பகுத்தறிவுக்குத் தடைகள்!

Viduthalai
2 Min Read

– தந்தை பெரியார்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி, உயிர்நாடி ஆகும்.
ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக் கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.
பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாட்களாகவே தடைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவை அடைய முடியாமல் தடை செய்துகொண்டு வந்தார்கள்.
மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி, அவைகளை மக்கள் நம்பும்படி செய்து விட்டார்கள். கடவுள் என்றால் ஒத்துக் கொள்ள வேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

இதைப் போலவே மதத்திற்கும் என்ன? எப்படி? என்று சிந்திக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள். இதைப் போலத்தான் சாஸ்திரமும்.
இதில் நாம் பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் காண்கிறோம். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக் கொள்வது என்பது பொருள்.
நமது இழிநிலை, நமது முட்டாள்தனம் மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டிய தில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாக சிந்தித்தால் போதும்.

நமது கொள்கை பகுத்தறிவு
பகுத்தறிவு என்றால் நாஸ்திகம் என்பது பொருள். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாஸ்திகம் ஆகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது.
எல்லா விதமான சர்வ சக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்துக்கு ஒன்றுதான்.
ஆனால், நமக்குத்தான் ஆயிரக் கணக்கில் கடவுள்கள்!
நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை;
நமது கடவுளுக்கோ பல்லாயிரக் கணக்கான உருவங்கள்.
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை.
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை.
நமது நாட்டுக் கடவுளுக்கோ மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும்.
மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் – யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கியிருக்கிறார்கள்.
நமது நாட்டுக் கடவுளுக்கோ இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது.
மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ, அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏராளமான பேதங்களையும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களையும், காரியத்திற்கு கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்திருக்கிறார்கள்.
இவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை. நல்ல வண்ணம் சிந்தித்து, ஆராய்ந்து ஏற்க வேண்டியதை ஏற்றுக் கொண்டு மற்றதைத் தள்ளி விடுவதுதான் பகுத்தறிவு!
நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்தால் இல்லவே இல்லை.
உண்மையில் ஒரு கடவுள் இருக்கு மானால், நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
அந்தக் கடவுள், தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?

– தலையங்கம், ‘விடுதலை’, 20.6.1973
– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *