உண்மையில் நடந்தது என்ன?
அயோத்தி பால ராமன் நெற்றியில்
சூரிய ஒளியாம்- பக்தர்கள் பரவசமாம்!
லக்னோ, ஏப்.20 அயோத்தியில் நரேந்திர மோடி முன்னின்று பால ராமர் கோவில் கட்டி முடித்து, அவரே திறந்தும் வைத்துள்ளார்.
அதனை வைத்துத் தேர்தல் பிரச்சாரமும் செய்து வருகிறார். இந்த நேரத்தில் இன்னொரு அற்புதப் பிரச்சாரத்தை செய்து வருகின்றார். பால ராமர் கோவில் நெற்றியில் சூரிய ஒளி பாய்ந்து பக்தர்களைப் பரவசப்படுத்தி விட்டதாம்.
அதன் முழுத் தொகுப்பு இதோ!
தினமலர், 18.04.2024, செய்தி
அயோத்தி ஸ்ரீராமர் நெற்றியில்
சூரிய திலகம்; பக்தர்கள் பரவசம்
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.
அயோத்தியில் இன்று 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக துவங்கியது. அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வந்தனர். கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை தரிசனம் மற்றும் ஆரத்தி போன்றவற்றுக்கான அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும். மங்கள ஆரத்தியில் தொடங்கி இரவு 11 மணி வரை தரிசனத்தின் காலம் 19 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரசாதத்தின் போது அய்ந்து நிமிடங்களுக்கு மட்டுமே திரை மூடப்படும். சிறப்பு விருந்தினர்கள் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே தரிசனத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் கொண்டாட்டம் அயோத்தி நகரம் முழுவதும் சுமார் நூறு பெரிய LED திரைகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி, 18.04.2024, செய்தி!
பால ராமர் நெற்றியில் சூரிய திலகம்:
மோடி தரிசனம்!
பால ராமர் நெற்றியில் சூரிய திலகம் விழும் காட்சியை இணைய வழியில் காணும் பிரதமர்
அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் காட் சியை பிரதமர் நரேந்திர மோடி இணையவழியில் பார்வையிட்டார்.
ராம நவமி புதன்கிழமை நாடு முழுவதும் கோலா கலமாகக் கொண்டாடப்படும் நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் காட்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை கோடிக்காணக்கான மக்கள் பார்வையிட்டனர்.
இது குறித்து அஸாமில் தேர்தல் பிரசாரத்தில் உள்ள பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நல்பாரி பேரணிக்குப் பிறகு பால ராமரின் சூரிய திலகத்தை தரிசித்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போல. இது எனக்கு உணர்ச்சிமிக்க தருணம். அயோத்தியில் ராம நவமி வரலாற்று சிறப்புமிக்கது. இந்த சூரிய திலகம் நம் அனைவரின் வாழ்விலும் ஆற்றலை கொண்டு வரட்டும் மற்றும் தேசத்தைப் புகழின் உச்சிக்குக்கொண்டு செல்லட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஆனால், ‘இந்து தமிழ் திசை’ இந்தப் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டியதுதான், ஆச்சரியம்.
‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட செய்தி இதோ:
அயோத்தி பாலராமர் சிலைமீது
சூரிய ஒளி விழுவது எப்படி?
தொழில்நுட்பம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்
ஆண்டுதோறும் ராமநவமி தினத்தில் அயோத்தி ராமர் கோயில் பாலராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் வண்ணம் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அதிநவீன அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன் படுத்தி, 5.8 சென்டிமீட்டர் சூரிய ஒளிக்கற்றை பாலராமர் சிலையின் நெற்றியில் விழும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை அடைய, கோயிலில் ஒரு சிறப்பு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 விஞ்ஞானிகள் அடங்கிய குழு கோயிலில் பார்வையிட்டு அந்தக் கருவியை வடிவமைத்தனர்.
நேற்று பகல் 12.16 மணிக்கு இந்த சூரிய ஒளி விழும் நிகழ்வானது 3 முதல் மூன்றரை நிமிடங்கள் வரை நீடித்தது. சூரிய ஒளியானது சிலையின் நெற்றியில் சரியாக விழுகிறதா என்பதைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் குழு கோயிலில் குழுமியிருந்தனர்.
கண்ணாடிகள், லென்ஸ்களின் உதவியுடன் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சூரிய திலக் பொறியியல் முறை என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரூர்க்கியைச் சேர்ந்த மத்திய கட்டடவியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டை (சிபிஆர்அய்) சேர்ந்த விஞ்ஞானியும், இயக்குநருமான குமார் ராமசர்லா கூறியதாவது:
இந்தக் கருவி ஆப்டோ-மெக்கானிக்கல் வகையைச் சார்ந்தது. இந்த ஆப்டோ-மெக்கானிக்கல் அமைப்பானது 4 கண்ணாடிகள் மற்றும் நான்கு லென்ஸ்களைக் கொண்டது. திருப்பும் வகையிலும், சாய்வு முறையிலும் இந்த கருவி அமைந்துள்ளது.
மேலும் இந்தக் கண்ணாடிகள், லென்ஸ்கள் குழாய் அமைப்புகளுக்குள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கருவியானது கோயிலின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டு சூரிய ஒளியைப் பெற்று கண்ணாடி, லென்ஸ்கள் மூலம் கீழ்தளத்தின் கர்ப்பக்கிரகத்திலுள்ள பாலராமர் சிலையின் நெற்றியில் விழுமாறு திருப்பி அனுப்பப்படுகிறது.
மேல் தளத்தில் உள்ள கருவியின் மேல்பகுதியானது சூரிய ஒளியின் வெப்பம், அலையைத் தாங்கும் வண் ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து சிலையின் நெற்றியில் விழும்படி இந்தக் கருவி செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூர்க்கியின் சிபிஆர்அய், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் (அய்அய்ஏபி) ஆகிய அமைப்புகளின் விஞ்ஞானிகள் இணைந்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளனர். பெங்களூரு அய்அய்ஏபி விஞ்ஞானிகள், இதற்காக சிறப்பு கியர் பெட்டியை உருவாக்கி கண்ணாடி, லென்ஸ்கள் சுழல்வதற்காகவும், சாய்வதற்காகவும் வழி முறையைக் கண்டறிந்துள்ளனர்.