கோயபல்ஸ் பாணியில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.ஜே.பி.யின் பொய்த் தொழிற்சாலைகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பொய்யான – தவறான தகவல்களைப் பரப்பு வதற்கே கோயபல்ஸ் பாணியில் பொய்யுரைக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கி வைத்துள்ளனர். வாக்காளப் பெருமக்களே, சமூக வலைதளங்களில் உலாவரும் செய்திகளை அப்படியே நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தேர்தல் பத்திரங்கள்மூலம் பண பலம், கார்ப்ப ரேட்டுகளின் கனமழை நன்கொடை போன்றவை ஆயுதம்; அதற்கும் மேலே அவர்களது ஊடகங்கள் அம்பானியின் நியூஸ் 18, அதானி விலைக்கு வாங்கிய என்.டி.டி.வி., (பிரணாப் ராய் காணாமல் போய்விட்டார்; முன்பெல்லாம் தேர்தல் கணிப்புக்குப் பிரசித்திப் பெற்றவர்). அடுத்து ‘டைம்ஸ் நவ்’.
அவற்றையெல்லாம்விட மேற்சொன்னவை கொஞ்சம் முகமூடி அணிந்து மக்களிடையே பரப்பொளி செய்தாலும், முகமூடி அணியாமல் செய்யும் ஒரு டி.வி. ரிப்பப்ளிக் டி.வி. என்பது; இதன் உரிமையாளர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களே!
இதற்குமுன் எந்த அரசியல் கட்சியும் கையாளாத ஒருமுறை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – மோடி அரசின் நவீன பிரச்சார ஆயுதங்கள் ‘போலிச் செய்திகள்’ தயாரிப்புத் தொழிற்சாலை (Trans Factory) – பல ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்தியும், வெளியில் பல நபர்கள்மூலம் சமூக வலைதளங்கள்மூலம் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
ஹிட்லரின் கோயபல்சையும் மிஞ்சும்
மோடி அரசின் பொய்ப் பிரச்சாரங்கள்!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘‘உண்மை தனது காலுறைகளை அணிந்து புறப்படும் முன்பே, பொய் உலகத்தைச் சுற்றித் திரும்பிவிடும்” என்பதே அது!
அதை நன்கு – ஹிட்லரின் யுத்த பிரச்சாரத்தையும் மிஞ்சும், கோயபல்சே மயக்கமடையும்படி பொய்களைத் தயாரித்து, அதுவும் விஞ்ஞான – மின்னணுவியல் கருவி களோடு – (ரிஷிகளின் ஆசீர்வாதம், முக்கண், ஞான திருஷ்டி என்ற கப்சாவைவிட பல மடங்கு பா.ஜ.க.வின் கப்சா) திடீர் நம்பிக்கையை உருவாக்க, ‘‘ஃபோட்டோ ஷாப்”மூலம் பொய்யான படங்களையெல்லாம் இணைத் துப் பரப்பிய செய்திகளை பிரபல பிரெஞ்ச் ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர், லண்டனில் உள்ள பிரபல கிங்ஸ் கல்லூரியின் (கிங்ஸ் இந்தியா இன்ஸ்டிடியூட்) இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றும் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா அவர்கள் எழுதி, அண்மையில் வெளிவந்த தமிழ் மொழி வழி நூல் ‘‘மோடியின் இந்து தேசியவாதம் மற்றும் இன ஜனநாயகத்தின் எழுச்சி இந்தியா” என்ற தலைப்பில் வந்துள்ள நூலில் குறிப்பிடும் அதிர்ச்சி தரத்தக்கச் செய்தி ஒன்று:
ராகுல்காந்தி – ஒரு முஸ்லிமாம் –
இப்படி ஒரு பொய்ச் செய்தி!
‘‘2016 இல் டொனால்ட் டிரம்பின் ட்வீட்களைப் போல, பா.ஜ.க.வின் தகவல் தொடர்பு பிரிவுகள் மோடியின் பிரதான அரசியல் எதிரியான ராகுல் காந்தியை அழித்தொழிக்க முயன்றன. ராகுல் காந்தி ஒரு முஸ்லிம் என பா.ஜ.க. தலைவர்கள் பரப்பிய வதந்தியை உறுதிப்படுத்துவதுபோல், 2019 இல் ஜனவரி, பிப்ரவரி சமூக ஊடகங்களில் இந்திரா காந்தியின் இறுதி நிகழ்வில் முஸ்லிம்கள் தொழுகை மேற்கொள்ளும் நிலையில், அவரும், அவரது தந்தையும் ‘பிரார்த்தனை’ செய்யும் படம் வைரலானது.
பா.ஜ.க.வின் பொய்த் தயாரிப்புத் தொழிற்சாலைகள்!
பா.ஜ.க. எம்.பி., சுப்பிரமணியசாமி உள்பட பலர் மறு ட்வீட் செய்த அந்த ஒளிப்படம் எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட அப்துல் கபார்கான் இறுதி நிகழ்வில் (1988 இல்) எடுக்கப்பட்டதாகும்..
ஒரு பிரதான தொலைக்காட்சி சேனலின், ‘‘ஃபோட்டோ ஷாப்” செய்யப்பட்ட ஸ்கீரின் ஷாட்டின் துணையுடன், ராகுல், பாகிஸ்தானுக்கு ரூபாய் 50 மில்லி யன் (0.67 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வழங்கும் யோசனையை ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
பிரியங்கா காந்திமீதும் இதே விதத்தில் தவறாகப் பொய்ப் பழி சுமத்தி கறைபடுத்திட முயன்றது பா.ஜ.க. வின் பொய்த் தயாரிப்பு போலிச் செய்தித் தொழிற் சாலைகள்!
