புதுடில்லி, ஏப்.20- மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மோடி அரசின் தோல்விக்கு எதிராக அமைதி அலை வீசுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்தது.
காங்கிரஸ் பொதுச்செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யும் நிலையில் அவர் தனது மவுனத்தை கலைத்து கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிகமாக கரும்பு உற்பத்தி செய்யப்படும் மாநிலம், உத்தரப்பிரதேசம். இருப்பினும், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக்கோரிய விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜனதா அரசு நிராகரித்துள்ளது.
அங்கு குவிண்டாலுக்கு ரூ.360 வீதம் அளிக்கப்படுகிறது. பஞ்சாபில் ரூ.386 வீதமும், அரியானாவில் ரூ.391 வீதமும் அளிக்கப்படுவதை விட இது குறைவுதான். பண வீக்க உயர்வுக்கு ஏற்ப விலையை உயர்த்தவில்லை. இதனால், உரம், பூச்சிமருந்து விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறுகிறார்கள். மேலும், கரும்பு சாகுபடி பரப்பு கடந்த 3 ஆண்டுகளில் 4ஆயிரம் எக்டேர் குறைந்து விட்டது. கரும்பு பற்றாக்குறையால், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் கொடுக்க முடியாமல் கரும்பு ஆலைகள் தவிக்கின்றன.சில ஆலைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் நிலவுகிறது. ஆனால், பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பிரதமர் மோடி கடந்த 2014- ஆம் ஆண்டு கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை அறிவித்தார். அதற்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 815 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகம், கங்கை நீரின் தரத்தில் குறிப்பிடத்தக்கமுன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், சங்கத் மொச்சான் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், கங்கை நீரின் தரம் மேலும் மோசமடைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கங்கைநீர் தரமாக இல்லை என்று தெரிவித்துள்ளது. அப்படியானால், மக்களின் வரிப்பணம் ரூ.20 ஆயிரம் கோடியை செலவழித்து என்ன பயன்?
மோடி ஆட்சியின்கீழ். அரசு ஆள்தேர்வுக்கான 43 கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிந்துள்ளன.இதனால் சுமார் 2 கோடி விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச காவல்துறை தேர்வு வினாத்தாள் வெளியான தால், 60 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மோடி அரசின் மேற்கண்ட தோல்விகளுக்கு எதிராக மேற்கு உத்தரபிரதேசத்தில் அமைதி அலை வீசி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.