நாட்டின் பெயரை இந்தியா என்று சொன்னால், எதிர்க்கட்சி கூட்டணியினர்தான் மக்களின் நினைவிற்கு வருவார்கள் என்பதினால் ‘பாரத்’ என பெயரை மாற்றவேண்டும் என்று சொல்கிறார்கள்
காரணம், கடுமையான பயத்தில் இருக்கிறார்கள்; அச்சம் அவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது!
சென்னை, செப்.19 நாட்டின் பெயரை இந்தியா என்று சொன்னால், எதிர்க்கட்சி கூட்டணியினர்தான் மக்களின் நினைவிற்கு வருவார்கள் என்பதினால் ‘பாரத்’ என பெயரை மாற்றவேண்டும் என்று சொல்கிறார்கள்; காரணம், கடுமையான பயத்தில் இருக்கிறார்கள்; அச்சம் அவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன? சிறப்புக் கூட்டம்!
கடந்த 12.9.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
16.9.2023 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
‘இந்தியா’ கூட்டணியில் 26 கட்சிகள் இருக்கின்றன!
அப்படி தெளிவாக்கியவுடன், அந்தக் கூட்டணியில் பாதி பேருக்கு மேல் புரிந்துகொண்டு சரியானார்கள். முதலில் பீகாரில் கூட்டம்; அதற்கடுத்து பெங்களூருவில் கூட்டம்; அதற்கடுத்து மும்பையில் நடந்த கூட்டத்தின் போது 26 கட்சிகள் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக் கின்றன; அடுத்த கூட்டம் நடைபெறும்பொழுது இன்னும் சில கட்சிகளும் இக்கூட்டணிக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இதுதான் அவர்களுக்கு பெரிய ஆபத்து; மிகப்பெரிய ஏமாற்றம். சேரமாட்டார்கள் என்று நினைத்தோமே, சேர்ந்துவிட்டார்களே என்று ஒரு பெரிய விரக்தி.
இதற்கிடையில், அவர்கள் கட்சிக்குள்ளேயே பிரச் சினைகள் – ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.விற்குள்.
என்னென்னமோ சொல்லி ஆட்சிக்கு வந்துவிட் டோம். இப்பொழுது இல்லாவிட்டால், எப்பொழுதும் கிடையாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
கடுமையான பயத்தில் இருக்கிறார்கள்; அச்சம் அவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது!
அதற்கடுத்ததாக ஒரு பெரிய இடி விழுந்ததாக ஒரு செய்தி என்னவென்றால், எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் பெயர் வைத்தார்கள் பாருங்கள் இந்தியா (I.N.D.I.A.) என்று! என்.டி.ஏ. பெயரே இப் பொழுது மறந்துபோயிற்று. இந்தியா என்பதுதான் இப்பொழுது மக்கள் மத்தியில் பரவியிருக்கிறது என்றவுடன், நாட்டின் பெயரை இந்தியா என்று சொன்னால், எதிர்க்கட்சி கூட்டணியினர்தான் மக்களின் நினைவிற்கு வருவார்கள் என்பதினால், ‘பாரத்’ என்று பெயரை மாற்றவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலைக்கு வந்துவிட்டார்கள். காரணம் என்னவென்றால், கடுமையான பயத்தில் இருக்கிறார்கள்; அச்சம் அவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே அவர்கள் வெற்றி பெற்ற காலத்தில் பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 37-தான். நூறு சதவிகிதத்தில் வெறும் 37 சதவிகிதத்தைத்தான் பெற்றார்கள். 63 சதவிகித மக்கள் அவர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள்.
இன்றைய ஜனநாயக தேர்தல் முறையில் உள்ள வாய்ப்புப்படிதான் அவர்கள் ஆட்சிக்கு வந் தார்கள்.
ஆகவே, கடந்த முறை செய்த அவர்களின் வித்தைகள் இம்முறை பலிக்குமா என்றால், நிச்சயமாகப் பலிக்காது.
ஏனென்று கேட்டால், முதலில் ஆட்சிக்கு வரும்பொழுது என்ன சொன்னார்கள்?
பொதுவாக இருப்பவர்களே அதைச் சுட்டிக் காட்டக் கூடிய நிலைக்கு வந்துவிட்டார்கள்.
