இரண்டு பேரைக் கண்டுதான் பிரதமர் மோடி அஞ்சுகிறார்!
ஒருவர் வடக்கே இளந்தலைவர் ராகுல் காந்தி! மற்றொருவர் தெற்கே திராவிட நாயகன் ஸ்டாலின்!
அய்ந்தாம் நாளில் இரண்டு தொகுதிகளில் ஆசிரியர் சுற்றுப்பயணம் செய்து எழுச்சி உரை ஆற்றினார்!
கோவை, நீலகிரி. ஏப். 7, நாடாளுமன்றத் தேர்தலில் ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து ஆசிரியர் அயந்தாம் நாளாக கோவை, நீலகிரி தொகுதிகளில் உரை யாற்றினார்.
அய்ந்தாம் நாளில் முதல் கூட்டமாக – தி.மு.க. தலைமையிலான ’இந்தியா’ கூட்டணியில் கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக தி.மு.க. சார்பில் ப.ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தெப்பக்குளம் மணிக்கூண்டு அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் 6.4.2024 சனிக் கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவையில் தமிழர் தலைவர்!
கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர்
மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்
இக்கூட்டத்திற்கு கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ. பிரபாகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திமுக. கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக், தமிழ்ப்புலிகள் கட்சி மாநிலத் தலைவர் நாகை திருவள்ளுவன், சி.பி.அய். மாநகர் செயலாளர் முருகன், மக்கள் நீதி மய்யம் மாவட்டத் தலைவர் பிரபு, கோவை மாமன்ற உறுப்பினர் சர்மிளா சுரேஷ், வி.சி.க. மாவட்டச் செயலாளர் குமணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்புச் செயலாளர் கா.சு.நாகராசன், தி.மு.க. பகுதிச் செயலாளர் மனோகரன், தி.மு.க. வட்டச் செயலாளர் சுரேஷ் நாராயணன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ரவிக்குமார், தி.மு.க. மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிசெல்வன், தி.மு.க. துணைச் செயலாளர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
கழகத்தின் சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் மு. தமிழ்ச்செல்வம், கோவை நகரத் தலைவர் தி.க. செந்தில்நாதன், மாவட்ட துணைச் செயலாளர் தி.க. காளிமுத்து, மாநகரச் செயலாளர் புலியகுளம் வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, கழகக் காப்பாளர் பொள்ளாச்சி பரமசிவம், பொள்ளாச்சி கழக மாவட்டத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
பெரியார் பெருந்தொண்டர் புலவர் அப்பாவு அவர்களுக்கு
தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
தி.மு.க. மாவட்டச் செயலாளர், காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் இருவரும் தி.மு.க.வின் சாதனைகளைச் சொல்லி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர். இறுதியாக ஆசிரியர் பேசுவதற்கு முன்னால், தோழர்கள், தோழமைக் கட்சிப் பிரமுகர்கள் அணியணியாக, குடும்பம் குடும்பமாக மேடையேறி ஆசிரியருக்கு ஆடை அணிவித்தும், புத்தகங்களை பெற்றுக்கொண்டும், சிலர் சுய ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். அத்தனைக்கும் ஆசிரியர் சளைக்காமல் ஈடுகொடுத்தார்.
இறுதியாக ஆசிரியர் உரையாற்றினார். மக்கள் கூட்டம் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையில் இருந்ததால், எல்லையற்ற மகிழ்ச்சியுடன், ஒரு அரிய வரலாற்றுத் தகவலைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, 1948 இல் தந்தை பெரியார் இங்கே வந்து பேசியிருக்கிறார் என்றும், இங்கே ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டு, தந்தை பெரியார் அவர்கள் அதைத் திறந்திருக்கிறார்கள்” என்று பெருமிதத்துடன் கூறிவிட்டு, ”கருணா எ. பொன்னுசாமி, சி,கே,சுப்பிரமணி, என்.புள்ளாரி, ஆர்.கே.வேதாசாமி, கே.எஸ்.மணி, பட்டிலிங்கம், சி.ஆர்.மல்லிகார்ஜூன், சின்னப்பா போன்ற டிரஸ்ட் உறுப்பினர்கள் பெயர்களை படித்துக் காட்டி விட்டு, வேறு எந்த ஊருக்கும் இந்த வரலாற்று சிறப்பு இல்லை” என்று முடிப்பதற்குள் வியப்பி லாழ்ந்திருந்த மக்கள் உணர்ச்சியுடன் கையொலி எழுப்பினர்.
பாலியல் சமத்துவமும்! திராவிடர் இயக்கமும்!
அவர் தமது உரையில், நாற்காலிகளில், மேடையில் மகளிர் ஏராளமானோர் அமர்ந்திருந்ததால் தேர்தல் பரப்புக்கூட்டம் என்பதைக் கூட சற்றே புறம் தள்ளி திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகளுக்கு முன் சென்றுவிட்டார். பெண்கள் ரசிக்கும்படியாக அந்த வரலாற்றை ஒரு கழுகுப்பார்வை போல் காட்டினார். எப்படிப்பட்ட இயக்கம் நம் இயக்கம் என்பதை பெருமை கொள்ளும் விதமாக சுட்டிக்காட்டினார். அதனுடைய தொடர்ச்சியாக இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி மகளிருக்கு செய்து வரும் திட்டங்களை அடுக் கினார். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மகளிரை எப்படிப் பார்க்கிறது? என்பதையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் விளக்கினார். பின்னர் தேர்தல் ஜனநாயகம், பா.ஜ.க.வுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதைப் பற்றியெல்லாம் விவரித்து தனது உரையை நிறைவு செய்தார். இறுதியாக கோவை கணபதி பகுதிச் செயலாளர் ச. திராவிட மணி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். வேட்பாளர் ப.ராஜ்குமார் வந்துவிடவே, ஆசிரியர் பேசியதற்குப் பின்னர் சுருக்கமாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தொழில்துறை முதலீடுகள் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களும் வந்து ஆசிரியரை சந்தித்து உரையாடி விட்டுச் சென்றார்.
தொடர்ந்து அங்கிருந்து நீலகிரி தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நீலகிரி தொகுதி வேட்பாளருமான ஆ.ராசா அவர்களை ஆதரித்து விவேகானந்தர் நகர் (கேஸ் கம்பெனி) அருகில் திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக புறப்பட்டுச் சென்றார்.
நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் விவேகானந்தர் நகர் (கேஸ் கம்பெனி) அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சு. வேலுச்சாமி தலைமையேற்றார். செயலாளர் அறிவரசு வரவேற்புரை நல்கினார். தமிழ்க்காப்பு கூட்டு இயக்கப் பொறுப்பாளர் அப்பாவு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மனோகரன், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் சிவசாமி, கூடலூர் நகர் மன்ற துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், சி.பி.அய்.(எம்) வட்டாரச் செயலாளர் மோகன்ராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ராதாகிருஷ்ணன், திராவிட இயக்க தமிழர் பேரவை கா.சு. நாகராசன், தமிழ்ப்புலிகள் கட்சி சபாபதி, சமூக நீதிக்கட்சி நாகராசன், வி.சி.க.பொறுப்பாளர் பெருமாள், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்திவேல், தி.மு.க. பொறுப்பாளர்கள் முருகானந் தம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பூர்ணிமா, நகர்மன்ற உறுப்பினர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித் தனர். கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் அரங்கசாமி, கழகக் காப்பாளர்கள் சாலை வேம்பு சுப்பையன், காரமடை ஒன்றியத் தலைவர் அ.மு.ராஜா, நகரச் செயலாளர் வே.சந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மு.வீரமணி, மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.பிரதீப், மாவட்டத் துணைத் தலைவர் பாசமலர் ஆறுமுகம், மேனாள் மாவட்ட தி.க. தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
எங்கள் கொள்கைத் தங்கம் ஆ.ராசா!
தொடர்ந்து உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டு, இந்தியா கூட்டணி கொள்கைக் கூட்டணியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் அவர், திராவிட மாடல் செயல் மாடல்! குஜராத் மாடல் விளம்பர மாடல்! என்பதை தரவுகளுடன் எண்பித்தார். நீலகிரி பா.ஜ.க. வேட்பாளர் விலைவாசி உயர்வு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “ஜெய்சிறீராம்” என்று பதிலளித்ததை எள்ளி நகையாடினார். 2ஜி ஊழல் என்று இன்றைக்கும் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு விளக்கமாக விடுதலை நாளிதழை ஆதராகமாகக் கொண்டு விளக்கினார். அதைத் தொடர்ந்து சாகர்மாலா சாலைத் திட்டத்தில் 7,50,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கை வெளிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, “யோக்கியர் வருகிறார் செம்பை எடுத்து உள்ளே வை” என்று பெரியார் சொல்லும் பழமொழியை நினைவூட்டினார். தொடர்ந்து மோடி இரண்டு பேருக்குத்தான் அஞ்சுகிறார். வடக்கே இளந்தலைவர் ராகுல் காந்தி! மற்றொருவர் தெற்கே திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்!” என்று சொல்லி முடிப்பதற்குள் விசில் ஓசையும், கைதட்டலும் ஒருங்கே எழுந்து அடங்கியது. இறுதியில், கொள்கைத் தங்கம் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சி எழுச்சிகரமாகத் தொடங்கி மிகுந்த எழுச்சியோடு நிறைவு பெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் களுக்கும் மிகுந்த மன நிறைவு. தொடர்ந்து ஆசிரியர் தலைமையிலான பரப்புரைப் பயணக்குழு,. குன்னூர் நோக்கி பயணத்தைத் தொடங்கியது.
யோக்கியர் வருகிறார், செம்பை எடுத்து உள்ளே வை!