அவர் கிறிஸ்துவ சிலுவை மாட்டப்பட்ட ‘‘ஃபோட்டோ ஷாப்” செய்யப்பட்ட படம் காட்டப்பட்டது.
இதர காங்கிரஸ்காரர்களும் குறி வைக்கப்பட்டார்கள்; ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடியை அசைக்கும் (அது பாகிஸ்தான் கொடி அல்ல) படம் காட்டப்பட்டது.
பா.ஜ.க.வின் முனை உடைந்த ஆயுதங்கள்!
மார்ச் மாதம் காங்கிரஸ்காரர்கள், ‘‘பாகிஸ்தான் ஜிந்தா பாத்” என்று பாடும் வீடியோ காட்டப்பட்டு, பிரபலமாக் கப்பட்டு, ‘‘நமது ஆயுதப் படைகளுக்கு அவமானம் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் அவமானம்” என்று இழிவுப்படுத்தப்பட்டது.
இந்தப் பழைய வீடியோ 2018 இல் மது கிஷ்வ்ரால் என்பவரால் பதிவிடப்பட்டது என்பதும் அம்பலமானது.
அதாவது, போலிச் செய்திகளைப் பயன்படுத்துவது பா.ஜ.க. வியூகத்தின் ஒரு பகுதியாகும்.
– கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா நூலின் பக்கம் 415 (தமிழ்ப் பதிப்பு)
அதைச் செய்வதற்கென்றே – வெட்டுதல், ஒட்டுதல் செய்து வாழும் போலி பாண்டேக்கள், ‘சாணக்கிய அவதாரம்’ எடுத்து ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் முனை உடைந்த ஆயுதங்களாக உள்ளனர்!
புதிய போர் ஆயுதத்தைப் பிரயோகப்படுத்தத் தொடங்கிவிட்டது!
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை அழிக்க, ஒழிக்க அரசியல் ரீதியாக சந்திக்க இயலாத பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு, இப்போது ஒரு புதிய ஆயுதத் தைக் கையிலெடுத்து தன் அதிகார மய்யங்களின்மூலம் புது வியூகம் வகுத்திருக்கிறது.
காங்கிரசின் தேர்தல் பணி நேரத்தில், அதனை முடக்க, அதற்கு நிதிச் சிக்கலை ஏற்படுத்தி, உடனடியாக 1,823 கோடி ரூபாயை வருமான வரித் துறையிடம் அபராதமாகச் செலுத்த வேண்டுமென வரித் துறைமூலம் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இதுபற்றி அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளேகூட விமர்சிக்கவேண்டிய ஒரு நிலையை உருவாக்கிவிட்டது.
முன்பு புதுச்சேரிக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, ‘‘வெகு விரைவில் காங்கிரசில்லாத இந்தியாவை நீங்கள் – மக்கள் காண்பீர்கள்; புதுச்சேரி நாராயணசாமியை மட்டும் ஒரே ஒரு முதலமைச்சராக நீங்கள் பார்க்கக் கூடும்” என்று கூறிய அரசியல் ‘ஆரூடம்’ பலித்ததா? முன்பு கருநாடகம், அண்மையில் தெலங்கானா, அதற்கு முன்பு இமாச்சல் பிரதேசம், சட்டீஸ்கர் இப்படி இன்றும் காங்கிரஸ் ஆட்சி தொடருகிறது அல்லவா! காங்கிரஸ் உள்பட இந்தியாவின் பல எதிர்க்கட்சிகளும் இணைந்த, தி.மு.க.வினால் முன்மொழியப்பட்ட ‘‘இந்தியா கூட்டணி யின்” வளர்ந்துவரும் வலிமை, மோடி அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதால் இப்படி ஒரு ‘‘வரி பயங்கரவாதத் தாக்குதல்” (Tax Terrorism) என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியது பொருத்தமானதாகும்.
டில்லி தலைநகரில், கெஜ்ரிவால் கைது, இந்த வருமான வரித் தாக்குதல் போன்ற நடவடிக்கைகளால், டில்லி, அரியானா, பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இவை எதிரொலிக்கப் போவது உறுதி! உறுதி!!
வாக்காளர்கள் மத்தியில் இது எதிர்விளைவைத்தான் உண்டாக்கும்!
மக்கள் தங்களது வாக்குச் சீட்டுமூலமே பா.ஜ.க. மோடி அரசுக்கு தக்கப் பாடம் கற்பிப்பார்கள்.
மக்களின் மவுனம், புயலுக்குமுன் உள்ள அமைதி போன்றதே. பிரதமர் மோடி அரசு இதனைப் புரிந்துகொண்டு, கடைசி நேரத்திலாவது தனது இமாலயத் தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும்!
‘பந்தை அடிக்க முடியாத ஆட்டக்காரர்’ காலை அடிப்பது போன்ற பொல்லாங்கின் வியூகம் இது!
சமூக வலைதள செய்திகளை
அப்படியே நம்பிவிடாதீர்கள்!
எனவே, சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடாதீர்கள் வாக்காளப் பெருமக்களே!
மெய்ப்பொருள் கண்ட பிறகே நம்பவேண்டும். காரணம், கோயபெல்ஸ் குருநாதர்களிடம் எச்சரிக்கை – எது கள்ள நோட்டு – எது நல்ல நோட்டு என்று பார்த்து வாங்குவதுபோல, பலமுறை பரிசீலித்து, எதையும் நம்புங்கள் என்பதே இந்தத் தேர்தல் காலத்தில் நமது அன்பான வேண்டுகோள்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30-3-2024