‘‘ஊழல், ஊழல்” என்று ஊளை இடுபவர்கள், தங்கள் தலைகளில்தான் ஊழல் மூட்டைகளைச் சுமந்து திரிகின்றனர்!
ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் பி.ஜே.பி. ஆட்சியில் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறதே, என்ன பதில்?
தேர்தல் பத்திர ஊழல் சிரிப்பாய் சிரிக்கிறதே!
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
திருவள்ளூர் ஏப்.11 ‘‘ஊழல், ஊழல்” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்; அப்படி சொல்லுகின்றவர்கள்தான் ஊழல் மூட்டைகளைத் தலையில் சுமந்து திரிகிறார்கள். சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது – உச்சநீதிமன்றமும் அம் பலப்படுத்திவிட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திருவள்ளூர் தொகுதியில் தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை
நேற்று (10.4.2024) இரவு 9 மணியளவில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
வருகின்ற 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கவுள்ள, இந்தியாவினுடைய 18 ஆவது பொதுத் தேர்தல் என்ற இந்தத் தேர்தலுக்கானப் பரப்புரை நிகழ்ச்சி இது. திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கக் கூடிய இந்தியா கூட்டணியை உருவாக்கிய பிறகு, ஒன்றிய ஆட்சி மாற்றமடைவது உறுதியாகியுள்ளது. மோடி ஆட்சி என்ற கடந்த 10 ஆண்டுகால காவி ஆட்சி, ஜனநாயகத்தைச் சிதைத்து வரக்கூடிய அந்த ஆட்சியை மாற்றுவதற்கு நாம் இந்தியா முழுவதும் அந்த முடிவைக் கொண்டு செல்லவேண்டும். இதுவரை இரண்டு முறை ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததினுடைய அடிப் படை, எதிர்க்கட்சிகளுடைய வாக்குகள் சிதறியதால் தான் என்ற நிலையை நன்கு புரிந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய இந்தியா கூட்டணி உருவாவதற்கு அடித்தளம் செய்தவர் நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியை உலகளாவிய அளவில் பாராட்டக் கூடிய அளவிற்கு நடத்தி வருகின்ற நம்முடைய முதல மைச்சர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின். அவருடைய மதியூகத் தினால், வியூகத்தினால் உருவான இந்தியா கூட்டணி யின் சார்பாக, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் சார்பாக நிறுத்தப்பட்டு இருக்கின்ற வேட்பாளர்தான் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சிறப்பான ஆற்றல் வாய்ந்த – ஓய்வு பெற்ற, அதாவது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே ஓய்வு பெற்ற நம்முடைய அருமை வேட்பாளர் சசிகாந்த் செந்தில். அவரை ஆதரித்து, கை சின்னத்தில் வாக்க ளிக்கவேண்டும் என்று சொல்வதற்காக இந்தப் பரப் புரைக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மணி அவர்களே,
வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களே, தலைமைக் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களே,
எவ்வளவு பெரிய கூட்டமானாலும் எப்போதும் திராவிட இயக்கத்தில் இந்தப் பகுதியில் மிக முக்கியமான இரண்டு தளபதிகள் இருக்கிறார்கள். ஒருவர் நம்முடைய மாவட்டச் செயலாளர் ஆற்றல்மிகு சந்திரன். இன் னொருவர் பாரம்பரியமாக நம்முடைய குடும்பத்தைச் சார்ந்த அருமைச் சகோதரர் சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் அவர்கள்.
இக்கூட்டத்திற்கு வந்திருக்கின்ற அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, பெரி யோர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரவு 10 மணிக்குள் கூட்டத்தை முடிக்கவேண்டும். நாங்கள் எப்பொழுதும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் – சட்டத்தைக் கையிலெடுக்காதவர்கள் – சட்டத்தை வளைக்கத் தெரியாதவர்கள்.
சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள் நாம்!
இன்றைய மோடி அவர்கள் ஆட்சியில் சட்டத்தை வளைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதுபோன்று இல்லாமல், சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள் நாம்.
இன்றைக்குத் தேர்தல் பரப்புரையின் முதல் கூட்டம் காஞ்சிபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அவர்களுக்கு ஆதரவாகப் பேசிவிட்டு, அதற்கடுத்து வேக வேகமாக இங்கே வந்து உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தேர்தல் பரப்புரையை இடைவெளியில்லாமல் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்!
எவ்வளவு சுருக்கமாகச் சொன்னாலும், அதிகமாகப் பரப்புரை தேவையில்லை என்று சொல்கின்ற அளவிற் குத் தமிழ்நாட்டில், தென்கோடியில் தொடங்கி, மேற்குத் தொகுதியில் செய்து, அடுத்தபடியாக இங்கே வந்து கொண்டிருக்கின்றோம்.
கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய எங்களுடைய தேர்தல் பரப்புரையை இடைவெளியில்லாமல் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
எங்கே பார்த்தாலும் மக்கள் ஆர்வத்தோடு இருக் கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகள் நல்ல உற்சாகத்தோடு இருக்கிறார்கள்.
என்னுடைய உயிர் முக்கியமல்ல – நாடு காப்பாற்றப்பட வேண்டும் – மக்கள் ஏமாந்துவிடக் கூடாது!
கடுமையான வெப்பம், 106 டிகிரி வெயில். ‘‘இவ்வளவு கடுமையான வெப்பத்தில், நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டுமா?” என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். நம்முடைய முதலமைச்சர் அவர்கள்கூட கேட்டார், ‘‘என்னங்க, நீங்கள் இந்த வயதில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டுமா? நீங்கள் அறிக்கைகள் எழுதினால் போதுமே” என்றார்.
என்னுடைய உயிர் முக்கியமல்ல – நாடு காப்பாற்றப்பட வேண்டும். மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. இரண்டுமுறை ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிட்டது.
இந்த மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்த நம் பங்களிப்பு இருக்கவேண்டாமா?
நம்முடைய தமிழ்நாட்டில் மக்கள் ஏமாறமாட் டார்கள். ஏனென்றால், பெரியார் மண், சமூகநீதி மண், திராவிட மண் இது.
அண்ணா – கலைஞர், அதற்குமுன் காமராஜர் இப்படி எல்லோரும் சேர்ந்து உழைக்கக் கூடிய விழிப்பான மண் தமிழ்நாடு.
சப்த சுரங்கள் – சப்த நதிகள் போன்று ‘சப்த பிரதமர்!’
