இயக்கமே குடும்பம் என்று கருதும் மகளிர் தமிழ்நாட்டில் நிறைய இருக்கிறார்கள். தெருமுனைக் கூட்டம், பொதுக் கூட்டம், போராட்டம், மறியல், மாநாடு என அனைத்திலும் மகளிர் பங்கேற்பு இருக்கும்! அதுவும் திடீர், திடீரென ஆசிரியர் அறிவிப்பார், அசரமாட்டார்கள் மகளிர்!
என்னதான் பெண்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டாலும் குடும்ப அமைப்பும், அதில் அடுப்படியும் நீங்கா பிரச்சினைகள்! அவற்றை எதிர்கொண்டாலும், அதற்கு மேல் பொறுப்புகளைச் சுமந்தாலும் இயக்கப் பணி, இயக்க நடவடிக்கைகள் என வரும் பொழுது திராவிடர் கழக மகளிரணிக்கு ஈடுஇணை யாருமிலர்!
வாரந்தோறும் இயக்க மகளிரின் நேர்காணல்களை ஞாயிறு மலரில் பார்த்து வருகிறோம்! ஒவ்வொரு மகளிருக்கும் சொல்வதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. ஆங்காங்கே அவர்களைச் சந்தித்து நாம் வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டாலும், நமக்குத் தெரியாத அவர்களின் இயக்க வரலாறு 20, 30, 50 ஆண்டுகள் என நம்மைப் பிரமிக்க வைக்கிறது!
அந்த வகையில் இந்த வாரம் சந்திக்க இருப்பவர் அ.கலைச்செல்வி அவர்கள். வயது 67 ஆகிறது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவர் “உள்ளேன் அய்யா” தான்! விடுப்பு என்பதே கிடையாது! சுறுசுறுப்பிற்கும், நன்கொடை கொடுப்பதற்கும் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தான் இவரின் வாழ்விணையர்! இந்த வாரம் அவரைச் சந்திப்போம், வாருங்கள்!
அம்மா வணக்கம்! தங்கள் பெற்றோர் குறித்துக் கூறுங்கள்?
அம்மா பெயர் சுபத்ரா. அப்பா கோபால்சாமி. இயக்கத்தில் குடந்தை செங்குட்டுவன் என அறியப்பட்டார். பொதுப்பணித் துறையில் வேலை செய்தார்கள். குறிப்பாகக் கலைப் பொருட்கள் உருவாக்குபவர். அதாவது அணைகள் கட்டுவதற்கு முன், அந்த அணையின் மாதிரியை மரப்பலகை கொண்டு ஒரு வடிவம் (Architecture Model) செய்வார்கள். தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் பணிபுரிந்துள்ளார்கள்!
அப்பா கோபால்சாமி அவர்கள் பெரியார் கொள்கையில் ஈடுபாடு உள்ளவரா?
ஆமாம்! மிகுந்த நாட்டம் கொண்டவர்கள். அரசுத் துறையில் இருந்த காரணத்தால், எந்தப் பொறுப்பும் வகித்ததில்லை. ஆனால் தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பையும் நல்கியவர்கள்!
பெரியார் ஏற்பாட்டில் 1944ஆம் ஆண்டு கும்பகோணத்தில் திராவிடர் மாணவர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதில் எனது அப்பா, தவமணிராசன், முத்துச்செழியன், இலட்சுமணன் ஆகியோர் முன்னணியில் இருந்தார்கள். அப்போது அப்பாவின் வயது 15. அந்தக் காலக் கட்டத்தில் 4 குழுவாகப் பிரிந்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். ஆசிரியர் சென்ற குழுவில் அப்பாவும் இடம்பெற்றார்கள். ஆசிரியருக்கு அப்போது வயது 9. சில இடங்களில் ஆசிரியரைத் தம் தோள் மீது ஏற்றி அமரச் செய்வார்களாம் அப்பா! இதை ஆசிரியர் சில இடங்களில் பதிவு செய்துள்ளார்கள்.
உங்களின் இயக்கத் தொடர்பு எப்போது ஏற்பட்டது?
அப்பா கொள்கையில் இருந்ததால், நானும் இளம்வயதிலேயே இயக்கத்திற்கு வந்துவிட்டேன். 1970 ஆம் ஆண்டு “உண்மை” இதழ் தொடங்கப்பட்ட போது, ஆசிரியர் அவர்களை முதலில் பார்த்தேன். அப்போது எனக்கு வயது 13. அம்மா சுபத்ரா அவர்களும் இயக்க நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள்.
