என்னுடைய உடல்நலம் எப்படியிருந்தாலும், சுற்றுப்பயணம் போகாமல், என்னால் இருக்க முடியாது!
இந்தக் காலகட்டத்தில், உடல்நலத்தைக் காரணம் காட்டி, நான் ஓய்வெடுக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது!
நமக்கு வழிகாட்டிய தலைவர் மூத்திரச் சட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு,
95 வயதில் சுற்றுப்பயணம் சென்ற தலைவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!
தஞ்சை, மார்ச் 30 தேர்தல் பணி என்பது வருகின்ற 30 நாள்களும் நமக்கு மிக முக்கியமானதாகும். என்னுடைய உடல்நலம் எப்படியிருந்தாலும், சுற்றுப்பயணம் போகாமல், என்னால் இருக்க முடியாது. அதுவும் இந்தக் காலகட்டத்தில், உடல்நலத்தைக் காரணம் காட்டி, நான் ஓய்வெடுக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால், நமக்கு வழிகாட்டிய தலைவர் மூத்திரச் சட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு, 95 வயதில் சுற்றுப்பயணம் சென்ற தலைவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சை: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
கடந்த 25-3-2024 அன்று மாலை தஞ்சாவூர் இராமசாமி திருமண மண்டபத்தில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு ஆ.வீரமர்த்தினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
கழகப் பொதுக்குழுவிற்கு முதன்முறையாக தலைமை ஏற்றிருக்கக்கூடிய…
மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் இன்றைக்குத் தஞ்சையில் உங்கள் அனைவரின் முன்னிலையிலும் மகிழ்ச்சியோ டும், உற்சாகத்தோடும் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்நிகழ்ச்சியில், தொடக்கவுரையாற்றி, பல்வேறு செய்திகளை எடுத்துச் சொன்ன கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இப்பொதுக்குழுவிற்கு முதன்முறையாகத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய கழக செயலவைத் தலைவர் வழக் குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களே,
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்ற தலைமைக் கழகப் பொறுப்பாளர்களே, மாவட்டக் கழகப் பொறுப் பாளர்களே, தோழர்களே, பெரியார் பற்றாளர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல் தளர்வாக இருக்கக்கூடிய நிலையிலும் ஒப்புக்கொண்ட எந்த நிகழ்ச்சியையும் தள்ளி வைக்கவில்லை!
நான் ஒரு நீண்ட உரையை ஆற்றப் போவ தில்லை. காரணம், நேற்றிலிருந்து சற்று உடல் தளர்வாக இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. இருந் தாலும், அதற்காக நான் ஒப்புக்கொண்ட எந்த நிகழ்ச்சியையும் தள்ளி வைக்கவில்லை.
காலையில்கூட நம்முடைய பல்கலைக் கழகத்தில் பணியாற்றக் கூடியவரும், இயக்கத்தில் மிக முக்கியமாக இருக்கக்கூடியவரின் இல்ல மணவிழா திருவாரூரில் நடைபெற்றது. அவ்விழாவிற்குச் செல்வதற்காக நான் புறப்படும் நேரத்தில், என்னைப் பார்த்த மருத்துவ நண்பர்கள், ‘‘நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாமே, இந்த நிகழ்வைத் தவிர்க்கலாமே” என்று சொன்னார்கள்.
‘‘இல்லை, இல்லை. இந்த நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எப்படியும் நான் மெது வாகச் சென்றுவிட்டு வருகிறேன்” என்று சொல்லி, அந்த மணவிழாவினை மகிழ்ச்சியோடு நடத்தி வைத்தேன்.
மூன்றாவது தலைமுறை மணவிழா!
அதுமட்டுமல்ல, அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நான் வந்தவுடன், என்னை வந்து பார்த்த நம்முடைய மருத்துவரிடம் நான் சொன்னேன், ‘‘அந்த நிகழ்விற்குச் சென்றுவிட்டு வந்த பிறகு எனக்கு மகிழ்ச்சியாக இருந் தது, அங்கே இருந்தவர்களையெல்லாம் சந்தித்தபொழுது. காரணம், அந்த மணவிழா என்பது மூன்றாவது தலை முறை மணவிழா – அதையும் நானே தலைமை தாங்கி நடத்தி வைத்தேன்” என்று அவரிடம் தெரிவித்தேன்.
விக்கிரவாண்டி மணி என்ற அந்தத் தோழரின் மணவிழாவினை 1964 ஆம் ஆண்டு நான்தான் நடத்தி வைத்தேன். அவருடைய மகன் மணவிழாவினையும் நான்தான் நடத்தி வைத்தேன். அவருடைய பேரன் மணவிழாவினையும் நான்தான் இன்றைக்கு நடத்தி வைத்தேன்.