அதனால்தான், நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் இன்றைக்கு ஏழாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்திருக்கின்றார். இதுவரை நாம் சப்த சுரங்கள் என்ற கேள்விப்பட்டு இருக்கிறோம். சப்த நதிகள் இருக்கலாம். அதற்கடுத்ததாக இப்பொழுது இவர் ‘சப்த பிரதமர்’. வேக வேகமாகப் பேசுகிறார் – இன்னும் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வருவார் என்று தெரியவில்லை. அவர் இங்கேயே வந்து முகாம் போட்டாலும், என்ன செய்தாலும், நிச்சயமாக வெற்றி பெறப் போவது எந்த அணி என்று கேட்டால், தி.மு.க.வை உள்ளடக்கிய, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை உள்ளடக் கிய இந்தியா கூட்டணிதான் வெல்லப் போவது என்பது எழுதப்பட்டு விட்ட ஒன்று.
யார் வெற்றி பெற்றார்கள் என்று தெரிந்துகொள்வதற்கே 50 நாள்கள் காத்திருக்கவேண்டும்!
அதிலும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், இது வரை நடைபெற்ற தேர்தல்களிலேயே, இப்பொழுது நடைபெறப் போகிற தேர்தல் மிகவும் வித்தியாசமான தேர்தலாகும். யார் வெற்றி பெற்றார்கள் என்று தெரிந்து கொள்வதற்கே 50 நாள்கள் காத்திருக்கவேண்டும் என்று சொன்னால், இப்படி ஒரு ஒன்றிய ஆட்சியை நீங்கள் பார்த்திருக்க முடியுமா?
யாருக்காக அதுபோன்று செய்யப்பட்டது என்றால், பிரதமர் மோடி அவர்களுக்காகத்தான். ஏனென்றால், அவர் எல்லா மாநிலங்களுக்கும் தேர்தல் பரப்புரைக்குச் செல்லவேண்டும் என்பதற்காகத்தான்.
இந்தியாவில் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது!
ஜனநாயகம் இப்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. அதனால்தான், அதற்காக நல்ல டாக்டர்கள் தேவை. அந்த நல்ல டாக்டர்கள் யார் என்றால், நம்மு டைய இந்தியா கூட்டணியில் இருக்கின்ற இரண்டு டாக்டர்கள் – மிக முக்கியமாக அவர்களை இந்தியாவே நம்பியிருக்கிறது.
இருவர்தான், மோடிக்கு சிம்மசொப்பனமாகத் தெரி கிறார்கள். ஏனென்றால், நோய்க் கிருமிகளுக்கு டாக்டர் கள்தான் எதிரிகள் – தனிப்பட்ட முறையில் அல்ல.
நோய்க்கிருமி எப்பொழுது வரும்? எப்படி வரும்? என்று சொல்ல முடியாது. அப்படி நோய்க் கிருமிகள் வந்தாலும், நிச்சயமாக டாக்டர்களின் கைகளில்தான் தீர்வு இருக்கிறது.
மக்களோடு மக்களாகப் பழகக்கூடிய இளந்தலைவர் ராகுல் காந்தி!
அந்த இரு டாக்டர்களில் ஒருவர்தான் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இன்னொருவர், எப்பொழுதும் மக்களோடு மக்களாகப் பழகக்கூடிய, சிம்மசொப்பனமாக இருக்கக் கூடிய இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்கள்.
மக்களின் உணர்வைப் புரிந்தவர். அவர் தமிழ்நாட் டிற்கு வந்து பார்த்தார். இதற்கு முன் இருந்த வடநாட்டுத் தலைவர்களைவிட, இவர்தான் மக்களின் மனதைப் படித்தார். தென்னாட்டு மக்களின் மனதைப் படித்தார்.
அதனால்தான் அவர் நாடாளுமன்றத்தில், நேருக்கு நேர் சொன்னார், ‘‘மோடி ஜி, நீங்கள் தமிழ்நாட்டில் எப் படியாவது காலூன்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். தமிழ்நாட்டை உங்கள் வயப்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், உங்களால் அது முடியாது. ஏனென்றால், தமிழ்நாடு பெரியார் மண், சமூகநீதி மண், திராவிட மண்” என்றார்.
பிரதமர் மோடியுடன் விமானத்தில் பயணம் செய்பவர்கள் அதானி, அம்பானிதானே!
மேலும், ‘‘உங்களுக்கு யார் சொந்தக்காரர்கள், ஏழை, எளிய மக்களா? இல்லை, அம்பானிகளும், அதானிகளும், டாட்டாக்களும், பிர்லாக்களும்தானே உங்கள் சொந்தக் காரர்கள்! உங்களுடன் விமானத்தில் பயணம் செய்ப வர்கள் அதானி, அம்பானிதானே” என்று நேருக்கு நேராகக் கேட்டார்.
அப்படி சொன்ன ராகுல்காந்தி அவர்கள்மீது ஏற்பட்ட கோபத்தினால்தான், மோடி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி இனிமேல் வரக் கூடாது என்பதற்காக ஒரு குறுக்கு வழியைத் தேர்ந் தெடுத்தார்.
‘‘எந்த விளைவுகளையும் நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்”: ராகுல் காந்தி!
ராகுல் காந்தி அவர்கள் எப்போதோ ஒரு கூட்டத்தில் பேசினாராம், ‘‘மோடி என்றால், என்ன அர்த்தம்?” என்று சொன்னாராம். அதற்காக அவர்மீது ஒரு வழக்குப் போட்டு, அவசர அவசரமாக அந்த வழக்கில், ‘‘ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும்” என்று சொன் னார்கள்.
‘‘மன்னிப்புக் கேட்க நான் தயாரில்லை. எந்த விளைவுகளையும் நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று ராகுல் காந்தி அவர்கள் சொன்னார்.
உடனே, அவசர அவசரமாக அந்த வழக்கின் விசாரணையை நடத்தி, மூன்றாண்டு தண்டனைகளை விதித்தனர். ஏன் மூன்றாண்டு தண்டனை? என்றால், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான்.
இதனை உச்சநீதிமன்றம்கூட கண்டித்தது. ‘‘சாதாரண விஷயத்திற்கு எதற்காக மூன்றாண்டு தண்டனை? இது பழிவாங்கும் நோக்கம்தானே!” என்று மேல்முறையீட்டு வழக்கில் கேட்டது. அதற்கு முன் உச்சநீதிமன்றம் என்ன சொன்னது என்றால், ‘‘மேல்முறையீட்டைப்பற்றி கவலைப்படாமல், உடனடியாக ராகுல் காந்தி அவர்கள் வசித்து வந்த வீட்டை 24 மணிநேரத்தில் காலி செய்ய வேண்டும் என்று சொன்னது என்ன நியாயம்?” என்றும் கேட்டது.
எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டால், ஜனநாயகத்தில் அதற்குப் பதில் சொல்லவேண்டியவர்கள் ஆளுங்கட்சி யினர். அது அவர்களது கடமையாகும்.
ராகுல் காந்தியை தேர்தலில் நிற்க முடியாமல் செய்யவேண்டும் என்று நினைத்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ராகுல் காந்தி அவர்களுக்கு ஏன் மூன்றாண்டு தண் டனை கொடுத்தார்கள் என்றால், உடனடியாக அவரு டைய எம்.பி., பதவி பறிக்கப்பட்டு, அடுத்த ஆறாண்டு களுக்கு அவர் தேர்தலில் நிற்க முடியாது என்பதற் காகத்தான்.
ராகுல் காந்தி அவர்கள் நேரிடையாக மக்களைச் சந்திக்கக் கூடியவர். ஆகவே, அவரை முடக்கவேண்டும் என்று நினைத்தார்கள்.
இதுபோன்று குறுக்கு வழியில், ஜனநாயகத்திற்கு விரோதமாக நடந்துகொள்வதுதான் ஒன்றிய பா.ஜ.க. மோடி ஆட்சி.
ஜனநாயகத்திற்கு ஆபத்து, ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில், மரணப் படுக்கையில் இருக்கிறது என்று நாங்கள் சொல்வதற்கு என்ன காரணம்? இது போன்ற நிகழ்வுகள்தான் காரணமாகும்.
ஒரு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குக்கூட நிற்காதவர்கள் திராவிடர் கழகத்தினர்!
இரண்டாம் முறையாக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. என்ன செய்தது? இங்கே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நாங்கள் சட்டமன்றத் திற்குள் போகவேண்டிய வேலையில்லை. ஒரு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குக்கூட நிற்கக்கூடாது என்று தந்தை பெரியார் சொன்னார்.
ஏனென்றால், நாங்கள் துறவிகள்; அதுவும் நவீன துறவிகள் அல்ல, இப்பொழுது உள்ள நவீன துறவிகள் ‘அய்டெக்’ துறவிகளாக இருக்கிறார்கள். நாங்கள் அதுபோன்ற துறவிகள் அல்ல.
என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது முதலமைச்சர் கலந்துகொண்டு வாழ்த்துச் சொன்னார்.
உங்களுக்கு ‘‘என்ட்ரி டூட்டி’’ – எங்களுக்கு ‘‘சென்ட்ரி டூட்டி!’’
அப்பொழுது நான் சொன்னேன், ‘‘எங்களுக்குப் பதவியைப்பற்றி கவலையில்லை. பெரியார் எங்களை அப்படித்தான் தயார் செய்திருக்கிறார். ஆனால், சட்டமன்றத்திற்குள், நாடாளுமன்றத்திற் குள் யாரை முக்கியமாக அனுப்பவேண்டுமோ, அவர்களை அனுப்புவதுதான் எங்களடைய வேலை. உங்களுடைய வேலை என்னவென்றால், ‘‘என்ட்ரி டூட்டி” – எங்களுடைய வேலை என்ன வென்றால், ‘‘சென்ட்ரி டூட்டி” – வெளியில் பாதுகாப் பாக நிற்கவேண்டும்- இன எதிரிகள் யாரும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக” என்றேன்.
தேர்தல் பரப்புரைக்காக சுருக்கமான நேரத்தில் எல்லா செய்திகளையும் சொல்லிவிட முடியாது என்பதற் காகத்தான், நான்கு சிறிய புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம். அந்தப் புத்தகங்களை வாங்கி மக்களிடம் பரப்புங்கள்.
தமிழ்நாட்டிற்குப் பிரதமர் மோடி வந்து, ‘‘தி.மு.க.வை அழிப்பேன், தி.மு.க.வை ஒழிப்பேன்” என்று சொல்லியிருக்கிறார்.
தி.மு.க.வை அழிப்பேன் என்று சொன்னவர்கள் வரலாற்றில் காணாமல் போயிருக்கிறார்கள்!
திராவிட இயக்க வரலாற்றில், திராவிட இயக்கத்தை அழிப்போம் என்று பிரதமர் மோடி சொல்லியிருக்கிறாரே, ‘‘உடலெல்லாம் மூளை” என்று சொல்லப்பட்ட இராஜாஜி போன்றவர்களே, ‘‘தி.மு.க.வை அழிப்பேன்” என்று சொன்னார். அவரே பிற்காலத்தில், அண்ணா அவர் களின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு, ‘‘ஹிந்தி நெவர்; இங்கிலீஷ் எவர்” என்று சொன்னார். இந்த வரலாறு மோடிக்குத் தெரியாது.
இந்த வரலாற்றைத் தெரிந்துகொண்டுள்ள பல கட்சிக்காரர்கள் இருப்பார்கள். நடுநிலையாளர்களைக் கேட்கிறோம், எந்தக் கட்சியையும் சாராதவர்களைக் கேட்கிறோம்.
ஜனநாயகத்தில், மக்கள் வாக்களித்து வந்திருக்கின்ற இடத்தில், மக்களவையில் துணை சபாநாயகர் பதவி என்பது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். சபாநாயகர் அவையில் அமர்ந்திருக்க முடியாத போது, துணை சபாநாயகர்தான் அவையை
நடத்துவார்.
உலக நாடுகளில் நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒரு நிலை!
அப்படிப்பட்ட நிலையில், மோடி அவர்கள் இரண் டாம் முறை ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தபொழுது, அதிகமானப் பெரும்பான்மை என்று சொல்லக்கூடிய ‘‘ரோடு ரோலர்” மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு, அந்த துணை சபாநாயகர் பதவி – அய்ந்தாண்டுகள்வரை நிரப்பாதது – உலக நாடுகளில் நாடாளுமன்ற வரலாற்றி லேயே, இந்த நாட்டைத் தவிர, இந்த மோடி அரசை தவிர வேறு எங்கும் கிடையாது.
ஏன் அந்தப் பதவியை நிரப்பாமல் வைத்திருந்தார் என்று உங்களுக்கெல்லாம் தெரியுமா?
மரபுப்படி, துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சியான காங்கிரசுக்குத்தான் கொடுக்கவேண்டும். அந்த மரபைக் கூட அவர்கள் தூக்கி எறிந்திருக்கின்றார்கள் என்றால், ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடியவர்கள், ஜன நாயகம் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றது என்பதற்கு அவர்களுடைய நடவடிக்கையே சாட்சியாக இருக்கின்றது.
ஜனநாயகத்தில் மூன்று முக்கிய தூண்கள்!
