சென்னை.செப்,19- பெரியார், அண்ணா, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கலந்து கொண்டு இருபால் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி னார்.
ஆசிரியர் தொடங்கி
வைத்த குடிநீர் திட்டம்!
மாநிலக் கல்லூரி அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் (IQAC), மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்திய பெரியார், அண்ணா, சர்வபள்ளி ராதாகிருஷ் ணன் ஆகியோரின் முப்பெரும் விழா, சென்னை மாநிலக் கல்லூரியின் திருவள்ளு வர் அரங்கில் 15.9.2023 அன்று நண்பகல் 12 மணி அளவில் நடைபெற்றது. தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாணவர் குழாம் பாடினர். அதைத் தொடர்ந்து, மேனாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் சா. இராசராசன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. இராமன் தலை மையேற்று உரையாற்றினார். மேனாள் மாணவர் சங்கம் தலைவர் மெய். ரூஸ்வெல்ட் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து, மேனாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் நினைவாக அவரைப் பற்றிய சில தகவல் களை, அகில இந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் முனைவர் இராம. குருநாதன் மாண வர்களிடையே பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து மேனாள் நாடாளுமன்ற உறுப் பினர் டி.கே.எஸ். இளங்கோவன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சில அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். முன்னதாக முதல்வர், பேராசிரியர்கள் முன் னிலையில் மாணவர்களுக்கான சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
கல்வியுடன் சேர்ந்து பகுத்தறிவையும் கற்றுக்கொள்ளுங்கள்!
இறுதியாக தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பற்றி ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில், பெரியார் சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடியவர் என்று தத்துவரீதியாகத் தொடங்கி, ஏன் அப்படிப் போராடவேண்டிய நிலை உருவானது? என்பதைப் பற்றி விளக்கினார்.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத பிறவிப் பேதம் இங்குதான் நிலவியது. அதை எதிர்த்துதான் இவ்விருவரும் போராடினர் என்று கடந்த காலத்தைக் குறிப்பிட்டுவிட்டு, இன்று இந்த அரங்கத்தில் 50 விழுக்காடு மாணவிகள் இருக்கிறீர்கள். இதுவே தத்துவத் தலைவர் பெரியாருக்கும், அவரது மாணாக் கர் அண்ணாவுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி! இதுதான் மாபெரும் கல்விப் புரட்சி! அமைதிப் புரட்சி! என்று அடுக்கினார்.
மாணவிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாணவர்களும் கைதட்டி ஆரவாரித்தனர். இதற்கிடையே கல்லூரி முதல்வர், ஆசிரியரை அணுகி, ஏதோ முணுமுணுத்தார். ஆசிரியர் கூர்ந்து கேட்டார். ”முதலமைச்சரின் புதுமைப் பெண் திட்டத்தில், இந்தக் கல்லூரியில் சென்ற ஆண்டைக் காட்டிலும் 42 விழுக்காடு மாணவிகள் அதிகரித்திருக்கிறார்கள்’ என்ற மகிழ்ச்சியான செய்தியை கல்லூரி முதல்வர் சொல்லியிருக்கிறார்” என்று உற்சாகத்துடன் கூறி மாணவிகளின் உற்சாகத்தை எகிற வைத்தார்.
தொடர்ந்து, “செவ்வாய் கோளுக்கு போன பிறகும், கோயில் கருவறைக்குள் போக முடியாத நிலை இருந்தது. இன்று ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கரு வறைக்குள் சென்றுவிட்டனர். அந்த பேதமும் அகன்றுவிட்டது” என்று ஒரே போடாக போட்டதும், மாணவிகளின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. தொடர்ந்து நமது பண்பாடு என்பது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான். மனிதர்களிடையே பேதம் இருக்கக்கூடாது. அதற்காக போராடி வெற்றி பெற்ற தலைவர்களுக்குதான் இங்கே பிறந்த நாள் விழா கொண்டாடுகிறோம். மாணவச் செல்வங்களே, இந்த பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடுவது பெரியாருக்காக அல்ல! அண்ணா பிறந்தநாள் விழா கொண் டாடுவது அண்ணாவுக்காக அல்ல! உங்கள் எதிர்காலத்திற்காக! ஆகவே உங்கள் படிப்பு டன் சேர்த்து பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
சமூகநீதிநாள் உறுதிமொழியேற்பு!
நன்றியுரைக்கு முன்னதாக, தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி, தமிழ்நாடு அரசால் சமூகநீதி நாளாக அறிவித்திருப்பதை ஒட்டி, மாநிலக் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. இராமன், சமூகநீதி நாள் உறுதிமொழியான, ‘பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை வாசிக்க, மேடையிலிருந்தும், அரங்கத்திலி ருந்தும் அனைவரும் எழுந்துநின்று, உணர்ச்சி பொங்க வலது கையை நீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள்!
மேனாள் மாணவர் சங்கப் பொதுச் செயலாளர் எம்.ஆர்.இளங்கோவன் நன்றி யுரை கூறினார். இறுதியாக மாணவர் குழாம் நாட்டுப்பண் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் பெருமக்கள் பெருமளவு கலந்துகொண்டனர். கழக துணைப்பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், ஜெயராமன், அரும்பாக்கம் தாமோதரன், அயனாவரம் துரைராஜ், சைதாப்பேட்டை சேகர், உடுமலை வடிவேல், கமலேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்தபிறகு ஆசிரியர் செய்தியாளர் களை சந்தித்தார்.