‘‘நான் நடத்தி வைத்தேன்” என்ற பெருமைக்காக இதை நான் சொல்லவில்லை. குடும்பம் குடும்பமாக தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள், எப்படியெல்லாம் இந்தக் கொள்கையிலிருந்து வழு வாமல், நழுவாமல் உறுதியாக இருக்கிறார்கள் என்பதற்கு இது அடையாளம்.
உள் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பணியாற்றுகிறார்கள்!
அந்தக் குடும்பம் இந்தக் கொள்கையை ஏற்றதினால், எத்தனையோ சங்கடங்களைத் தனி வாழ்க்கையில் சந்தித்திருந்தாலும்கூட, கொள்கையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வெற்றியும், சிறப்பும் மிகப்பெரியது. அவர்களுடைய பிள்ளைகள் நன்றாகப் படித்திருக் கிறார்கள். அப்படி படித்தவர்கள், இந்த நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பணியாற்றுகிறார்கள்.
அப்படி ஒரு பெரிய வாய்ப்பை, தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் நாமெல்லாம் பெற்றிருக்க முடியுமா? இந்த இயக்கம் இல்லாவிட்டால், நாமெல்லாம் பெற்றிருக்க முடியுமா? என்று நான் சொன்னபொழுது, அதனை எல்லோரும் உணர்ந்து ஆமோதித்தனர்.
தோழர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது,
நானும் உற்சாகமடைவேன்!
ஆகவேதான் நான் சொன்னேன், உடல்நலக் குறைவு என்றாலும்கூட, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி களுக்குச் செல்லாமல் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதைத்தான் மருத்துவரிடம் சொன்னேன், ‘‘நீங்கள் சொல்வதை மீறி, செல்கி றேன் என்று நினைக்கவேண்டாம். என்னுடைய உடல்நலம் சரியாக வேண்டுமென்றால், தோழர் களைப் பார்த்தால்தான் என்னுடைய உடல்நலம் சரியாகும். தோழர்களைப் பார்க்கும்பொழுதும், அவர்களுடைய உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது, நானும் உற்சாகமடைவேன்” என்றேன்.
இன்றைக்குத் தோழர்களையெல்லாம் பார்க் கும்பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பக்கம் உடல் ரீதியாக எனக்கு சோர்வு இருந்தாலும், உள்ளம் ரீதியாக ஒருபோதும் சோர்வு ஏற்படாது.
இங்கே கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் உரை யாற்றும்பொழுது சொன்னார்கள்; அதன்படி ஒரு மூன்று அல்லது நான்கு நாள்களுக்குள்தான் இந்த அறிவிப் பினை வெளியிட்டோம்.
‘‘வரக்கூடியவர்கள் வரட்டும்!’’
கவிஞர் அவர்கள்கூட கேட்டார்கள், ‘‘என்னங்க, எல்லோரும் வர முடியுமா?” என்று.
‘‘வரக்கூடியவர்கள் வரட்டும்” என்றேன்.
பொதுவாக, ஒரு பொதுத் தேர்தலுக்கு முன்பு, நாம் யாரை ஆதரிக்கின்றோம்; மக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அந்த செயல், அந்தத் திட்டம் – அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் காலத்திலும், அன்னை மணியம்மையார் அவர்கள் காலத்திலும், இப் பொழுது நாமும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்ற ஒன்றாகும். ஆகவே, நாம் அதிலிருந்து நழுவக்கூடாது, வழுவக் கூடாது என்றேன்.
உங்களுடைய உறுதிக்குமுன் என்னுடைய பங்கு என்பது மிகச் சாதாரணமாகும்
இன்றைக்குக் காலையில், மணவிழா – நேற்று மாலை திருவரங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய தந்தையார் படத் திறப்பு; நேற்று காலையில் தஞ்சையில் ஒரு மணவிழா. தஞ்சையிலிருந்து திருச்சிக்குப் போய், திருச்சியிலிருந்து திருவாரூருக்குப் போய்விட்டு, மீண் டும் தஞ்சைக்கு வருவது பயண அலைச்சலாக இருந் தாலும்கூட, உங்களுடைய உற்சாகத்திற்கு முன், உங்க ளுடைய ஊக்கத்திற்கு முன், உங்களுடைய உறுதிக்கு முன் என்னுடைய பங்கு என்பது மிகச் சாதாரணமாகும்.
கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி வரையில் நம்முடைய தோழர்கள் வந்திருக்கிறார்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் என்றால் என்ன அர்த்தம்?
எவ்வளவு கட்டுப்பாடான ஒரு இயக்கம், இந்த இயக்கம்.
வேகத்திலே, மிக வேகம் என்பதற்கு உதாரணம் சொல்வார்கள் என்றால், மனோ வேகம்தான்.
ஒரு முடிவெடுத்துவிட்டால், அதிலிருந்து பின்வாங்குவது என்பதே நம்மிடம் கிடையாது!
அந்த மனோ வேகத்தோடு செய்யக்கூடிய ஓர் ஆற்றல் நம் தோழர்களுக்கு உண்டு.
இரண்டாவதாக, நம்முடைய தோழர்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால், அதிலிருந்து பின்வாங்குவது என்பதே நம்மிடம் கிடையாது.
நம்முடைய இயக்கம் கோடிக்கணக்கான உறுப்பினர் களைக் கொண்டிருக்கின்ற இயக்கம் என்று சொல்ல மாட்டோம். கொள்கை இருக்கின்றவர்கள், கோடிக்கணக் கில் இருக்க முடியாது.
கொள்கைக்காக, தங்களுடைய உடல், பொருள், உயிர் அத்தனையும் இழப்பதற்குத் தயாராக இருப்பவர்கள் நம்முடைய தோழர்கள்!
ஆனால், நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்று சொன்னால், இந்தக் கொள்கைக் காக, தங்களுடைய உடல், பொருள், உயிர் அத்த னையும் இழப்பதற்குத் தயாராக இருப்பவர்கள் நம்முடைய தோழர்கள். ஆகவேதான், கருப்பு மெழுகுவத்திகளாக இருக்கிறார்கள்.
நேற்று நடைபெற்ற திருச்சி சித்தார்த்தன் இல்ல நிகழ்ச்சியில், சட்டக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் சொன்னார், ‘‘எனக்குத் திராவிடர் கழகத் தோழர்கள், கருப்புச் சட்டைக் காரர்களைப் பார்க்கும்பொழுது, மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படும். ஏனென்றால், அவர்களைப் போன்று அர்ப்பணிப்போடு, சமூகநீதிக்காக, நாட்டிற்காக பாடுபடுகின்றவர்கள் வேறு யாரும் கிடையாது” என்றார்.
கருப்புச் சட்டைக்காரர் என்றால் பொதுநலத்திற்காகத்தான் பாடுபடுவார்!
மேலும் அவர், ‘‘ஒரு கருப்புச் சட்டைக்காரர் என்றால், அவர் சுயநலத்தோடு இருக்கமாட்டார். அவர் பொது நலத்திற்காகத்தான் பாடுபடுவார்” என்று அவர் சொன்னார்.
எனவே, இந்தப் பணியில், நாம் எத்தனையோ சங் கடங்களைப் பெற்றிருக்கின்றோம். நாம் சந்தித்திருக்கின் றோம், நாளைக்கும் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம்.
நமக்கு ஒரு வரவேற்புள்ள எதிர்காலம் இருக்கும் என்றால், நமக்கு அது மகிழ்ச்சிதான். இல்லை, இல்லை, நம்முடைய எதிரிகள் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து, அந்த சூழ்ச்சிகளினால் நமக்குத் தொல்லை கொடுக்கின்ற அளவிற்கு, இயக்கத்தை அழிக்கக்கூடிய அளவிற்கு வந்தால், அதில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. அதற்கு நாம் என்ன செய்யவேண்டுமோ, அதனை நாம் செய்யக்கூடியவர்களாக இருப்போம்.
நெருக்கடி காலத்தைவிடவா, இப்பொழுது இவர்கள் கொடுக்கும் நெருக்கடி.
நெருக்கடி காலம் வந்து 50 ஆண்டுகளுக்கு மேலா யிற்று. இன்றைய இளைஞர்களுக்குத் இந்தத் தகவல் தெரியாது. அந்தக் காலகட்டத்தில் எந்த அளவிற்குப் பயத்தை உண்டாக்கினார்கள் என்றால், இனிமேல் நீங்கள் வெளியில் போக முடியாது; உங்கள் இயக்கம் இருக்காது என்றெல்லாம் சொன்னார்கள்.
அன்னை மணியம்மையார் தலைமையில்,
தந்தை பெரியாரின் லட்சியம் வெற்றி பெற்றது!
ஆனால், அன்னை மணியம்மையார் அவர்களு டைய தலைமையில், தந்தை பெரியார் அவர்களுடைய அந்தப் பணி, லட்சியம் வெற்றி பெற்றது.
அதற்குப் பிறகு எவ்வளவோ சாதனைகளை நாம் செய்திருக்கின்றோம். சுயமரியாதை இயக்கத்தினுடைய பொன்விழா நடந்தது. அடுத்ததாக சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா நடக்கவிருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க விழாவைத்தான் நாம் பார்க்கவில்லையே தவிர, பொன்விழாவை நாம் பார்த்தோம்; அதற்காக விலை கொடுத்தோம். இப் பொழுது வரவிருக்கின்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா என்பது மிகச் சிறப்பானதாகும்.
தேர்தல் பணி என்பது வருகின்ற 30 நாள்களும் நமக்கு மிக முக்கியமானதாகும்.