அதற்கடுத்ததாக, ஜனநாயகத்தில் மூன்று முக்கிய தூண்கள் என்று சொல்வார்கள்.
அந்த மூன்று தூண்கள் என்ன?
1. நிர்வாகம்
2. நாடாளுமன்றம்
3. நீதிமன்றம்
மேற்சொன்ன மூன்று தூண்களையும் தாண்டி, நான்காவது தூண்கள்தான் பத்திரிகைகள், ஊடகங்கள்.
இந்த நான்கும் கடந்த 10 ஆண்டுகாலங்களில் மோடி ஆட்சியில் எவ்வளவு சிதைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை நினைத்துப் பாருங்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அவர்கள் மதிப்பதில்லை. உங்களுக்கெல்லாம் தெரியும், பஞ்சாயத் துத் தலைவரிலிருந்து, குடியரசுத் தலைவர் வரையில், பதவிப் பிரமாணம் எடுப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான்.
அரசமைப்புச் சட்டத்திற்குக் கும்பிடு போடுவார் பிரதமர் மோடி. நல்ல நடிகர் அவர். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. ‘மகாநடிகன்’ என்ற ஒரு திரைப்படம். நம்முடைய ‘இனமுரசு’ சத்யராஜ் நடித்திருப்பார். இப் பொழுது அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தால், யாரை கதாநாயகனாகப் போட்டிருப்பார்கள் என்று நான் சொல்லவேண்டிய அவசியமில்லை.
‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது’’ என்பதே மிக முக்கியம்!
நம்முடைய அணி, தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் உருவாகி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாமர்த்தியத்தினால் இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு, ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது” என்பதே மிக முக்கியமாக மனதில் நிறுத்தவேண்டும் என்று வந்திருக்கக் கூடிய சூழலில், என்ன நடந்தது என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக் கையில் சொன்னதைத்தானே – தி.மு.க. கூட்டணி யின் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் நிறைவேற்றம் செய்கிறார்கள். ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள் அதனைத் தெளிவாகச் சொல்லுமே!
தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகின்ற
பிரதமர் மோடியிடம் கேட்கட்டுமே!
‘‘மருத்துவர், மருத்துவர்” என்று சொல்லக்கூடிய நண்பர், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றார்; நீட் தேர்வு கொடுமைகளைப்பற்றி சொன்னாரே – இப்பொழுதுதான் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறாரே – இன்னும் நான்கு முறை வருவார், அவரிடம் கேட்கட்டுமே!
திரிசூலத்தைக் காட்டித்தான் அவர்களையெல்லாம் பக்கத்தில் அமர வைத்திருக்கிறார்கள்.
திரிசூலம் என்றால் என்னவென்று உங்களுக்கெல் லாம் தெரியும்; அதுவும் திருத்தணிக்குப் பக்கத்தில் இருக்கின்றவர்களுக்கு திரிசூலத்தைப்பற்றி தெரியாதா?
திரிசூலத்தில் மாட்டிக்கொண்டவர்கள்
பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார்கள்!
அந்தத் திரிசூலத்தில் மூன்று முனைகள் உள்ளன.
ஒன்று, வருமான வரித் துறை
இரண்டாவது, சி.பி.அய்.
மூன்றாவது, அமலாக்கத் துறை.
இதைக் காட்டித்தானே எல்லோரையும் மிரட்டினார்கள்.
பா.ஜ.க. கூட்டணியை விட்டு அ.தி.மு.க. போன பிறகு, கதவைத் திறந்து வைத்திருக்கின்றோம் என்று பா.ஜ.க. சொன்னது. யாருமே வரவில்லை. கதவைக் கழற்றி விட்டோம் என்று சொன்னார்கள், அப்பொழுதும் யாரும் வரவில்லை.
பிறகு, திரிசூலத்தில் மாட்டிக்கொண்டவர்கள் அங்கே சென்றிருக்கிறார்கள்.
நாட்டைக் காப்பாற்றுவதற்காக நாம் பாடுபடுகிறோம்; தங்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்கள் பாடுபடுகிறார்கள்.
‘‘எத்தனை வழக்குகள் வந்தாலும் நாங்கள் சந்திப் போம்” என்று சொல்லக்கூடிய துணிச்சலோடு வரக்கூடி யவர்கள் நாம்.
ஆகவே, அவர்களைப் பொறுத்தவரையில், சொன் னதை செய்திருக்கிறார்களா? தாய்மார்கள் இங்கே இருக்கிறீர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறதே!
மாதம் ஆயிரம் ரூபாய் ‘‘மகளிர் உரிமைத் தொகை” என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு வந்து விடுகிறது.
அய்ந்து பெண்களை கல்லூரிக்கு அனுப்பினாலும் ஒருவர் ஆண்டியாகமாட்டார் – அதுதான்
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை!
‘‘அய்ந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி” என்று பழமொழி சொல்வார்கள் முன்பு. இப்பொழுது அய்ந்து பெண்களை நீங்கள் கல்லூரிக்கு அனுப்பினாலும், அவர்களுடைய பெற்றோர் ஆண்டியாகமாட்டார்கள்; அதற்குப் பதில், அந்த அய்ந்துப் பெண்களும் பட்ட தாரிகள் ஆவார்கள். பெற்றோர்கள் கவலையில்லாமல் இருப்பதற்காகத்தான், தளபதி மு.க.ஸ்டாலின் அரசு, மாதாமாதம் ஆயிரம் ரூபாயை கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்குக் கொடுக்கிறது.
நம்முடைய ஒரு ரூபாய்க்கு வெறும் 29 காசு தரும் ஒன்றிய அரசு!
தமிழ்நாட்டில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே, ஒன்றிய அரசு நிதி கொடுக்க மறுக் கிறது. நாம் கொடுக்கும் ஜி.எஸ்.டி. வரி ஒரு ரூபாய் என்றால், ஒன்றிய பா.ஜ.க. அரசு திரும்பக் கொடுப்பது 29 காசுகள்தான்.
தமிழ்நாட்டில், 146 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங் களும், தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களும் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் மக்களோடு மக்களாக பழகக்கூடியவர்கள்!
தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், கனிமொழி போன்றோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஓடோடிச் சென்று பார்த் தனர். ஒரு அமைச்சர் எங்கே இருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை காவல்துறையின ரால், ஏனென்றால், தகவல் தொடர்பு அறுந்து போயிற்று. இடுப்பளவு தண்ணீரில்தான் இறங்கிப் போயிருக்கிறார்; தீவில் மாட்டியதுபோல் மாட்டிக் கொண்டார். எங்களு டைய அமைச்சர்கள் சட்டமன்றத்தை அலங்கரிக்கக் கூடியவர்கள் அல்ல; மக்களோடு மக்களாக பழகக் கூடியவர்கள்.
