தேர்தல் பத்திரத் திட்ட அணி தோற்கும்; பத்திரமான தேர்தல் வெற்றி பெறும்!
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் அறிக்கையல்ல – அது தேறாத அறிக்கை!
திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
திருச்சி, ஏப்.14 தேர்தல் பத்திரத் திட்ட அணி தோற்கும்; பத்திரமான தேர்தல் வெற்றி பெறும்! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் அறிக்கையல்ல – அது தேறாத அறிக்கை! என்று செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று (14-4-2024) திருச்சிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்!
உலகத்தின் தலைசிறந்த அறிஞரும், சட்டமேதையும், ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட கோடான கோடி மக்களுக்கு அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்த புரட்சியாளர் டாக்டர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14).
மற்ற பிறந்த நாளைவிட, மிக முக்கியமான ஒரு சோதனையான காலகட்டத்தில் அவருடைய பிறந்த நாள் வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் – சமத்துவ நாளாக அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தந்தை பெரியாரும், பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இருவரும் சமத்துவத்திற்காக, மனிதநேயத்திற்காகப் போராடியதால்தான், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தெளிவாக அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை ”சமத்துவ நாளாக” அறிவித்து, அந்த சமத்துவ நாளில் ஒவ்வொருவரும் இப்போது எடுக்கப்பட்ட அந்த உறுதிமொழியைப் போலவே, உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று தெளிவாகச் சொன்னார்.
இன்னும் சில நாள்களில், வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், இந்திய அரசமைப்புச் சட்டம் நீடிக்க வேண் டுமா? அல்லது மீண்டும் மோடி ஆட்சி ஏற்பட்டு, மனுதர்மம், அரசமைப்புச் சட்டத்தின் இடத்தில் வந்து அமர்ந்துகொள்ளவேண்டுமா? என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய சவாலை இந்த நாடு சந்திக்கிறது.
மோடி ஆட்சி, மீண்டும் வரக்கூடாது என்பதற்காக இந்தியா கூட்டணியினர் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்!
சமத்துவத்திற்கு இடமில்லாமல், சுயமரியாதைக்கு இடமில்லாமல், மாநிலங்களையே அழிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு, எதை எதையெல்லாம் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்று சமூக நீதி யாளர்கள் சொன்னார்களோ, அந்த சமூகநீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் இவற்றையெல்லாம் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கக் கூடிய மோடி ஆட்சி, மீண்டும் வரக்கூடாது என்பதற்காக இந்தியா கூட்டணியினர் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
அம்பேத்கர் அவர்கள் ஒளிவிளக்காக இருக்கிறார்!
எனவே, ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி. அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவது, அவருடைய சிலைக்கு மாலை போடுவது என்பதையெல்லாம் விட, இந்த ஆண்டு அம்பேத்கருடைய பிறந்த நாள் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். காரணம் என்னவென்றால், அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டு மானமான ஜனநாயகத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்றவர்களுக்கும் – சமத்துவம் வேண்டும் என்று சொல்லுகின்றவர்களுக்கும்தான் போராட்டம் என்று சொல்லும் பொழுது, அம்பேத்கர் அவர்கள் நமக்கு ஒளி விளக்காக இருக்கிறார்.
அம்பேத்கர் அவர்களுக்கு, விரைவில் ஜூன் 5 ஆம் தேதியன்று இந்திய நாடு, இந்தியா கூட்டணியினுடைய வெற்றியை வைத்து மாலை சூட்டும்.
தேர்தல் அறிக்கையல்ல – அது தேறாத அறிக்கை!
செய்தியாளர்: கடந்த 10 ஆண்டுகாலம் ஒன்றியத் தில் ஆட்சி செய்த பிரதமர் மோடி, வருகின்ற தேர் தலிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள்; இன்று அவர்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்களே?
தமிழர் தலைவர்: அவர்களுடைய தேர்தல் அறிக் கையைப்பற்றி ஏற்கெனவே மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், அது தேறாத அறிக்கை. தேறாத ஓர் ஆட்சி எப்பொழுது தேர்தல் அறிக்கையை வெளியிட்டாலும், அதைப்பற்றி கவலையில்லை.
அவர்களுடைய தேர்தல் அறிக்கை என்பது எழுதப்படாத ஒன்றாகும். மதவெறி, ஜாதி வெறி, பதவி வெறி, அதிகார வெறிதான்.
இதற்குமேல் அவர்களு டைய தேர்தல் அறிக்கை யைவிட, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகம் முழு வதும் பளிச்சென்று தெரி வது அவர்களுடைய தேர்தல் பத்திரத் திட்ட ஊழல் தான். அதில் பல்லாயிரக்கணக் கான கோடி ரூபாய் ஊழல்.
தேர்தல் பத்திரத் திட்ட அணி தோற்கும்;
பத்திரமான தேர்தல் வெற்றி பெறும்!
ஊழலை ஒழிக்கிறோம் என்று சொல்லக்கூடிய இந்த உத்தமருடைய ஆட் சியில், எப்படியெல்லாம் ஊழல் நடைபெற்று இருக் கின்றது என்பதை உச்சநீதிமன்றமே ஒவ்வொரு நாளும் புதைபொருள் ஆராய்ச்சி செய்து எடுத்துக் காட்டப்படுவதைப் போன்று காட்டிக் கொண் டிருக்கிறது.
ஆகவேதான், பத்திரமான தேர்தல் வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் ஓரணியில் இருக்கிறார்கள்.
தேர்தல் பத்திரத் திட்டத்தை வைத்துத் தேர்தல் நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் இன்னொரு அணியாக இருக்கிறார்கள்.
தேர்தல் பத்திரத் திட்ட அணி தோற்கும்
பத்திரமான தேர்தல் வெற்றி பெறும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.