லண்டனில் படித்து வந்திருக்கக் கூடிய மிகப்பெரிய பொலிட்டிக்கல் எகனாமிக்ஸ்ட்!
இதோ இந்தப் புத்தகம் The Crooked Timber of New India: Essay on a Republic in Crisis – Parakala Prabhakar – எழுதிய புத்தகம் இது.
இந்தப் புத்தகத்தை எழுதியவர் லண்டனில் படித்து வந்திருக்கக் கூடிய மிகப்பெரிய பொலிட்டிக்கல் எகனாமிக்ஸ்ட். ஓர் அரசியல் ரீதியாக இருக்கக்கூடிய ஒருவர். கட்சி சாராத ஒரு பொது நிபுணர் அவர்.
அவருக்கு இன்னொரு தகுதி என்னவென்றால், ஒன்றிய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடைய கணவர்.
2014 இல் மோடியின் குரல்!
அவர் ஒரு பேட்டியில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ‘‘ஆட்சிக்கு வருவதற்கு முன் என்ன சொன் னார்கள்; நான் ஒரு ஊழியனாக வருகிறேன்; உங் களுக்குத் தொண்டு செய்வதற்காகத்தான் வந்திருக் கிறேன்” என்று சொன்னதுதான் மோடியினுடைய குரல், 2014 ஆம் ஆண்டு.
அதற்கடுத்ததாக, ‘‘நாங்கள்தான் விஸ்வ குரு – உலகத்திற்கே நான்தான் குரு” என்று சொன்னதால், அப்பொழுதே அவர்கள் கீழே இறங்கிவிட்டார்கள்” என்று ‘ப்ரண்ட் லைன்’ பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்தார்.
ஆர்.இராதாகிருஷ்ணன் என்ற செய்தியாளர்தான் பரகலா பிரபாகரைப் பேட்டி கண்டார்.
‘‘பிரதான் சேவக்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதமர், பின்னாளில் எப்படி ஆனார் என்றால், ‘‘விஸ்வ குருவாக” மாறிவிட்டார். இதை எல்லோரும் உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒன்றிய ஆட்சியில் ஊழல் ஒருபக்கத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது; அதைப்பற்றி இங்கே தெளிவாக விளக்கிச் சொன்னார் நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள்.
பொய்யாய், பழங்கதையாய், கனவாகப் போய்விட்டது!
நாளுக்கு நாள் கிராஃப் கீழே இறங்கிக் கொண்டே வருகிறது. அடுத்ததாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது – மோடி பிரச்சாரத்திற்குப் போனார் என்றால், வாக்குகள் ‘‘பொலபொல வென்று” விழும் என்று சொன்னார்கள்.
இமாச்சலப் பிரதேசத்திலும் சரி, கருநாடக மாநிலத்திலும் சரி அது பொய்யாய், பழங்கதையாய், கனவாகப் போய்விட்டது.
இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.சுக்கே அது புரிந்து போய்விட்டது. எனவே அவர்கள் வேறு யுக்தி களைக் கையாளவேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டார்கள்.
எப்பொழுதுமே அவர்களுக்கு ஓர் ஆயுதம் இராமன்!
கடைசி முயற்சியாக இராமர் கோவிலை வைத்து ஓட்டு வாங்கலாம் என்று நினைத்தார்கள். கடைசி நேரத்தில், இராமர் கோவிலை கட்டி முடித்துக் காட்டி விட்டால், அதன்மூலமாக பக்தியைக் காட்டி, மதத்தைக் காட்டி வாக்குகளை வாங்கலாம் என்று நினைத்தார்கள். எப்பொழுதுமே அவர்களுக்கு ஓர் ஆயுதம் இராமன் – வடநாட்டில் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், அந்த இராமன் இப்பொழுது பயன்பட வில்லை. பயன்பட முடியாது.
ஏதோ ஓரளவிற்குத்தான், உத்தரப்பிரதேசத்தை யொட்டி இருக்குமே தவிர, பீகாரில் இராமனுக்கு வேலையில்லை.
ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் அது பயன்படாது என்பது மிகத் தெளிவாக அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.