ஆனால், அதேநேரத்தில் நம்முடைய பிரதமர் மோடி என்ன சொல்கிறார், ‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்” என்று. நல்ல வசனம்தான், அதிலொன்றும் சந்தேகம் இல்லை. 140 கோடி மக்களும் இந்தப் பிரதமருக்குச் சொந்தக்காரர்கள் என்று சொன்னால், குடும்பம் என்று சொன்னால், அப்படி ஒரு பிரதமரைத்தான் நாங்கள் தேடுகிறோம். அதை உங்களால் கொடுக்க முடியாது – இந்தியா கூட்டணி அதனைக் கொடுக்கும்!
ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு, மோடியை ஒய்வெடுக்கச் சொல்வார்கள்!
ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு அதுபோன்ற ஒரு பிரதமரை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். இந்தப் பிரதமர், நம்முடைய அருமைச் சகோதரர் இராஜேந்திரன் அவர்கள் சொன்னதைப்போல, அவரை ஒய்வெடுக்கச் செய்வார். விரைவில் ஒய்வு எங்கு எடுக்கப் போகிறார் மோடி என்பதை முடிவு செய்யவேண்டியது மக்கள். சாதாரணமான ஒய்வாக அது இருக்காது.
நெருக்கடி காலத்தில்கூட ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சிறைச்சாலைக்குப் போனார்கள். ஆனால், இவர் மாறுவேடம் போட்டு வெளியில் அலைந்து திரிந்துகொண்டிருந்தார். இந்தத் தகவல்களையெல்லாம் ‘‘பிரதமர் மோடிக்குக் கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்” என்கிற புத்தகத்தில் தெளிவாக எழுதியிருக்கின்றோம்.
நெருக்கடி காலத்தில் மோடி எங்கே இருந்தார் என்ப தைப்பற்றி அந்தப் புத்தகத்தைப் படித்தால் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
வரலாற்றில் பொன்னேடுகளால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை!
எல்லாவற்றையும் தாண்டி நண்பர்களே, ஒரு பெரிய பெருமை என்னவென்றால் திராவிட மாடல் ஆட்சிக்கு – காலங்காலமாக வரலாற்றில் பொன்னேடுகளால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை என்னவென்றால், மதிய உணவு காமராஜர் காலத்தில், அதற்கு முன் தியாக ராயர் சென்னையில் தொடங்கி வைத்தார் நீதிக்கட்சி காலத்தில். அதற்குப் பிறகு வெள்ளைக்காரன் அந்தத் திட்டத்திற்கு நிதி கொடுக்கவில்லை என்பதால், நின்று போனது.
ஆட்சிகள் மாறலாம்; ஆனால், திட்டங்கள் தொடரும்!
அதற்குப் பிறகு கல்வி வள்ளல் காமராஜர் ஆட்சிக் காலத்தில். பிறகு, எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு பிறகு வந்த முதல மைச்சர் கலைஞர் அவர்கள், அந்தத் திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்ததினால், அந்த சத்துணவுத் திட்டத்தை நிறுத்தினாரா, என்றால், அதுதான் இல்லை. அந்தத் திட்டத்தைத் தொடர்ந் தார். அதுதான் திராவிட இயக்கத்தின் தனித்தன் மையாகும். ஆட்சிகள் மாறலாம்; ஆனால், திட்டங்கள் தொடரும்.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள், மாணவர்களுக்கு சத்துணவோடு இரண்டு முட்டைகளையும் அளித்தார். அதுவரையில் மாணவர்கள் தேர்வில்தான் முட்டையைப் பார்த்திருப்பார்கள். உடனே எதிர்க்கட்சியினர், ‘‘பாருங் கள், கலைஞர், சத்துணவில் முட்டை போடுகிறார்; சைவப் பிள்ளைகள் எல்லாம் என்ன செய்வார்கள்?” என்று பிரச்சினையைக் கிளப்பினார்கள்.
வாழை விவசாயிகளுக்குப் புதிய வாழ்வு கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
உடனே கலைஞர் அவர்கள், ‘‘அவ்வளவுதானே, சைவப் பிள்ளைகள் எல்லாம் இரண்டு வாழைப் பழங் களை சாப்பிடுங்கள்” என்று வாழைப் பழங்களைக் கொடுத்து, வாழை விவசாயிகளுக்குப் புதிய வாழ்வு கொடுத்தார்.
அந்த மதிய உணவுத் திட்டம் தொடர்ந்துகொண்டே வந்தது. இப்பொழுது நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளில் ஒன்றான ‘‘காலைச் சிற்றுண்டித் திட்டம்.” இங்கே தாய்மார்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கின்றீர்களே, அதற்கு என்ன காரணம்? காலையில் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்குக் காலைச் சிற்றுண்டி என்ன செய்வது? என்கிற கவலையில்லை இப்பொழுது. ஏனென்றால், பள்ளிக்கூடம் செல்லும் உங்கள் பிள்ளைகளுக்குக் காலைச் சிற்றுண்டி தயாராக பள்ளிக்கூடங்களில் இருக்கிறது. சக மாணவர்களுடன் அமர்ந்து காலைச் சிற்றுண்டியை சாப்பிடுகிறார்கள்.
எல்லா பிள்ளைகளும் சரிசமமாக அமரக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது!
இன்னொரு தத்துவமும் அதில் அடங்கியிருக்கிறது. ஜாதி இல்லை, மதம் இல்லை என்பதுதான் அது. ‘‘நான் அங்கே உட்கார மாட்டேன், இங்கே உட்கார மாட்டேன்; அவர் இன்ன ஜாதி, இவர் இன்ன ஜாதி” என்று சொன்ன நாட்டில், இன்றைக்கு எல்லாப் பிள்ளைகளும் சரிசமமாக அமரக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது.
இதனை செய்த பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய தனித்தன்மையாகும்.
பா.ஜ.க. ஆளுகின்ற குஜராத்தில் காலைச் சிற்றுண்டித் திட்டம் உண்டா?
‘‘குஜராத் மாடல், குஜராத் மாடல்” என்று சொல் கிறார்களே, அப்படிப்பட்ட குஜராத் மாநிலத்தில் காலைச் சிற்றுண்டித் திட்டம் உண்டா? அல்லது பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் காலைச் சிற்றுண்டித் திட்டம் உண்டா? தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் வரக்கூடாது என்கிறார்கள். அதற்கு என்ன சொல்லுவார்கள் என்றால், ‘‘டபுள் இன்ஜின்” என்பார்கள். டபுள் இன்ஜின் என்று சொல்வதே சரியானதா? என்று சிந்தியுங்கள்.
