புகழ்ச் சரித்திரம் – முத்தமிழ் அறிஞர் கலைஞர்

2 Min Read

ஞாயிறு மலர்

பூமியிலே நம்மை வாழவைத்து வளரவைத்த

சாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் – ராம

சாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம் பெரியார்

ராமசாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம்.

கவியரங்கம் பாடவந்த – காணவந்த – பெருமக்காள்!

திருவரங்கப்பெருமாள் போல் படுத்திருந்த தமிழ் உணர்வை

திசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச்செய்து

தீரமிகு பணிகள் பல ஆற்றியவர் பெரியார் அன்றோ?

தெருவரங்கம், கலையரங்கம், இசையரங்கம், திரையரங்கம்

எல்லாமே “அம்மாமி அத்திம்பேர்’

ஜலதரங்கம்! அதுமாற்றித்

தமிழ் அரங்கம், தனி அரங்கம், கண்டவர்க்குக்

கவியரங்கம் பாடுவது பொருத்தமன்றோ!

அதனால்தான் அவரை –

பயிர் போன்றார் உழவருக்கு! பால்போன்றார்

குழந்தைகட்கு! பசும்பால் கட்டித்

தயிர்போன்றார் பசித்தவர்க்கு! தாய்போன்றார்

ஏழையர்க்கு! தகுந்தவர்க்கு!

செயிர் தீர்ந்த தவம்போன்றோர் – செந்தமிழ்

நாட்டில் பிறந்த மக்கட்கெல்லாம்

உயிர் போன்றார்” என்று பாரதிதாசப் பாவேந்தன் பாடிச் சென்றான்.

வீடுகட்டி அதற்குள்ளே வைக்கோலைத் திணிப்பதுவோ? 

வீடுகட்டாமலே வைக்கோற்போர் போடலாமே –

எனச் சொன்ன ஈ.வெ.ரா. நாத்திகரா?

இல்லை, இல்லை; அவர்,

“இயற்கையின் புதல்வர் – இந்த மண்ணை மணந்த மணாளர்

எதிர்காலத் தமிழகத்துப் பெருமைக்குத் தூதர் ” என்று

அக்ரகாரத்து அதிசய மா மனிதர் வ.ரா. என்பார்

அழகாக வரைந்ததொரு கட்டுரைதான் மறைந்துபோமோ? தனித்ததோர்

தங்கத்தின் உருக்கில் வந்த தனித்ததோர் ஒளியைப் போல

செங்கதிர் உதயமாகும் செவ்வானம் வெட்கியோட

பொங்கியே எழுந்தார் பெரியார், புதுமைக் காளைகள் கோடி 

உறுதியாய்க் கூறிநின்றார், குருதிதான் பணயமென்று

அங்கத்தில் பழுதென்றால் அறுத்தெறிய ஒப்புகிறோம் உயிர்பிழைக்க!

பங்கமுறு ஜாதிமத பேதங்களால் அல்லலுறும் – மனித

சங்கத்தின் நோய் களையத் திகைக்கின்றோம் சரிதானா? எனக்கேட்டார்.

அந்தச் சிங்கத்தின் குரல்கேட்டுச் சிறுநரிகள் ஊளையிட்ட

கதைதானே நடந்ததிங்கே!

வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு –

பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை – உண்டு.

செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு – வெண்

சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு – அதில்

சாகும்வரை ஒளி உண்டு!

பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் – இவரோ

படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *