சென்னை, ஏப்,12- சிதம்பரம் நடராஜர் சபை மீது ஏறி வழிபட தீட்சிதர்களை தவிர பக்தர்கள் யாருக்கும் உரிமை இல்லை என்று கூறுவ தற்கு ஆதாரம் உள்ளதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிதம்பரம் நடராஜர்கோவிலில் ககைசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்த அரசாணையை எதிர்த்து தீட்சிதர்கள், ஒரு பக்தர், கோவில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது
அப்போது மனுதாரர் தரப்பில், கனகசபை மீது 25 பேர் நின்று சாமி தரிசனம் செய்தால், 100பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் காலம்காலமாக தீட்சிதர்கள் தவிர வேறு யாரும் கனகசபை மீது ஏற உரிமையில்லை” என்று வாதிடப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள். “கனகசபைமீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உரிமை இல்லை என்று எப்படி கூற முடியும்? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது? அதை காட்ட முடியுமா? பக்தர்களின் தரிசனத்திற்காகத்தானே கனகசபை உள்ளது” என்று சரமாரியாக கேள்வி கேட்டனர்.
அதற்கு மனுதாரர் தரப்பு வழக் குரைஞர்கள், “கடந்த 2023ஆம் ஆண்டு கோவிலில் தகராறு ஏற்பட்டது. அப் போது காவல்துறையினர் கோவிலுக் குள் நுழைந்து இடையூறு ஏற்படுத்தினர்” என்றனர்.
அறநிலையத்துறை சார்பில் “தமிழ் நாடு அரசின் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை அரசா ணையின்படி கனகசபைமீது நின்று தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக் கப்படுகிறார்கள்” என்றார்.
காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி கடந்த 2003ஆம் ஆண்டு ஜெய்சீலா என்பவர் அங்கு தாக்கப்பட்டார். பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அந்த நேரத்தில் பாதுகாப்புக்கு வந்தனர். தற்போது சாதாரண சூழலே நிலவுகிறது. காவல் துறையினர் அங்கு இல்லை” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பின்பற்றப்படும் மரபை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கோவிலில் அன்றாட வழிபாட்டுக்கு காவல்துறையினர் இடையூறும் ஏற் படுத்தக் கூடாது என்று கூறி விசா ரணையை வருகிற 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.