அப்பாவுக்கு சென்னை, பூண்டி யில் உள்ள சத்தியமூர்த்தி சாகர் நீர்த் தேக்கத்திற்குப் பணி மாற்றம் கிடைத்தது. இயக்குநராக இருந்த விஞ்ஞானி குமாரசாமி அவர்கள் 1972இல் அங்கு பகுத்தறிவாளர் கழகத்தை உருவாக்கினார். அந்நிகழ்வில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அதுசமயம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
“நிலவு மேட்டில் மனித கைகள் போட்டு நிற்கையில், நெட்டை சாமி குட்டை சாமி கதைகள் ஏனடா”, எனக் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய பாடலுக்கு நான் நடனமாடினேன்.
அந்நிகழ்வில் தந்தை பெரியார் அவர்கள் நூலகத்தையும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கல்வெட்டையும் திறந்து வைத்தார்கள்.
சென்னையில் இருந்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் இருந்திருக்குமே?
ஆமாம்! பெரியார் திடலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. தவிர சென்னையில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோம். மணியம்மையார் தலைவராக இருந்த போது, பெரியார் திடலில் இராவண லீலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய மூன்று பொம்மைகளையும் அப்பா தான் வடிவமைத்துக் கொடுத்தார்கள்.
உங்கள் திருமண வாழ்க்கைக் குறித்துக் கூறுங்கள்?
நான் பியூசி (அப்போது +2) வரை படித்திருக்கிறேன். நாங்கள் திருவையாறு அருகே அம்மன்பேட்டையில் வசித்தோம். 1980ஆம் ஆண்டு தஞ்சை இரத்தினகிரி அவர்கள் ஏற்பாட்டில், சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. இணையர் சி.அமர்சிங் அவர்களும் அப்போது கொள்கையில் இருந்தார்கள். திருவையாறு அருகே உள்ள பொன்னாவரை என்பது தான் அவர்களின் கிராமம். அப்போது அவர்கள் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். திருமணத்திற்குப் பிறகு தான் பி.எல்., முடித்து வழக்குரைஞர் ஆனார்கள். எங்களுக்கு 2 பையன்கள். ஒருவர் பெரியார் செல்வன், மற்றொருவர் சாக்ரடீஸ்.
இயக்கத்தில் நீங்கள் வகித்த பொறுப்புகள் எவை?
திருவையாறு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர், தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவர், மாநில மகளிரணி அமைப்பாளர், மண்டல மகளிரணி அமைப்பாளர் (5 மாவட்டங்கள் உள்ளடக்கியது) ஆகிய பொறுப்புகள் வகித்திருக்கிறேன்!
பொறுப்பு வகித்த காலங்களில் நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்து நினைவு கூர முடியுமா?
மாநிலப் பொறுப்பேற்றவுடன் 2007ஆம் ஆண்டு, திருச்சியில் மகளிரணி மாநாடு நடந்தது. அப்போது மாநில மகளிரணி பாசறை அமைப்பாளராக இருந்த வீ.கலைவாணி உள்ளிட்ட மாநில தோழியர்கள் இணைந்து அதை நடத்தினோம். மாநாட்டில் பெண்களே நாதஸ்வரம் இசைத்தது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்ற அம்மாநாட்டில், செலவு போக மீதம் ரூ 58 ஆயிரம் ஆசிரியர் வசம் கொடுத்தோம்.
2012ஆம் ஆண்டு, அன்னை மணியம்மையார் பிறந்த நாளன்று “மகளிர் பாதுகாப்பு மாநாடு” 2 நாள் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 500 மகளிர் பங்கேற்றார்கள். ஜெயமணி அவர்கள் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தினார்கள். அன்றைய தினம் ஏதாவது புதுமையாகச் செய்யலாம் என முடிவு செய்து, மாநாட்டுத் திடலில் திடீரென நன்கொடை வசூல் செய்தோம். எதிர்பாராத வண்ணம் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் கிடைத்தது. அதை ஆசிரியரிடம் மாநாடு சார்பாகக் கொடுத்தோம்.
மாநாடுகள் தவிர வேறு செயல்பாடுகள் குறித்துக் கூறுங்கள்?
50 ஆண்டு காலமாகத் திராவிடர் கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டுள்ளேன். எனினும் முக்கியமாக நான் பணியாற்றிய மாநாடுகள், நிகழ்வுகள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் என நினைக்கிறேன்.
2012ஆம் ஆண்டு வேலூரில் “புத்துலகப் பெண்கள் மாநாடு” நடைபெற்றது. குடியாத்தம் ஈஸ்வரி (சடகோபன்) அவர்கள் இல்லத்தை அலுவலகமாகப் பயன்படுத்திக் கொண்டோம். மாநாட்டையொட்டி வேலூர் முழுக்கத் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தினோம். மகளிர் பாசறைப் பொறுப்பில் இருந்த டெய்சி மணியம்மை நிறைய இடங்களில் பேசினார். அம்மாநாட்டிற்குத் தஞ்சையில் இருந்து 1000 கொடி தைத்துக் கொண்டு சென்றேன்.
