கோயில் பிரசாதம் பக்தரை கொன்றது
75 பேருக்கு உடல் நலம் பாதிப்பு
மும்பை,ஏப்.19- மராட்டிய மாநிலத்தில் திராப்பூரில் உள்ள மஜ்ரி கோலிரி பகுதியில் உள்ள காளி கோவிலில் சைத்ரா நவராத்திரி திருவிழா 14.4.2024 அன்று நடை பெற்றது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு மாலையில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாப்பிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பிரசாத உணவை சாப்பிட்ட பக்தர் களுக்கு இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. பலர் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சினைகளால் அவதிப் பட்டனர். இதையடுத்து அவர்கள் இரவோடு, இரவாக அருகில் உள்ள வரோரா மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 75பேருக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதில் 6 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக சந்திராப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குருபம் யாதவ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றவர்க ளின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.