2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து, பத்தாண்டுகள் நிறைவுறும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்குச் செய்த நலன்கள், நாட்டுக்கான வளங்கள் இன்னின்னவை என்று விரல் விட்டு எண்ணிச் சொல்லும் நிலையில் இல்லை.
ஏழைத் தாயின் மகன் என்றும், டீ விற்றவன் என்றும், சில சந்தர்ப்பங்களில் தன்மீது இரக்கம் ஏற்படும் வகையில் கண்ணீர் மல்கப் பேசுவது அவரின் தலை சிறந்த நடிப்பு.
அதே நேரத்தில் தான் அணியும் உடையின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று பெருமிதமாகப் பேசி தன் முதுகைத் தட்டிக் கொள்வார்.
இந்தியா ஒரு விவசாய நாடு. முக்கியமாக விவசாயத்தின் வளர்ச்சிக்கும், அதில் பாடுபடும் விவசாயிகளுக்கும் அவர் செய்தது என்ன என்ற கேள்வியை எழுப்பினால், கிடைக்கும் விடை சுழியம்தான்!
2014க்கு முன்னர் ஒரு மூட்டை பூச்சிக்கொல்லி மருந்தின் விலை ரூ.350. இன்றைக்கோ அதன் விலை ரூ.1800; கிட்டத்தட்ட அய்ந்து மடங்கு.
கரோனா கால கட்டத்தில் எல்லாத் தொழில்களும் நசிந்தன; வேலை வாய்ப்புகள் பறி போயின. விவசாயிகளின் நிலையோ சொல்லுந்தரமன்று! அந்தக் கால கட்டத்தில்கூட விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முன் வராத ஒரு கல்லுமனம் – நமது பிரதமருக்கு!
தமிழ்நாட்டில் பெரு மழை வெள்ளத்தால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் விவசாயம் பேரிழப்புக்கு ஆளாகி, அதன் தொழிலாளர்கள் ஆற்றொண்ணாத் துயர வெள்ளத்தில் மூழ்கினர்.
ஆனால், ஒன்றிய பிஜேபி அரசோ பாராமுகம் காட்டியது. பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்தார்; நிதி அமைச்சர் வந்தார், ஒன்றிய அரசின் அதிகாரிகள் வந்தனர் – பார்வையிட்டனர். தமிழ்நாடு அரசு சிறப்பான நிவாரணப் பணிகளைச் செய்துள்ளது என்று பாராட்டி விட்டுச் சென்றதுதான் மிச்சம்.
ஒரு பைசாகூட நிவாரண நிதியை அளிக்க மனம் இல்லை ஒன்றிய பிஜேபி அரசுக்கு – பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பிரதமர் பெருமான் வரவில்லையா? வந்தார் – வந்தார் – வராமல் இருப்பாரா? பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லி, நிவாரண உதவியை உறுதியாக வழங்குவேன் என்று கூறுவதற்காகவா வந்தார்? அல்ல – அல்ல! மாறாக தேர்தல் பரப்புரைப் பயணத்துக்குத் தான் அந்த வருகைகளைப் பயன்படுத்திக் கொண்டார். குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாலு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுவதற்குக்கூட அவர் நாக்குச் சுழவில்லை.
மற்றபடி மேடை ஏறி, நாவைச் சுழற்றி, குரலை ஏற்றி இறக்கி, நாடக பாணியில் உரத்துப் பேசக் கூடியவர்தானே இந்த விஸ்வ குரு!
ஒரே கையொப்பத்தில் 7,000 கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் எங்கே? இந்தப் பிரதமர் மோடி எங்கே?
இவ்வளவுக்கும் ஒரு மாநில அரசு 7,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்வது என்றால், அது சாதாரணமா? ஆனால் மாநில வருவாய்களைக்கூட தன் கஜானாவில் நிரப்பக் கூடிய ஒன்றிய அரசு ஏழை விவசாயிகளிடம் கூட இரக்க உணர்வைக் காட்டவில்லையே! எண்ணிப் பார்க்க வேண்டும் – இது மக்கள் நல அரசா?
இந்த நேரத்தில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.
விவசாயிகளுக்குப் பேரிடர் காலத்தில் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டால், அவர்களைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்டதுதான் பயிர் காப்பீடு திட்டம்!
அறிவித்ததோடு அல்லாமல், அது சரிவர நடந்தேற தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் என்கிற ஒரு பொதுத்துறையே உருவாக்கப்பட்டது.
இதில் என்ன கொடுமை தெரியுமா? சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி. சிங் அரசின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்த இந்தக் காப்பீட்டுத் திட்டம், மோடியின் ஆட்சியில் (2018) 13 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவலத்தை மன்னிக்க முடியுமா?
விவசாயிகள் என்றால் கண் நோய் மோடி அரசுக்கு – இப்பொழுதுகூட மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடவில்லையா?
ஆண்டுக்கணக்கில் விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராடினார்களே! வேறு வழியில்லாமல் அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறி, போராட்டத்தை விலக்கிக் கொள்ளச் செய்து, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாத நிலையில், மீண்டும் விவசாயிகள் போராடும் நிலை ஏற்பட்டு விட்டதே! விவசாயிகள் டில்லிக்குள் நுழைய விடாமல் தடுத்திட எத்தகைய கொடூரமான வேலைகளைச் செய்தது ஒன்றிய பிஜேபி அரசு!
சாலைகளில் ஆணிகளை அடித்து வைக்கும் அளவுக்கு, இரும்பு மனம் படைத்த மனித உருவங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் வழக்கமான ‘வழிப்பறி’ வேலையைச் செய்தது பிஜேபி அரசு.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையில் 49 விழுக்காடு ஒன்றிய அரசும், 49 விழுக்காடு மாநில அரசும், விவசாயிகள் 2 விழுக்காடும் பிரீமியம் செலுத்தி வந்த நிலையை மாற்றி ஒன்றிய அரசு தனது பங்குத் தொகையை 25 விழுக்காடு என்று குறைத்து விட்டது.
இந்தச் சுமை மாநிலங்களின் தலையில் தான் விடிந்தது. கொள்ளை அடிக்கும் வட்டிக் கடையை நடத்தும் மனப்பான்மைக்குப் பெயர்தான் ஒன்றிய பிஜேபி அரசு.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பிஜேபி அரசை வரும் தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா?
எந்தத் தரப்பினர் இந்த ஆட்சியை ஏற்கின்றனர் கார்ப்பரேட்டுகளும், ஆதிக்க ஜாதியினரையும் தவிர?
எனவே வாக்காளப் பெரு மக்களே, உங்கள் வாக்குகளை இந்தியா கூட்டணிக்கே அளித்து, பாசிசம் இனி எந்தக் காலத்திலும் தலை எடுக்க முடியாதபடி தண்டனையை அளிப்பீர்! அளிப்பீர்!!