என்னுடைய உடல்நலம் எப்படியிருந்தாலும், சுற்றுப் பயணம் போகாமல், என்னால் இருக்க முடியாது.
நமக்கு வழிகாட்டிய தலைவர் 95 வயதில் சுற்றுப்பயணம் சென்ற தலைவர் என்பதை
நாம் மறந்துவிடக் கூடாது
அதுவும் இந்தக் காலகட்டத்தில், உடல்நலத்தைக் காரணம் காட்டி, நான் ஓய்வெடுக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால், நமக்கு வழிகாட்டிய தலைவர் மூத்திரச் சட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு, 95 வயதில் சுற்றுப்பயணம் சென்ற தலைவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது
(தொடரும்).
இன்றைக்கு வந்திருக்கின்ற சிக்கல் என்பது சாதாரணமானதல்ல. இப்பொழுது ஒன்றியத்தில் இருக்கின்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மோடி அரசு, எல்லாவற்றிற்கும் சமாதி கட்டவேண்டும் என்று நினைக்கிறார்கள்; எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். தாங்கள்தான் எதிலும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும், அரசியலிலும் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் வகையில் அவர்கள் சாம, பேத, தான, தண்டம் என்று சொல்லக்கூடிய எல்லா முறைகளையும் அதிகார வெறித் திமிரோடு கையாளுவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
‘‘இந்தியா கூட்டணி’’யை வெற்றி பெற செய்வதுதான் நம்முடைய அடிப்படை பணி!
இந்தச் சூழ்நிலையை, மக்களுக்கு எடுத்துக்காட்டி, கொஞ்சம்கூட அச்சமின்றி, ‘‘இந்தியா கூட்டணி”யை வெற்றி பெற செய்வதுதான் நம்முடைய அடிப்படை பணி. அது – யாரோ சிலருக்குப் பதவி கொடுப்பதற்காக அல்ல.
ம்மால் முடிந்த அளவிற்குச் செய்யவேண்டும்!
நம்முடைய நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க,
சமூகநீதியைப் பாதுகாக்க,
சம தர்மத்தைப் பாதுகாக்க,
சம வாய்ப்பை உறுதி செய்ய –
இப்படி ஒவ்வொரு துறையிலும் அது நமக்குத் தேவை.
ஆகவேதான், நம்முடைய தேர்தல் பிரச்சாரத்தை நம்மால் முடிந்த அளவிற்குச் செய்யவேண்டும்.
தோழர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்,
கழகப் பொறுப்பாளர்கள் எல்லாம் இங்கே இருக்கிறீர்கள்; ‘‘கூட்டணி கட்சியினர், நம்மை மதிக்கவில்லை, அவர்கள் நம்மைக் கூப்பிடவில்லை; நம்மை அலட்சியப்படுத்துகிறார்கள்” என்று சொல்கிறார்கள்.
எங்கே இயக்கம் பலமாக இருக்கிறதோ, அங்கே அலட்சியமாக அவர்கள் இருக்க முடியாது. எங்கே இயக்கம் கொஞ்சம் குறைவாக இருக்கிறதோ, அங்கே அவர்கள் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கலாம்.
அரசியல் கட்சிகளைவிட,
நமக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது!
எப்படி இருந்தாலும், யார் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் – ஒன்றியத்தில் இருக்கின்ற மோடி ஆட்சியை மாற்றவேண்டும் என்பதில், போட்டி போடுகின்ற வேட்பாளரைவிட, போட்டி போடுகின்ற அரசியல் கட்சிகளைவிட, நமக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
அரசியல் கட்சியில் ஒருவர் தோற்றால், அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்; அல்லது வேறு கட்சிக்குப் போய்விடுவார். நமக்கு அப்படி இல்லை. நம்முடைய மக்களுடைய வாழ்வு – அடுத்த தலைமுறையினரின் வாழ்வு எங்கேயோ போய்விடும். அந்தத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். இதனால் நமக்கு ஓர் அவலம், ஒரு பழி ஏற்பட்டுவிடும். அந்தக் கவலைதான் நமக்கு.
நமக்கும், நம் தோழர்களுக்கும்
பழி ஏற்பட்டுவிடக் கூடாது!
என்ன பழி வரும்?
பெரியார் காலத்தில், அன்னை மணியம்மையார் அவர்கள் காலத்தில் எல்லாம் எவ்வளவோ எதிர்ப்பை, எவ்வளவோ நெருக்கடிகளைத் தாண்டி இயக்கத்தைக் காப்பாற்றினார்கள். ஆனால், இவர்கள் காப்பாற்றத் தவறிவிட்டார்களே என்கிற பழி, நமக்கும், நம் பரம்பரையாக இருக்கக்கூடியவர்களுக்கும், நம்முடைய தோழர்களுக்கும் ஏற்படக்கூடாது.