கழகத்தின் அய்.டி. – தகவல் தொழில்நுட்பப் பிரிவினரின்
கண்துஞ்சாப் பணி முக்கியம்! முக்கியம்!! மிக முக்கியம்!!!
தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை!
‘விடுதலை’ அறிக்கைகள் – செய்திகள் – பெட்டிச் செய்திகளைப் பரப்பிக்கொண்டே இருப்பீர், இது மிகவும் முக்கியம்!
மக்களவைத் தேர்தலுக்கு இடையில் 18 நாள்களே உள்ள நிலையில், கழகத் தோழர்களின் கண்துஞ்சாப் பணி மிகவும் முக்கியம்; குறிப்பாக கழகத்தின் அய்.டி. – தகவல் நுட்பப் பிரிவினரின் ஓயாப் பணியும், செயல்பாடும் முக்கியம், முக்கியம்; ‘விடுதலை’யில் வெளிவரும் அறிக்கைகள், செய் திகள், பெட்டிச் செய்திகளைப் பரப்பிக் கொண்டே இருப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
என் அன்பார்ந்த கொள்கை உறவுகளே!
நம் இயக்கத்தின் முக்கிய அறப்போர் களப் பணிக்கு – 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. (தமிழ்நாட்டில்) தலைமை தாங்கும் இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக வேட்பாளர்களைவிட, காப்பாளர்களாக நாம் கண் துஞ்சாமல் கடமையாற்றிட வேண்டிய முக்கிய தருணம் இது!எனவேதான், ஒவ்வொருவரின் பங்கும் முக்கியம்! முக்கியம்!!
கழக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு!
நமது அய்.டி. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணி மிகவும் அடிப்படையான முழுமுதற் பணி என்பதால், மற்றவற்றை ஒதுக்கிவிட்டு, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிவரை, சொந்தப் பணிகளைப் புறந்தள்ளி, கொள்கை பந்தப் பணிகளில், மானம் பாராது, காலம் பாராது கடமையாற்றுங்கள்!
நமது பிரச்சாரப் படை நமது கழக முப்படைகளில் ஒன்று.
அதில் முதல் படையாக தகவல் தொழில்நுட்ப அணியின் விரைந்த செயல் நேர்த்தியாக அமைய வேண்டும். விரைவு என்பதை அவசரம் என்று தவறாக கருதாதீர். சரியான நேரத்தில், சரியான செயற்பாடு என்பதே அதன் மெய்ப்பொருள்!
முப்படை என்னென்ன?
1. பிரச்சாரப் படை (அய்.டி. – தகவல் தொழில்நுட்ப அணி)
2. களப் பணிப் படை
3. உற்சாகப்படுத்திடும் உழைப்புப் பணி
இதில் எழுத்துப் படை மிகவும் முக்கியம்!
‘நான் சாதாரண தொண்டன்தானே’ என்று நீங்கள் உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்; நீங்கள்தான் வேர்; அடித்தளம் நம் இயக்கத்திற்கு என்பதை மறவாதீர்!
ஒவ்வொரு நாளும் செய்யவேண்டியதென்ன?
ஒவ்வொரு நாளும் ‘விடுதலை’யில் வெளிவரும் அறிக்கைகள், முக்கிய தகவல்கள், கட்டுரை அல்லது பெட்டிச் செய்திகள் – ‘விடுதலை’ நாளிதழின் றிஞிதி நகல் உங்களுக்குப் பகல் ஒரு மணிக்குள் கிடைத்துவிட ஏற்பாடாகி உள்ளது.
ஒவ்வொரு தோழரும், கரோனா காலத்து ஊரடங் கிலும்கூட ஒவ்வொரு நாளும் 100, 200 நண்பர்களுக்கு, உறவுகளுக்கு, வெளியாட்களுக்கு, முகவரிகளைத் தயாரித்து, உங்கள் செல்போனில் வைத்து அனுப்புகின்ற அன்றாடப் பணியாக ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம் கட்டாயம் ஒதுக்கினீர்கள்!
அதன்மூலம் உலகம் முழுக்க, குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் குறைந்தது 5 லட்சம் வாக்காளர்களை- அவை ஏவுகணைகள்போல் இலக்கை அடைந்து சிந்திக்க வைத்தது!
இப்போது உள்ள இந்த ஒன்றிய ஆட்சியை விரட்டுவதற்கு – முடிவு கட்டுவதற்கு சரியான தருணம் நாளும் கனிந்து வருகிறது, நல்ல சந்தர்ப்பம்; நழுவ விட முடியாத சந்தர்ப்பமும்கூட!
“19 வயது இளைஞராக” என்னை ஆக்கும்!
நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தகவல் தொழில்நுட்ப அணிப் பொறுப்பாளர்களும் கூடுதல் வேலையாக, நாள்தோறும் எனக்கே நேரடிக் கணக்கு அனுப்பவேண்டும். அதுதான் என்னை 19 வயது இளைஞனாக உழைக்க வைக்கும். ‘‘எங்கெங்கு காணினும் ‘விடுதலை’யடா – அது ஏழு கடல் தாண் டியும் ஒலிக்குமடா” என்று வெற்றிப் புன்னகை முரசொலிக்கவேண்டும்!
உற்சாகத்துடன்,
உத்வேகத்துடன்,
உழைப்பின் உச்சிக்குச் செல்லுங்கள்!
வெல்லுங்கள்!!
தயாராவீர், தோழர்களே!
உங்கள் தொண்டன்,
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30-3-2024