இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வந்தது என்று சொல்லி அரசியல் சட்டமும் வரைந்து நடைமுறைக்கு வந்தபோது ‘சட்டத்தின் முன் எல்லோரும் சமம்’ என்ற கருத்துடைய சட்டத்திற்கு இது முரணானது என்று பார்ப்பனர்கள் பேசத் தொடங்கினார்கள். பார்ப்பனர்க்குள்ள உயர்வை மதம் – சாத்திரம் – பழக்க வழக்கம் என்ற பெயரால் காப்பாற்றிக் கொண்டார்கள். மக்களிடையே இந்திய நாட்டில் வழக்கில் உள்ள பேதம் இரண்டு வகையானது. ஒன்று செல்வமுடைமை – செல்வமில்லாமையால் வருவது அல்லது அமைவது. இன்னொன்று ஜாதியால் அமைவது. இது பிறவியை ஒட்டி அமைவது. இது மாற்றிக்கொள்ள முடியாதது என்று எழுதி வைத்துக்கொண்டனர்.
பார்ப்பனர்கள் தங்கள் நன்மை கருதி இரண்டு, வகையாகப் பேசுவதில் வல்லவர்கள். ஒரு பக்கத்தில் ஒத்த பிறவியை உடைய மனிதர்களைப் பிறவியை வைத்து நான்கு ஜாதியாகப் பிரித்து இதனை நீதியாக்கி-சட்டமாக ஆக்கி பல்லாண்டுகளாக இந்த நாட்டில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் பார்ப்பனர்களே ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியின்போது நன்றாக வலுப்படுத்திக் கொண்டவர்களும் இவர்களே ஆகும். ஆங்கிலேயர் போன பிறகும் தங்கள் ஜாதி உயர்வை கடவுள், மதம், சாத்திரம் இவைகளைக் கொண்டு காப்பாற்றிக் கொண்டனர்.
உலக நடைமுறை வாழ்வனைத்திலும் ஜாதி உயர்வுத் தாழ்வை நாங்கள் உடன்பட மாட்டோம். பூரண சுதந்திர நாட்டில் எல்லோரும் ஓர் நிகர். எல்லோரும் ஓர் நிறை என்று சொல்லி மதம், சாஸ்திரம் ஆகியவைகள் ஜாதிப் பிரிவையும் உயர்வு தாழ்வுகளைச் சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சட்டம் செய்து கொள்ளவில்லை. Caste is abolished என்று இந்திய அரசியல் சட்டம் சொல்லவில்லை. Untouchability abolished என்றுதான் சொல்லுகின்றது. இங்கே இப்படிச் ஜாதி முறையை நிலைப்படுத்திக் கொண்டு இந்தியக் கோயில்களிலெல்லாம் தங்கள் ஆதிக்கத்திலேயே இன்றும் வைத்துக் கொண்டு உழைக்காமல் உடல் நோகாமல் பார்ப்பனர்கள் வாழுகின்றார்கள். கோயில் கட்டியவன் – கோயிலைக் கட்டி மானியம் விட்டவன் எவனையும் பூசகனாகும் தகுதியைப் பெற்று பூசை செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கமுடியாது என்று சட்டத்தைக் காட்டித் செய்துவிட்டனர்.
பார்ப்பனர்களின் இரட்டை நாக்கும், வேடமும்
அப்படி ஜாதி வேற்றுமை பிறவியை ஒட்டி அமைவதாக எழுதி வைத்துக் கொண்டு நிரந்தரமாக்கியவர்கள் அந்தச் வைத்து அரசியலில் கல்வியில் அவர்கள் உயர்வை அடைய ஒதுக்கீட்டு முறையால் கொண்டு வர வேண்டுமென்று சட்டம் செய்து நடைமுறைக்குக் கொண்டுவந்தால் அது கூடாது என்று அவ்வளவு பார்ப்பனர்களும் கட்டுப்பாடாக இந்தியா முழுமையிலும் ஓலமிடுகின்றார்கள். வன்முறையைப் பல முகமாகத் தூண்டுகின்றார்கள். இந்தக் கொடுமையைப் பெரியார் பின் வருமாறு எழுதுகின்றார்.
“வகுப்பையும் மதத்தையும் ஜாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு மற்றொரு புறத்தில் ஜாதி-மத வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால் அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத் தனமும், இரண்டாயிரம் மடங்கும் இழி தன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா?” என்று பெரியார் கேட்கின்றார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் “பேச நா இரண்டுடையாய் போற்றி” எனறு தாமெழுதிய ஆரிய மாயையில் பாட்ட டியால் கூறுகின்றார். இப்படிக் கேட்பவர் ஒன்றும் அறியாதவர் என்று சொல்லமுடியாது. அறிந்துகொண்ட எல்லா நிலைகளிலும் உள்ள பார்ப்பனர்கள் அவ்வளவு பேர்களும் ஒரே குரலில் கேட்கின்றனர்.
1. அரசியல் பார்ப்பனர்
2. சமய மதப் பார்ப்பனர்
3. கல்வித்துறை பார்ப்பனர்
4. பத்திரிகைத் துறை பார்ப்பனர்
5. உத்தியோகத்துறை பார்ப்பனர்
6. தொழில்துறை பார்ப்பனர்
எல்லோரும் ஒரே ஓலமிடுகின்றார்கள்.
பெரியாரிடம் எடுபடாத பார்ப்பனர்கள்
பார்ப்பனர்களின் இந்த இயல்பைப் பற்றித் தந்தை பெரியார் 6.2.1969இல் “விடுதலை”யில் பின்வருமாறு எழுதுகின்றார். இப்பகுதியை நன்கு பலமுறைப் படித்துச் சிந்தியுங்கள். மனிதராகவுள்ள எவர் நெஞ்சையும் தொடுமளவுக்குப் பெரியார் எழுதுகின்றார். அது பார்ப்பன இனத்துக்கு மட்டும் தொடாதது ஏன்? இவர்கள் மனித உருவில் உள்ள மனித இன ஒட்டுண்ணிகள். அவர்கட்கு எப்படிப் புரியும்?
“பார்ப்பனர்கள் வாழுகின்றார்களே என்பதுபற்றி நமக்குச் சிறிதும் கவலை இல்லை. அவர்கள் பாடுபடாமல் உழைக்காமல் வாழுகின்றார்களே என்பது பற்றியும் கவலை இல்லை. நமக்குச் கவலை என்ன என்றால்
1. நம்மைக் கீழ் மக்களாக ஆக்குவதில் முழு மூச்சாகப் பாடுபடுகின்றார்களே என்பதற்கும்.
2. நம் மக்களை எல்லாம் முட்டாள்களாக ஆக்குகின்றார்களே என்பதற்கும்.
3. பொது நாகரிகத்தை வளர விடாமல் தடுத்து வருகின்றார்களே என்பதற்கும்தான் கவலைப்படுகின்றோம் (“விடுதலை” – 6.2.1969).
இவ்வாறெல்லாம் பார்ப்பனர்கள் தமிழ்நாடு அளவில் வம்பு செய்து பார்த்தார்கள். அந்த வம்பு பெரியார் முன்பும், பொதுவாகத் திராவிட இயக்கத்தார் முன்பும் கொஞ்சமும் எடுபடாமல் போய்விட்டது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் தங்கட்கு அசையாத புகலிடம் எது என்று பார்ப்பனர்கள் எதை நம்பி இருந்தார்களோ அந்தக் காங்கிரசு இயக்கத்தார் ஆண்டபோதும் வகுப்புரிமை கொள்கை நடைமுறையைத் தமிழ்நாட்டில் ஒழிக்க முடியவில்லை. ஆகவே பார்ப்பனர்கள் தங்கட்குப் பெரிய புகலிடம் இனி நமக்கு மத்திய ஆட்சிதான். மாநிலங்களல்ல என்று எல்லோருமாக மத்திய ஆட்சியை நோக்கி ஓடிப் பெரிய பெரிய அரசாங்க அலுவல்களை எல்லாம் தங்களதாக ஆக்கிக் கொண்டும் கேள்வி – முறை என்பது இல்லாமல் தலை கொய்த்துக் கிடந்தார்கள். அரசியல் சட்டம் வழங்கிய மாநிலங்கட்கு உரிய அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசுக்குக் கொண்டு போய் விட்டார்கள்.
உச்சகட்டமாக மாநிலங்கள் என்று அமைந்ததே தவறு என்ற பார்ப்பன இனத்தின் உட்கிடக்கைக்கு ஒத்த ஆதரவு நிலைப்பாடுகள் அதிகார மய்யத்தினர், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களால் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இவர்கள் மாநில மக்களையோ, மாநில முதலமைச்சர்களையோ ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. “தன்னை வியந்தான் விரைந்து கெடும்” என்றார் வள்ளுவர். இந்த வள்ளுவரின் கருத்துக்கு முழுவதும் இலக்காகி – நிமிர்ந்து நிற்பவர்கள் போல் தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் குனிந்த நிலையாளர்களே இவர்களாவர் .
(பெரியார் பேருரையாளர் புலவர் ந.இராமநாதன் எம்.ஏ., பி.ஓ.எல். அவர்கள் எழுதியுள்ள “நடுவண் அரசில் நம் பெரியார்” என்ற கட்டுரையிலிருந்து. பக்கம் 39-41 )