13.04.2024 அன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி ஆண்டிமடத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார்.
அப்போது, ”தொடர்ந்து பேசி வருகிறேன். ஆதலால் தொண்டை சரியில்லாமல் போய் விட்டது. அனைவரும் ஓய்வெடுத்துக் கொள்ள பரிந்துரைத்தனர். ஆனாலும் நான் சும்மா இருக்கப் போவதில்லை. காரணம் 95 வயது வரை மூத்திரச் சட்டியை தூக்கிக் கொண்டு நம் சூத்திரப் பட்டம் ஒழிய பாடுபட்டாரே பெரியார், அவரின் தொண்டன் நான்! தொண்டையா? தொண்டா? ஒரு கை பார்த்துவிடுவோம்!” என்று தனது தொண்டையிடமே சவால் விட்டுக் கொண்டார். மக்கள் வியந்து போய் பலமாக கைதட்டினர்.
அப்போதும் கூட அவர், “ஜனநாயகமா? எதேச்சதிகாரமா? பார்த்துவிடுவோம்” என்ப தோடு இதை ஒப்பிட்டுச்சொல்லி, மக்களை மயிர்க்கூச்செறிய வைத்துவிட்டார். மருத்துவர் கள் ஓய்வெடுத்துக் கொள்ள ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “நீங்க சொல்றது சரிதான். அதை 17 ஆம் தேதிக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாமே” என்று அதே கரகரத்த குரலில் சொல்லி மருத்துவரையும் வாயடைக்கச் செய் திருக்கிறார்.
அந்த அளவுக்கு ஆசிரியர் இந்த தேர்தல் பரப்புரைப் பணிகளில் அக்கறை எடுத்துக் கொண்டு பேசிவருகிறார். அவர் எல்லா கூட் டங்களிலும், “18ஆம் பொதுத் தேர்தலானது, இரண்டு வேட்பாளர்களுக்கிடையே நடைபெறு கின்ற தேர்தல் அல்ல. இரண்டு தத்துவங்களுக் கிடையே நடைபெறுகின்ற தேர்தல். ஒன்று தந்தை பெரியாரின் சமத்துவம், சமதர்மம்! மற் றொன்று மனுதர்மம், பேதம்? ஆகவே கவனச் சிதறல் இல்லாமல் வாக்களித்து பாசிச பா.ஜ.க. வை; மோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசி வருகிறார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி புதிய பேருந்து நிலையம் அருகில் பெண்கள் அதிகம் கூடியிருந்த அந்தக்கூட்டத்தில், வேட்பாளர் அருண் நேரு அவர்களை ஆதரித்துப் பேசும் போது, தொண்டை இன்னமும் மோசமாகி விட்டது. மிகுந்த சிரமப்பட்டு தான் பேசினார். அப்போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த வயதான பெண்களில் இருவர், “நல்ல வயசா யிடுச்சு, இல்லே” என்றார். அதற்கு மற்றவர், “பின்னே, பழைய ஆள் ஆச்சே” என்றார். அவர் களின் கேள்வி, பதில்களில் ஒரு நூற்றாண்டு திராவிடர் இயக்க வரலாறு பொதிந்திருந்தது. இதை அவர்கள் தெரிந்துதான் பேசினார்களா? யாருக்குத் தெரியும்?
அதே கூட்டத்தில் ஆசிரியர் பேசி முடித்த வுடன் உயரமாக இருந்த இன்னொரு பெண் மேடையின் அருகில் சென்று எட்டி நின்றபடி, ஆசிரியரிடம் தனது வலது கையை நீட்டினார். ஆசிரியரும் புன்முறுவலுடன் அப் பெண்ணுக்கு கை கொடுத்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும் பிய அப்பெண் தன்னுடன் வந்திருந்த இன் னொரு பெண்ணிடம், “அவருக்கு நாம கை கொடுக்கலேன்னா வேறு யாரு கொடுக்க முடியும்” என்று கூறியபடியே கலைந்து கொண்டி ருந்த கூட்டத்தில் கலந்து காணாமல் போனார். அந்தப் பெண் கூறியதில் ஒரு பொருள் தான் இருந்ததா? தந்தை பெரியார், அன்னை மணிய மையாருக்குப் பின், ஆசிரியரும் பெண்களின் சுயமரியாதை மீட்புக்காக கடந்த 80 ஆண்டுகளாக பேசிவருகிறார்! இதை அறிந்து தான் அந்தப் பெண் அப்படிச் சொன்னாரா? யாருக்குத் தெரியும்? ஒரு வேளை அறிந்தே சொல்லியிருந்தாலும், அந்த நன்றியை எதிர் பார்ப்பவரா ஆசிரியர்? அவர் தன்னியல்பாக பேசிக்கொண்டே… இருக்கிறார். இன்னும் பேசுவார்!