ஒரு இன்ஜின் இருக்கவேண்டிய இடத்தில், இரண் டாவது இன்ஜினைப் பொருத்தினால், இன்னொரு இன்ஜின் சரியாக இல்லை என்றுதான் நினைக்கவேண்டி இருக்கும். ஆனால், இரண்டு இன்ஜினையும் சேர்த்து, நம்முடைய ஒரு இன்ஜின், தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு இன்ஜின், இந்தியா முழுவதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும்.
இந்தியாவே தமிழ்நாட்டைப் பாராட்டுகிறது!
தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களைப் பார்த்து, மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. இந்தியாவே தமிழ்நாட்டைப் பாராட்டு கிறது. இந்தியா கூட்டணி என்பது அரசியல் ரீதியாக வந்தது.
ஆனால், அதற்கு முன்பாக இந்தியாவினுடைய ஒருமைப்பாடு எதில் வந்திருக்கிறது என்றால், நம்மு டைய வழிகாட்டுதலில், அங்கேயும் போய் இந்த காலைச் சிற்றுண்டித் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள், பல மாநிலங்களில்.
சில நாள்களுக்கு முன்பு வந்திருக்கின்ற மிக முக் கியமான செய்தி என்னவென்றால், கனடா நாடு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய காலைச் சிற்றுண்டி திட்டத்தை நாமும் செயல்படுத்தும்போது, பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள் என்று அந்தத் திட்டத் தைப் பின்பற்றுகிறது.
‘திராவிட மாடல்’ ஆட்சியினை உலக நாடுகள் புகழ்கின்றன!
அமெரிக்காவில் உள்ள முக்கியமான நான்கு மாநிலங் கள், தமிழ்நாட்டின் காலைச் சிற்றுண்டித் திட்டத்தைப் பின்பற்றுகின்றன.
எனவே, உலக நாடுகள் புகழக்கூடிய அளவிற்கு நம்முடைய முதலமைச்சர், ‘திராவிட மாடல்’ ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், மோடி என்ன சொன்னார்?
வேலை வாய்ப்பா? கவலைப்படாதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்.
அதன்படி பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில், 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கவேண்டுமே, கிடைத்ததா?
‘‘வேலை கொடுங்கள்” என்று இளைஞர்கள் கேட்டால், ‘வேல்’ கொடுக்கிறார்கள்!
இந்த ஊரிலிருந்து, நீலகிரி தொகுதிக்குப் போய் நிற்கிறார் ‘முருகன்ஜி’, அவர் என்ன செய்தார் தெரியுமா? ‘‘வேலை கொடு, வேலை கொடு” என்று கேட்ட படித்த இளைஞர்களின் கைகளில் ‘வேல்’ கொடுத்தார்.
ஒன்றிய அரசாங்க அலுவலங்களில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
இந்தியா கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றதும் அந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று ராகுல் காந்தி அவர்கள் உறுதிமொழி அளித்திருக்கிறார்.
ஒரு புதிய தொழிற்சாலையயாவது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி தொடங்கியிருக்கிறதா?
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறுவதற்கு இராமர் பாலம்தான் தடை என்றால், வேறு பாதையில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றலாமே? என்று கலைஞர் சொன்னார்.
இராமர் பாலம் இல்லை என்று ஒப்புக்கொண்டவர்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினார்களா?
இராமர் பாலம் இல்லை என்ற ஒன்று இல்லை; அது வெறும் மணல் திட்டுத்தான் என்று பா.ஜ.க. ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று உறுதி மொழி கொடுத்தார்கள். அதன்படி அந்தத் திட்டத்தை நிறைவேற்றினார்களா?
எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார் களா என்று எண்ணிப் பாருங்கள்.
இந்தியா முழுவதும் உள்ள ஏழை, எளியோரிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது
ஆனால், இப்பொழுது மோடி ‘கேரண்டீ’ என்று சொல்கிறார்.
தாய்மார்களை நோக்கி பிரதமர் மோடி என்ன சொன்னார் தெரியுமா?
‘‘தாய்மார்களே, உடனடியாக நீங்கள் வங்கிக் கணக்கைத் தொடங்குங்கள். அப்படி நீங்கள் தொடங் கியதும், உங்களது வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவோம்” என்றார்.
கிராமத்தில் உள்ள தாய்மார்கள் இடுப்பில் முடிச்சு போட்டு வைத்திருப்பார்கள் சுருக்குப் பை – அதில் சிறுக சிறுக சேமித்த பணத்தை வைத்திருப்பார்கள். இன்னும் சில தாய்மார்கள் வீட்டிலுள்ள அரிசிப் பானையில் சேமித்த பணத்தை வைத்திருப்பார்கள். அப்படி சேமித்த பணத்தைக் கொண்டு வங்கிக் கணக்கைத் தொடங்கினார்கள் அவர்கள்.
ஆனால், தொடங்கிய வங்கிக் கணக்கு அப்படியே இருக்கிறது; 15 லட்சம் ரூபாய் பணம் விழவில்லை. அதற்குப் பதிலாக வங்கி அதிகாரிகள், உங்களுடைய வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை; ஆகவே, அபராதம் விதிக்கப்படுகிறது என்று சொல்லி, இந்தியா முழுவதும் 21 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
ஊழலை ஒழிப்போம் என்று சொன்னவர்கள் செய்த – ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல்!
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்களே, ‘‘நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிறண்டாமல் இருந்தால் போதும்” என்று. அதுபோன்று, ஊழலை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை; சி.ஏ.ஜி. அறிக்கை சொல்கிறது.
ஒரு கிலோ மீட்டர் சாலை போடுவதற்கு 18 கோடி ரூபாய் என்று சொல்லிவிட்டு, பிறகு ஒரு கிலோ மீட்டர் சாலை போடுவதற்கு 250 கோடி ரூபாய் என்று கணக்குக் காட்டியிருக்கிறார்கள். அதன்மூலமாக ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருக்கிறது.
தேர்தல் பத்திரத் திட்டத்தின்மூலம் பா.ஜ.க.வின் மெகா ஊழல்!
தேர்தல் பத்திரத் திட்டத்தின்மூலமாக எவ்வளவு நன்கொடை வந்திருக்கிறது என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் உச்சநீதிமன்றம் கேட்டபொழுது, ‘‘கணக் குத் தெரியவில்லை” என்று சொல்லியிருக்கிறார்கள்.
உடனே உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘‘மார்ச் 6 ஆம் தேதிக்குள் அந்த கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு போட்டார்கள்.
மார்ச் 5 ஆம் தேதி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள் வாய்தா கேட்கிறார்கள், ‘‘நீங்கள் கேட்கும் கணக்குகளை தாக்கல் செய்வதற்கு எங்களுக்குக் கால அவகாசம் வேண்டும்; ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை அவகாசம் வேண்டும்” என்று.
எந்த நோக்கத்தோடு அவர்கள் ஜூன் 30 ஆம் தேதிவரை கால அவகாசம் கேட்டார்கள் என்றால், அதற்குள் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, முடிவுகளும் வந்துவிடும், அதனால்தான்.
இந்த விஷயம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா, என்ன?
இன்றைய காலகட்டம் கணினி யுகம் அல்லவா! நாங்கள் படித்த காலத்தில் கூகுள் கிடையாது. இப் பொழுது கூகுளில் எந்தத் தகவலையும் உடனடியாகப் பெறலாம்.
நான் வேடிக்கையாக சொல்வேன் நண்பர்களிடம், ‘‘பேரறிஞர் கூகுள் அறிஞர் என்ன பதில் சொல்கிறார்?” என்பேன்.
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர், ‘‘ஒரு பொத்தானை அழுத்தினால், அத்தனை தகவல்களையும் எடுத்துவிடலாமே! நீங்கள் எடுக்கிறீர்களா? அல்லது நாங்கள் அதற்குரிய நடவடிக் கைகளை எடுக்கவேண்டுமா?” என்று கேட்டனர்.
அதற்குப் பிறகுதான், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதற்குரிய ஆவணங்களைக் கொடுத்தனர்.
அதன்படி பார்த்தால், பா.ஜ.க. மட்டும் பெற்ற நன் கொடை 6 ஆயிரத்து 510 கோடி ரூபாய். இப்பொழுது இன்னும் புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண் டிருக்கின்றன.
நட்டத்தில் இயங்கிய நிறுவனங்கள் பா.ஜ.க.விற்கு நன்கொடை கொடுக்கின்றன!
45 நிறுவனங்கள் நன்கொடை கொடுத்திருக்கின்றது என்றால், அதில் 33 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி யவை. லாபத்தில் நடக்கின்ற நிறுவனம்தானே, நன் கொடை கொடுக்கும். நட்டத்தில் இயங்கும் நிறுவனம் நன்கொடை கொடுக்கிறது என்றால், அதற்குக் காரணம் நான் சொன்ன திரிசூல முறைதான்.
‘இந்து’ பத்திரிகையில் வெளிவந்த தகவல் ஒன்று. புதிய கம்பெனிகள் மூன்று ஆண்டுகள்வரையில் நன்கொடைகளைக் கொடுக்க முடியாது. இது பழைய சட்டம். ஆனால், புதிய கம்பெனியைத் தொடங்கியவுடன், நன்கொடை கொடுத்து, சட்டத்தையே மீறியிருக்கிறார்கள். அதற்குக் கிரிமினல் தண்டனை என்று சொல்லி, அந்த வழக்கும் விசாரணைக்கு வந்திருக்கிறது.
ஊழலை தலைமேல் வைத்துக்கொண்டு, அவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘‘தி.மு.க. ஊழலை நாங்கள் வெளிக் கொண்டுவருவோம்” என்கிறார்கள்.
தாராளமாகக் கொண்டுவாருங்கள். அந்தக் காலத்தில், கலைஞர்மீது வழக்குப் போட்டீர்களே, என்றைக்காவது அதை நிரூபிக்க முடிந்ததா? பிறகு வழக்குப் போட்ட வர்களே, அதனைத் திரும்பப் பெற்றனர்.
இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் அமைச்சர் கள்மீது வழக்குப் போட்டார்களே, உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது?
எங்கள் முதலமைச்சரின் பெருமை!
எங்களுடைய முதலமைச்சருக்கு என்ன பெருமை தெரியுமா? ‘‘என்மீது யாரோ புகார் சொல்லியிருக்கிறார்கள்; என்மீது நடவடிக்கை எடுங்கள்” என்று எங்கே போனார் தெரியுமா? டிஜிபி அலுவலகத்திற்குச் சென்றார். இங்கே அதற்கு சாட்சிகளாக இருக்கிறார்கள்.
டிஜிபி அலுவலகத்திற்குச் சென்ற நம்முடைய முதலமைச்சர், டிஜிபிக்கு முன் நின்று, ‘‘என்மீது வழக்குத் தொடருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நானே நேரிடையாக வந்திருக்கிறேன்” என்று சொன்ன ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர்தான்.
ஆகவே, ஊழலைப்பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.
உங்கள் ஆட்சியாளர்கள் எவ்வளவு திருப்தி அடைவார்களோ, அதுவரையில் தண்டனை கொடுங்கள்!
ஒருமுறை தந்தை பெரியார் ஒரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்குச் சென்றபொழுது, நீதிபதி அவர்கள், ‘‘உங்களுக்காக வாதாடுகிறீர்களா?” என்று கேட்டார்.
‘‘இல்லை. வாதாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிகபட்ச தண்டனையாக உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ, கொடுங்கள். உங்கள் ஆட்சியாளர் கள் எவ்வளவு திருப்தி அடைவார்களோ, அதுவரையில் கொடுங்கள்” என்று சொன்ன பெருமை தந்தை பெரியாரைச் சாரும்.
அந்தப் பெரியார் பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள் தான் அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
அதேபோன்று, உதயநிதி ஸ்டாலின் ஒரு இளைஞர். நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன், எந்த வழக்கையும் நான் சந்திக்கின்றேன் என்று சொன்ன துணிச்சல் இருக்கிறதே, அது இந்த இயக்கத்தையும், துணிச்சலையும் பிரிக்க முடியாது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.
கரோனாவும் – உலக நாடுகளின் கேலியும்!
கரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி என்ன சொன்னார்?
‘‘ஊவென்று சத்தகம் கொடுங்கள், கரோனா ஓடி விடும்!
கைதட்டுங்கள், கரோனா ஓடிவிடும்!
பூக்களைக் கொட்டுங்கள், கரோனா ஓடிவிடும்!
வீட்டில் விளக்கேற்றுங்கள், கரோனா ஓடிவிடும்!” என்றுதானே! இதை உலக நாடுகள் கேலி செய்தன! இறந்து போனவர்களைத் தவிர, உயிரோடு இருக்கும் நாமெல்லாம் அதற்கு சாட்சிதானே!
