காந்திநகர்,நவ.21- பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தில் காவல்துறையினரே மது பானங்களை கடத்தும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.
சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு அருகே பாக்கூர் சரக காவல்துறையினர் வாகனச் சோதனையில் மின்விசிறிப் பெட்டிகளில் 482 உயர்ரக மதுப் பாட்டில்கள் கடத்தல் செய்யப்பட்டதை காவல் துறையினர் கைப்பற்றினர். இதன்மதிப்பு ரூ.1.5 லட்சம் என்ற நிலையில், மின் விசிறிகளும், மது பாட்டில்களும் பாக்கூர் காவல் நிலைய லாக்கப்பில் வைக்கப்பட்டன.
கைப்பற்றப்பட் பொருட்களை பார்வையிட அதிகாரிகள் சென்ற பொழுது, லாக்கப் காலியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில், அக்.25 அன்று இரவு 10 மணியளவில் உதவி ஆய்வாளர் அரவிந்த் ராஜு பாய் மதுபானம் இருந்த லாக்கப் அறைக்குள் செல்வது பதிவாகியிருந்தது.
அதிகாரிகளின் தொடர் விசாரணைக்குப் பின்னர் உதவி ஆய்வாளர் ராஜூபாய் மற்றும் 2 காவல்துறையினர் உள்ளிட்ட 6 பேர் 1.57 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களையும், ரூ.40,000 மதிப்புள்ள மின் விசிறிகளையும் திருடியது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
கடத்தல் மதுபானங்களை மீட்ட காவல்துறையினர் மீண்டும் கடத்தி விற்பனை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த இந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவத்தில் சேர ஆட்கள் தேர்வு
சென்னை, நவ.21- சென்னையில் உள்ள ராணுவ தேர்வு மண்டல தலைமை அலுவலகம் சார்பில், ராணுவத்தில் பணியில் சேருவதற்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் 2024 ஜன.4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இந்த தேர்வு முகாம் நடைபெறுகிறது.
தேர்வுக்கு வரும்போது பான்கார்டு, ஆதார் கார்டு, கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட உரிய சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். இதுகுறித்து கூடுதல் விவரங் களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம் என ராணுவ தேர்வு இயக்குநர் எம்.கே.பாத்ரே வெளியிட்ட செய்திக்குறிப்பில்
தெரிவித்துள்ளார்.