலை மட்டும் பெறக் கூடாதா?
என்னே விசித்திர வித்தைகள்!
உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கக் கூடிய ருக்மணி பழனிவேல்ராஜன் கணவரை இழந்த விதவை என்று கூறி, அவரிடம் மீனாட்சி யம்மன் கோவில் செங்கோலைக் கொடுக்கக் கூடாது – அது ஆகமத்துக்கு விரோதம் என்று கூறி, மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த வரின் மனுவைத் தள்ளுபடி செய்து, இந்தக் காலத்திலும் இதுபோன்ற வழக்கா என்று வினா எழுப்பி, விதவைப் பெண்கள் கோவிலுக்குப் போகலாம்; ஆனால், கோவில் செங்கோலை வாங்கக் கூடாதா என்ற அறிவார்ந்த தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
ஹிந்து மதத்தை அவமதிக்கிறார்கள் – ஸநாதனத்தை அவதூறாகப் பேசுகிறார்கள் என்று சல்லடைக் கட்டி ஆடும் ஆசாமிகள் இருக்கும் நிலையில், மதுரையில் இப்பொழுது நடந்திருக்கும் நிகழ்வு எதனைக் காட்டுகிறது?
மதுரையில் நடந்தது என்ன?
21 ஆம் நூற்றாண்டிலும் ஆகமம், அய்திகம் என்று சொல்லி, அக்னியில் குதித்ததுபோல் அலறுகிறார்களே, இதன் பின்னணி என்ன?
‘‘மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண விழா- அழகர் ஆற்றில் இறங்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் 8 ஆவது நாள் விழாவில் பட்டாபிஷேகம் நடைபெறும் அன்று செங்கோல் வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.
மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். ‘‘பட்டா பிஷேக நாளன்று செங்கோல், மீனாட்சியம்மன் கைகளில் ஒப்படைக்கப்படும்; அந்த செங்கோலை அறங்காவலர் குழுத் தலைவர் பெற்றுக் கொள்வார்; ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலைப் பெற்றுக் கொள்ள இயலாது; மீனாட்சியம்மன் கோவிலில் அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல்ராஜன்; அவர் கணவரை இழந்தவர்; அவரிடம் செங்கோலை வழங்கக் கூடாது; வேறு தகுதியான நபரிடம் செங்கோலை வழங்கவேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதேபோன்ற மனு தாக்கல் செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்துள்ளது என்பது அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன், ‘‘விதவை செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதியில் எங்கு உள்ளது?” என்று கேள்வி எழுப்பி, மனுதாரரைக் கண்டனம் செய்துள்ளார். மேலும், ‘‘கோவிலுக்குள் ஹிந்துக்கள் அனைவரும்தானே செல்கிறார்கள். செங்கோல் வாங்குபவரும் ஹிந்துதானே. இந்தக் காலத்திலும் இதேபோல கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல” என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.
மனிதனை மனிதனாகப் பார்க்காமல் பாகுபடுத்தி – இழிவு படுத்தும் மதம் அறிவு வளர்ச்சிக்கும், மனித சமத்துவத்திற்கும் கேடானது என்று கூறினால், கிணற்றுத் தவளைபோல இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கத்துகிறாரகளே!
நீதிபதியின் சவுக்கடி போன்ற தீர்ப்பு!
‘‘விதவை செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதியில் எங்குள்ளது?” என்று நீதிபதி மனுதாரரைக் கண்டித் துள்ளார். கோவிலுக்குள் ஹிந்துக்கள் அனைவரும்தானே செல்கிறார்கள். செங்கோல் வாங்குபவரும் ஹிந்துதானே; இந்தக் காலத்தில் இதேபோல கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல!” என்று சவுக்கடி போன்ற தீர்ப்பை நீதிபதி கூறியுள்ளார்.
இதே கருத்தைப் பகுத்தறிவுவாதிகள் கூறினால்…
இதே கருத்தை பகுத்தறிவுவாதிகள் சொன்னால், அதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் கும்பல் – உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்தக் கருத்துக்கு என்ன பதில் சொல்வார்கள்?
இவ்வளவுக்கும் செங்கோலைப் பெற்றுக்கொண்ட பெண் மணி கணவரை இழந்தவராக இருந்தாலும், அவர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் என்பது முக்கியமானது, கவனிக்கத்தக்கது.
ஆகமம் பேசுவோரே, மீனாட்சியம்மன் கோவிலில் மின் விளக்கு, ஏ.சி. ஆகமப்படி ஏற்புடையதுதானா?
ஏனிந்த இரட்டை அளவுகோல்?
ஆன்மிக ஹிந்துத்துவாவாதிகளின் கூற்றுப்படி கணவரை இழந்தவர், கோவில் அறங்காவலர் குழுவின் தலைவராக (பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் துணைவியார் ருக்மணி அம்மாள்) இருக்கலாம்; செங்கோலை மட்டும் வாங்கத் தகுதியற்றவரா?
இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால், மீனாட்சியம் மன் அறங்காவலர் குழுத் தலைவரிடம்தான் அந்தச் செங் கோலைக் கொடுக்கவேண்டும் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்த அடிப்படையில் அறங்காவலர் குழுத் தலைவரான பெண்மணியிடம் கொடுக்கும்போது – ஆகமத் திற்கு விரோதம் என்பது எத்தகைய விசித்திரம் கலந்த முரண்பாடு! விஷமத்தனம்!
ஒரு காலகட்டத்தில் இருந்த ஹிந்து சட்டம்!
ஹிந்து சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப் பட்ட ஒரு காலகட்டம் இருந்தது; அவற்றையெல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, சுதந்திர இந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் புதிய அரசமைப்புச் சட்டம்தான் நடைமுறையில் இருக்கிறது என்பதைக்கூட அறியாத அறியாமைத் ‘திலகங்களுக்குப்’ பெயர்தான் ஆன்மிக வாதிகளா?
மொட்டைப் பாப்பாத்தி இந்தக் காலத்தில் உண்டா?
சாஸ்திரங்களில் உள்ளபடிதான் அக்கிரகாரத்தில் விதவை யாக இருக்கக் கூடிய பெண்களை பழைய முறைப்படி மொட்டைப்பாப்பாத்திகளாக, மொட்டையடித்து, வெள்ளைப் புடவையை உடுத்தச் செய்து, மூலையில் ஒதுக்கி வைக்கிறார்களா?
உடன்கட்டை ஏறும் சதி எங்கே ஒளிந்தது?
கணவன் இறந்தால் மனைவியை உடன்கட்டை ஏற வைத்த வைதிகம் எங்கே போய் ஒளிந்து – ஒழிந்தது?
சங்கராச்சாரியார் சொன்னதை
சோதித்துப் பார்க்கலாமா?
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ‘‘கணவன் இறந்தவுடன், அவன் மனைவியின் கற்பு சக்தியால், தீயில் எரித்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாது” என் கிறாரே! (‘தெய்வத்தின் குரல்’ 2 ஆம் பகுதி ‘உடன்கட்டை ஏறுதல்’ என்ற தலைப்பில் பக்கம் 967, 968-இல் குறிப்பிட்டுள் ளாரே!)
இதைப் பரிசீலித்து பரீட்சார்த்தமாகப் பார்க்க, எந்த ஆன்மிக – அக்ரகாரவாசிகளாவது தயார்தானா? (சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்பது வேறு விஷயம்).
குடியரசுத் தலைவர் விதவையாக இருந்தாலும்…
பக்தி வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும் பெண்கள் ஒன்றைத் தெளிவாக இந்த இடத்தில், உறுதியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
குடியரசுத் தலைவராக இருந்தாலும், கோவில் அறங்காவலர் தலைவராக இருந்தாலும், அவர்கள் கணவரை இழந்த பெண்களாக இருந்தால், அவமதிப்பது எந்த மதம்? எந்த சாஸ்திரம்? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
பக்தியின் பெயரால் சடங்குகளைக் கொண்டுவந்துத் திணித்து சுரண்டுபவர்களை அடையாளம் காணவேண்டும்.
பக்தியின் பெயரால் சுரண்டல் தொழில்!
‘‘தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் கடவுள்” என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் கல்லாலோ, அய்ம்பொன்னாலோ சிலைகளைச் செதுக்கி, அவற்றுக்குக் கடவுள் என்று பெயர் சூட்டி, அவை குடியிருக்க வீடு கட்டி – அதாவது கோவில் கட்டி, ஸ்தல புராணங்களை எழுதி, மக்களின் அறியாமையை மூலதன மாக்கி, சுரண்டும் கூட்டம் எது? ‘‘கோவில் சுரண்டல் தொழில் நடத்தும் இடம்” என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?
பக்தி ஒரு வர்த்தகம் – சொன்னவர் யார்?
‘‘மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால், கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டுவருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோவில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்துகொள்வதையும் ஒரு ஃபேஷனாக (Fashion) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது.”
– இவற்றைச் சொன்னவர் தந்தை பெரியாரல்ல – சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிதான்.
எங்கே சொன்னார்?
1976 ஆம் ஆண்டு மே மாதம் காஞ்சிபுரத்திலே நடைபெற்ற அகில இந்திய ஹிந்து மாநாட்டில்தான் சொன்னார்.
தாய்மார்களே
புரிந்துகொள்வீர்!
தாய்மார்களே, புரிந்துகொள்வீர், குறிப்பாகப் பக்தி போதையில் மூழ்கிக் கிடக்கும் நமது அருமைச் சகோதரிகள், முக்கியமாகப் பெண்கள் புரிந்துகொள்வார்களாக!
உங்களுக்கு (உயர்ஜாதிப் பெண்களுக்கும் சேர்த்தே) மனுதர்மம் வழங்கிய பெயர் ‘‘நமோ சூத்திரர்கள்” – புரிந்து கொள்ளுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21-4-2024