கரோனா பாதித்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர்கள் இரண்டு பேர்!
அந்த நேரத்தில், கரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களை சிகிச்சைப் பெறுகின்ற மருத்துவ மனைக்கே சென்று பார்த்தவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நம்முடைய மா.சு. அவர்கள்.
நானே வருகிறேன் என்று, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறும் பிரிவிற்கே பாதுகாப்பு உடை அணிந்து நேரில் பார்த்து ஆறுதல் சொன்னவர்தான் நம்முடைய துணிவுமிக்க முதலமைச் சர் அவர்கள்.
கரம் கொடுப்பது நட்புக்காக அல்ல – லட்சியத்திற்காக!
நெருக்கடி காலத்தில், நாங்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டோம். அப் பொழுது, தளபதி மு.க.ஸ்டாலினை அடித்துக் கொண்டு வந்து, ரத்தம் சொட்டச் சொட்ட உள்ளே தள்ளினர்; அவர் என்மீதுதான் விழுந்தார். அன்றைக்கு அவரைத் தூக்கிப் பிடித்த கரம், இன்றைக்கும் தூக்கிப் பிடிக்கிறது; என்றைக்கும் தூக்கிப் பிடிக்கும். கரம் கொடுப்பது நட்புக்காக அல்ல – லட்சியத்திற்காக!
இப்பொழுது இரண்டு தொழிற்சாலைகளைத்தான் பிரதமர் மோடி தொடங்கியிருக்கின்றார்.
பொய்த் தொழிற்சாலை – தூய்மைப்படுத்துகின்ற தொழிற்சாலை!
ஒன்று, நாளும் பொய்யை விடாமல் தயாரிக்கின்ற பொய்த் தயாரிப்புத் தொழிற்சாலை. உதாரணத்திற்கு ஒன்று, நடிகர் ஒருவர் புதிதாக கட்சித் தொடங்கி யிருக்கிறார். அவர் என்ன சொன்னார்? ‘‘நாங்கள் இப்பொழுது நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டோம்” என்று.
ஆனால், பொய்த் தொழிற்சாலையில் பணியாற்று பவர்கள் என்ன பொய்ச் செய்தியைப் பரப்பினார்கள் என்றால், ‘‘அந்த நடிகர், திராவிட இயக்கத்தை ஆதரிக்க மாட்டோம்” என்று சொல்லியிருக்கிறார்” என்றார்கள்.
உடனே அந்த நடிகர், ‘‘எங்களுக்கும், அந்தச் செய் திக்கும் சம்பந்தமில்லை” என்று அறிக்கை கொடுத்தார்.
மோடியின் இன்னொரு தொழிற்சாலை என்னவென் றால், ஊழல் செய்தவர்களும், கிரிமினல் குற்றவாளிகளும் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன், தூய்மையானவர்களாக ஆகிவிடுவார்களாம். வாசிங் மிஷின் தொழிற்சாலையை வைத்திருக்கிறார்கள் – தூய்மைப்படுத்துகின்ற தொழிற் சாலை. இது அதிகார துஷ்பிரயோகம்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை பலமுறை நீதிமன்றங்கள் கண்டித்திருக்கின்றன!
எனவே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் ‘மெகா ஊழல்’ – அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை, நீதிமன்றங்கள் பலமுறை கண்டித்திருக்கின்றன.
மணிப்பூரில் பழங்குடியின சமுகத்தைச் சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தெருத் தெருவாக ஓடவிட்டார்களே, அதனைக் கண்டித்தாரா? பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சென்று
சந்தித்தாரா பிரதமர் மோடி? ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான்!
தமிழ்நாட்டில் மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாரா பிரதமர் மோடி?
ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான்!
பச்சை விளக்கு எரிந்தால், இருட்டு விலகி, வெளிச்சம் வரும்!
எனவே, நீங்கள் வருகின்ற 19 ஆம் தேதியன்று வாக்குச் சாவடிக்குச் சென்று, கை சின்னத்திற்கு நேரே இருக்கின்ற பொத்தானை அழுத்துங்கள்; பொத்தானை அழுத்துகின்ற கையை உடனடியாக எடுத்துவிடாதீர்கள்; பச்சை விளக்கு எரிகிறதா? என்று பாருங்கள். அப்படி பச்சை விளக்கு எரிந்தால், அங்கே மட்டும் விளக்கு எரியாது; உங்கள் வீட்டிலும் விளக்கு எரியும், உங்கள் நாட்டிலும் விளக்கு எரியும். இருட்டு விலகும், வெளிச்சம் வரும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையும்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒருங்கிணைந்தவை!
இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இந்த இரண்டு தேர்தல் அறிக்கையும் ஒருங் கிணைந்து இருக்கிறது.
இந்நிலையில், ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்களே, ரத்து செய்துவிட்டார்களா?” என்று ஒருவர் கேட்கிறார்.
யார் அவர்? நீட் தேர்வு குறித்த ஒன்றிய அரசின் நிராகரிப்பையே மூடி மறைத்தவர்கள் யார்?
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் ‘நீட்’ தேர்வு குறித்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதை வெளியில் சொல்ல வில்லை. நீதிமன்றத்தின் மூலமாகத்தான் அந்த செய் தியே வெளியில் வந்தது.
ஆனால், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிபடி, சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வந்து நிறை வேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், இங்கே இருக்கின்ற ஓர் ஆளுநர், ஆளுநர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கின்றார்.
அப்படிப்பட்ட அந்த ஆளுநர், அந்த மசோதாவைக் கிடப்பில் போட்டு வைத்தார்.
மறுபடியும், அந்த மசோதாவை நிறைவேற்றி, மீண் டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது ‘திராவிட மாடல்’ ஆட்சி.
ஆளுநருடைய வேலை என்ன? தபால்காரர் வேலைதானே ஆளுநருக்கு. அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
உள்துறையில், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கிடப்பில் இருக்கிறது என்றால், அதற்கு யார் பொறுப்பு?
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு!
ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த வுடன், நீட் தேர்வை, எந்தெந்த மாநிலம் விரும்பவில் லையோ, அந்தந்த மாநிலங்களுக்கு விலக்கு அளிக் கப்படும் என்று தி.மு.க. அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக் கையில், ‘‘ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், நீட் தேர்விலிருந்து யார் யார் விலக்குக் கேட்கிறார்களோ, அவர்களுக்கு விலக்குக் கொடுக் கப்படும்” என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
இதுபோன்ற ஒருங்கிணைப்பு அந்தக் கூட்டணியில் உண்டா?