நீலகிரி தொகுதியில் நிற்கும் பா.ஜ.க. வேட்பாளர் 2ஜி யைப் பற்றி பேசுகிறார். இதைவிட ஒரு மோசடி கிடையாது. 1 போட்டு, அதற்குப் பக்கத்தில் 76 போட்டு, அதற்குப்பின்னால் பூஜ்யம் போட்டுக் கொண்டே செல்கிறார்கள். அந்த பூஜ்யத்தை வைத்தே ராஜ்யத்தைப் பிடித்தார்கள். மீண்டும் அதைப் பற்றி பேசுகிறீர்களே, வெட்கப்பட வேண்டாமா? வழக்கு நடந்தது. எங்கள் ராசா அநியாயமாக, அக்கிரமமாக அழி வழக்கிலே; பொய் வழக்கிலே திகார் சிறையில் இருந்தார். அவர் வழக்கை அவரே எடுத்து நடத்திய சட்ட மேதை எங்கள் ராசா! அந்தக்காலத்திலேயே எம்.எல். படித்தவர்! இந்த அழி வழக்கிலே எங்கள் கொள்கைச் செல்வம் கனிமொழி அவர்களையும் ஓராண்டுக்கு மேலே திகார் சிறையில் வைத்தார்கள்.
நீதிபதி ஓ.பி.சைனி அவர்கள், சி.பி.அய்.யைப் பார்த்து “நீங்கள் வாய்தா, வாய்தா என்று கேட்டீர்கள். புதிய தரவுகள் தேவை என்கிற அடிப்படையில் நாங்களும் அனுமதித்தோம். ஆனால் காத்திருந்தேன், காத்திருந்தேன் ஒரு ஆதாரத்தையும் நீங்கள் தரவில்லை” என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
2ஜி யில் யூகத்தின் அடிப்படையில் இவ்வளவு வந்திருக்க வேண்டும் என்று சொன்னார்களே, 2 ஜிக்கு 30 Mhts, 2 ஜி யூக இழப்பு 1,76,000 கோடி என்றார்கள். இது கற்பனை; நடக்கவில்லை. ஆனால், 5ஜிக்கு 51,000 Mhts. 2 ஜி மெகா ஹெர்ட்ஸ், 5ஜி என்பது 51 ஜிகாஹெர்ட்ஸ், 2ஜியை விட 5ஜி 5 மடங்கு வேகமும் திறனும் அதிகம். ஏலமும் கூட அதிகத் தொகையில் (8,80,000 கோடி) வந்திருக்க வேண்டாமா? அதுதானே நியாயம்? என்ன நடந்தது? 51,000 விலீts உள்ள 5 ஜி விற்பனை என்ன தெரியுமா? வெறும் 1,50,173 கோடி! 2ஜியை விட 5 ஜி 20 மடங்கு கூடுதல் திறன் உள்ளது. ஏன் அதிகமாக ஏலம் போகவில்லை? அதை ஏலம் எடுத்தது அதானி குழுமம்! இப்போது புரிகிறதா?
2ஜி என்பது யூக இழப்பு. 5ஜி என்பது உண்மையாக நடந்தது. இப்போ நாடே அதானி தானே? நிதி கிடைக்கலையேன்னு அமித்ஷாவோ, நட்டாவோ மோடியைப் பார்த்து கேட்டால், மோடி தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவரைப் பார்த்து, அதான் நீ (அதானி) என்பார். பிறகு அம்பானி இருக்கிறார். உங்களுக்கும் எங்களுக்கும் எதுவும் கிடையாது.
ஆனால், மோடி என்ன சொல்கிறார்? ”140 கோடி மக்களும் என் குடும்பம்” என்பார். மணிப்பூர் பக்கம் திரும்ப மாட்டார். திருநெல்வேலி பக்கம் போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் என்னன்னு கேட்கமாட்டார். ரோட் ஷோ போவாரே தவிர மக்களுக்கு எதையும் செய்ய மாட்டார்.
5ஜி ஏலம் எடுத்த ஏர்டெல், அதானி, அம்பானி, வோடோபோன் ஆகியோர் கொள்ளை லாபம் அடித்து விட்டு, அனைவரும் சேர்ந்து ஒன்றிய அரசுக்கு கொடுக்கிற வரி எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு ரூ.13,365 கோடி தான். அவ்வளவுதான். ஏன்னா அவங்க பரம ஏழைகள்! யாருக்கான அரசு இது? 2ஜி ஊழல் என்று சொன்னால், 5ஜி ஊழல் என்று பூமிராங் மாதிரி உங்கள் மீதே வரும். ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள் சாலை போடுகிற திட்டத்தில் 7,50,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கொடுத்துள்ளது.
பெரியார் அய்யா ’யோக்கியர் வருகிறார் செம்பை எடுத்து உள்ளே வை’ என்றொரு பழமொழி சொல்வார். அதுதான் நினைவுக்கு வருகிறது.