அதேபோல 2014 ஆம் ஆண்டு கோவை சுந்தராபுரத்தில் “புரட்சிப் பெண்கள் மாநாடும்”, 2018 இல் கணியூர், தாராபுரத்தில் “மகளிர் எழுச்சி மாநாடும்” நடைபெற்றது. மகளிர் அனைவரும் எனது தலைமையில் தீப்பந்தம் ஏந்தி ஆசிரியரை மேடைக்கு அழைத்துச் சென்றோம்!
அனைத்து மாநாடுகளிலும் திருமகள், பார்வதி, ஜெயமணி, பிறைநுதல் செல்வி உள்ளிட்ட மாநிலப் பொறுப்பாளர்களும், அந்தந்த மாவட்ட மகளிரணி தோழர்களும் பெரியளவில் பணியாற்றுவார்கள்.
சிறைக்குச் சென்ற அனுபவங்கள் குறித்துக் கூறுங்கள்?
‘விதவைகள் தரிசு நிலம்’ என்று சொன்ன சங்கராச்சாரியாரை எதிர்த்துக் காஞ்சிபுரம் சங்கர மடம் எதிரில் மகளிரணி போராட்டம் நடத்தினோம். தஞ்சாவூர், கும்பகோணத்தில் இருந்து 10 பேர் சென்றோம். காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி தஞ்சையில் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கட்சி, இயக்கப் பேதமின்றி 400 மகளிர் வரை ஒன்று திரட்டினோம். தஞ்சையில் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் 100 மகளிர் பங்கேற்றோம்.
திருவையாறில் என் தலைமையில் நடந்த ஒரு போராட்டத்தில் ‘இரண்டு மாத கர்ப்பிணியாக’ பங்கேற்று, சிறை சென்று வந்தேன். 69 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று கூறிய இரண்டு நீதிபதிகள் கொடும்பாவியை எரித்து 15 நாட்கள் வரை திருச்சி சிறையில் இருந்திருக்கிறேன்.
மண்டல் பரிந்துரையை அமல்படுத்தக் கூடாது என்று கூறிய ஜெயந்திர சங்கராச்சாரியார் தஞ்சை வந்த போது நான், பார்வதி, மனோரஞ்சிதம், தங்கமணி, ஜெயமணி, கலைச்செல்வி, சுபத்ரா ஆகிய 7 பேர் கருப்புக் கொடி காட்டி கைதானோம். தவிர ஒரு நாள் சிறை என்பதும் கணிசமாக இருக்கிறது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு ஆர்வம் காட்டுவீர்களே, அதுகுறித்துக் கூறுங்கள்?
பாவேந்தர் பெயரில் ஒரு கலைக்குழு தொடங்கினோம். பரத நாட்டியமும், கர்நாடக சங்கீதமும் முறைப்படி கற்றுக் கொண்டேன். அந்த ராகத்தில் பெரியார், பாரதிதாசன் பாடல்களைப் பாடுவேன். இதுவரை நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம்.
திருவையாறு தமிழிசை அரசு கல்லூரியில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பாவேந்தர் கலைக்குழு சார்பில் 10 ஆண்டுகள் அங்கு தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம்.
திராவிடர் கழக நிகழ்ச்சிகளுக்காக டில்லி, லக்னோ பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். தவிர ஜெர்மனி, அமெரிக்கா மாநாட்டிற்கும் சென்று வந்தேன். “பார் உலகில் பகுத்தறிவு சுடர்” எனும் பாடலை அமெரிக்க மேடையில் பாடினேன். அந்த வாய்ப்பைப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் சோம.இளங்கோவன் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
தமிழர் தலைவர் தலைமையில் தொடர்ந்து 50 ஆண்டுகள் களத்தில் இருக்கிறீர்கள்! ஆசிரியர் குறித்துத் தங்கள் பார்வை என்ன?
சிறு வயதில் கொள்கை அறிமுகமா னாலும், உரிய நேரத்தில் உயரிய பொறுப்புகள் கொடுத்து, எங்களை இயங்கச் செய்தவர் ஆசிரியர் அவர்கள். வாழ்விலும், சமூகத்திலும் பெரும் விழிப் புணர்வை ஏற்படுத்தியவர். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் கூட, ஆசிரியர் சொல்லிவிட்டார் என்றால், எந்தப் பணியையும் செய்துவிடுவோம்!
ஊர் ஊராக செல்வோம், இரவிலும் பயணம் செய்வோம், முழுக்கவும் பேருந்து பயணம் தான்! மகளிருக்கே உண்டான இயற்கைப் பிரச்சினைகளையும் தாண்டி உறுதியோடு செயல்படுவோம்! இந்த இயக்கம், இந்தக் கொள்கை, இந்தத் தலைமை எங்களுக்கு எல்லா வகையிலும் மன உறுதியைக் கொடுத்தது என்பதே வரலாற்று உண்மை! தொடர்ந்து பணி செய்வோம்”, என அ.கலைச்செல்வி தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.