ஆகவே புதிதாக ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும். அதற்காகவென்றே ஒரு குழு இருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி அன்றைக்கு சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டினை நான் தொடங்கி வைத்தேன். அடுத்த படியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைச்சர் – தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
சிறந்த கொள்கை இலட்சியவாதியாக, தான் சொன்ன கருத்தை உறுதியாகப் பின்பற்றுவேனே தவிர, அதிலிருந்து மாறமாட்டேன் என்று சொல்லக்கூடியவர். எனக்குப் பதவி முக்கியமல்ல; கொள்கை முக்கியம் என்றார்.
அந்த மாநாட்டில் அவர் உரையாற்றும்பொழுது, சனாதனத்தை அழிப்போம், ஒழிப்போம் என்று சொன்னார். ஜாதியை அழிப்போம் என்று சொன்னால் அதில் என்ன தவறு?
அழிப்போம் என்ற வார்த்தையை அப்படியே மாற்றி, இனப்படுகொலை (Genocide) செய்வோம் என்று அமைச்சர் உதயநிதி சொன்னதாக பா.ஜ.க.வின் அய்.டி. விங் தலைவர் அமித் மாளவியா கிளப்பிவிட்டார்.
தெரியாமல் அவர்கள் செய்யவில்லை;
திட்டமிட்டே செய்தார்கள்
அமைச்சர் உதயநிதி ஆற்றிய உரையின் வீச்சு வீடியோவிலும், ஆடியோவிலும் பதிவாகி இருக் கின்றது. அருகிலிருந்து கேட்டவர்களும் இருக் கிறோம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், சொல்லாத ஒன்றை சொல்லியதாகத் திரிபுவாதம் செய்தார்கள். தெரியாமல் அவர்கள் செய்யவில்லை; திட்ட மிட்டே செய்தார்கள்.
ஏனென்றால், அவர்கள் திரிபுவாதம்தான் தங்களுக்குக் கடைசி நேரத்தில் கைகொடுக்கும் என்று நினைப்பவர்கள்.
சட்ட அமைச்சராக இருந்த ஒருவர் பேட்டி கொடுக்கிறார் – என்னவென்றால், ‘‘இந்தியா கூட்டணி எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா? ஹிந்து மதத்தை அழிப்பதற்காக” என்கிறார்.
இந்தியா கூட்டணி எப்பொழுது உருவாயிற்று? அதில் இருக்கின்றவர்களின் கருத்து என்ன? அந்தக் கூட்டணியில் சிவசேனா இடம் பெற்றிருக் கிறதா, இல்லையா? சிவசேனா அமைப்பின் நோக்கம் என்ன? மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவினுடைய எண்ணம் என்ன?
இவையெல்லாம் தெரியாமல், தோல்வியினு டைய உச்சம் அவர்களை உலுக்குகிறது.
மலேரியா நோய்க்கு மருந்து கொடுத்தால் மட்டும் போதாது; அதற்குக் காரணமான கொசுவை ஒழிக்கவேண்டும் என்றார்
சென்னையில் நடைபெற்ற மாநாட்டின் தலைப்பே ‘‘ஸநாதன அழிப்பு மாநாடு” என்பதாகும். அதற்காகத்தான் ஒரு உதாரணம் சொன்னார் – மலேரியா நோய்க்கு மருந்து கொடுத்தால் மட்டும் போதாது; அதற்குக் காரண மான கொசுவை ஒழிக்கவேண்டும் என்றார். இந்த உதாரணத்தைச் சொன்னால், இதில் என்ன தவறு இருக்கிறது.
ஸநாதனம் என்றால் என்ன?
அதில் இவர்கள் யாருக்காவது தெளிவு இருக்கிறதா? அதற்கும் விளக்கம் நாம்தான் சொன்னோம்.
நாங்கள் எதை அழிக்கவேண்டும் என்று சொல் கிறோம்.
சமத்துவத்திற்கு விரோதமாக இருப்பதை, சுதந்திரத் திற்கு விரோதமாக இருப்பதைத்தான். ஆகவே, ஸநாதனம் என்று சொல்லக்கூடியது பேதத்தை வளர்க்கக் கூடியது. பிறவியினால் பேதம் உண்டு – அது நிலைக்கவேண்டும், நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று சொல்வதுதான் ஸநாதனம்.
இப்பொழுது ஸநாதனம் போய்,
ஹிந்து மதம் அதற்குள் வந்துவிட்டது!
