ரிசர்வ் வங்கி தகவல்
புதுடில்லி,மார்ச் 29– இந்திய வங்கிகளில், கடந்த 10 ஆண்டுகளில், 5.30 லட்சம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக, இணையதளம் ஒன்று இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2013-_2014 முதல், 2022-_2023 நிதியாண்டு வரை, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் மொத்தம் 4.63 லட்சம் மோசடிகள் நடந்துள்ளன. மஹாராட்டிரா வில் தான் அதிக மோசடிகள் நடந்துள்ளன. இதற்கு அடுத்த படியாக புதுடில்லி, அரி யானா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மோசடிகள் நடந்துள் ளன. கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், மொத்தம் 8,000 முதல் 12,000 வரையிலான வங்கி மோசடிகளுடன், அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆண்டு வாரியான அறிக்கைகளை ஆராயும் போது, பல மோசடிகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, இணைய வங்கி சேவை மற்றும் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத கடன்கள் பிரிவிலேயே நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
உதாரணமாக, கடந்த 2022-_2023 நிதியாண்டில் நடந்த 13,530 மோசடிகளில், 6,659 மோசடிகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மற்றும் இணைய வங்கி சேவைகள் ஆகியவற்றிலேயே நடந்துள்ளது. 4,109 மோசடிகள், உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத கடன்கள் பிரிவில் நடந்துள்ளது.இதற்கு முந்தைய இரண்டு நிதியாண்டுகளிலும், இந்த பிரிவுகளிலேயே பெரும்பான்மையான மோசடிகள் நடந்துள்ளன. கடந்த மாதம் கூட, ரிசர்வ் வங்கி, நிதி மோசடி அபாயங்களுக்கு எதிராக பொதுமக்களை எச்சரித்தது. தேவையற்ற அலைபேசி அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.,கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாக, பொதுமக்களை தங்களது தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் வகையில், சிலர் செயல்பட்டு வருவதாக, ரிசர்வ் வங்கி அப்போது தெரிவித்திருந்தது.
“கடந்த சில ஆண்டுகளாக, டிஜிட்டல் வங்கி மற்றும் பேமென்ட் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால், மோசடிகளும் அது தொடர்பான புகார்களும் அதிகரித்துள்ளன. மோசடிகள் அதிகரித்து வந்தாலும், வங்கிகள், கடன் சார்ந்த ரிஸ்க்குகளை கையாள்வது எப்படி என்பது குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. மேலும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல் உள்ளிட்டவற்றின் வாயிலாக, தங்களது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தவும்; மோசடிகளை குறைக்கவும் வங்கிகள் முயற்சி செய்து வருகின்றன,” என வங்கி துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.