இதுவரையில் எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்றால், ஸநாதனத்தைக் காப்பாற்றவேண்டும் என் கிறார்கள். ஸநாதனத்திற்கு விரோதமாகப் போகிறார்கள் என்று நம்மைப் பார்த்துக் கூறியதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, ஸநாதனம் போய், இப்பொழுது ஹிந்து மதம் அதற்குள் வந்துவிட்டது.
இதுவா? அதுவா? என்பது இப்பொழுது பிரச்சினை யல்ல. நாம் செய்யவேண்டியதற்குப் பதிலாக, இப் பொழுது அவர்கள் பிரச்சாரத்தை செய்துகொண் டிருக்கிறார்கள்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை மட்டுமல்ல – பொதுவாகவே உண்மை கள பலியாகக் கூடாது.
போர்க் களத்தில் முதலில் பலியாவது உண்மைதான்!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு –
‘‘In times of war the first casualty is truth”
உலகப் போர் நடக்கும்பொழுது, உண்மையை மாற்றி மாற்றி சொல்வார்கள். தோல்வி பெற்றவனை வெற்றி பெற்றதாகச் சொல்வார்கள்; வெற்றி பெற்றவனை தோல்வி அடைந்தவன் என்று சொல்வார்கள். அதனால் தான், முதலில் அங்கே பலியாவது உண்மைதான்.
ஸநாதன தர்மம் என்றால் என்ன? நாங்கள் ஏன் ஸநாதன தர்மத்தை அழிக்கவேண்டும்; ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறோம் என்றால், அதை எடுத்து விளக்கவேண்டும்.
இதுவரையில் யாரும் ஆளுநர் ரவி உள்பட, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உள்பட ஸ்நாதனம் என்பதற்கு என்ன வரையறை என்று சொல்ல முடியாது.
ஹிந்து மதத்திற்கே அவர்களால்
வரையறை சொல்ல முடியவில்லை!
ஹிந்து மதத்திற்கே அவர்களால் வரையறை சொல்ல முடியவில்லை. எதிர்மறை வரையறையைத்தான் சொன் னார்கள்.
அதைத்தான் நம்முடைய துரைசந்திரசேகரன் அவர்களும் சொன்னார்.
‘‘யார் கிறித்துவர்கள் இல்லையோ,
யார் முஸ்லிம்கள் இல்லையோ,
யார் பார்சிகள் இல்லையோ” என்று சொல்வார்கள்.
ஆனால், ஸநாதன தர்மத்தை முதன்முதலில் பாடமாக வைத்து, அந்தப் பாடத் திட்டத்தில், ஸநாதனம் எப்படி உருவாயிற்று? என்பதைச் சொன்னால்தான் விளங்கும். இங்கே வந்திருக்கின்றவர்கள், இதைக் கேட்டு, மற்றவர்களுக்கும் விளக்கவேண்டும்.
தேர்தல் நேரத்தில் மக்களைக் குழப்பலாம் என்று நினைக்கிறார்கள்
ஏனென்றால், இந்தப் பிரச்சினையை வைத்து தேர்தல் நேரத்தில் மக்களைக் குழப்பலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்களால் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. வடநாட்டிலும் இப்பொழுது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
‘‘ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு” என்று சொல்வதுபோன்று செயல்படுகிறார்கள் அவர்கள்.
கவிஞர் இங்கே சொன்னார் அல்லவா, சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுபற்றி. அதுகூட கடைசி நேரத்தில் அதை எடுத்துவிட்டார்கள். அதுதான் இன்னும் அதிகமான அளவிற்கு எதிர்விளைவை உண்டாக்கிற்று.
ஆகவேதான், இதுவும் அதிகமான அளவிற்கு எதிர்விளைவை உண்டாக்குவதற்கு நிறைய அவகாசம் இருக்கிறது. வடபுலத்திலும் இன்றைக்கு இதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
பெரியார் கொள்கைக்குக் கிடைத்த
மிகப்பெரிய வெற்றி
இதில் என்ன லாபம் என்றால், பெரியார் கொள் கைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துவிட்டது.
ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்கள், ஒடிசா மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருந்தவர். சிறந்த ஆலோசகர் – சிறந்த தமிழறிஞர் – கீழடி போன்ற தொல்லியல் ஆய்வு செய்திகளை வெளிப்படுத்தி எழுதக்கூடியவர்.
(தொடரும்)