மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர தாஸ் மோடி அவர்களுக்கு வணக்கம்!
‘‘நீங்கள் ‘மிசா’ கைதி ஆகாமல் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்து சீக்கியராகவும், இஸ்லாமியராகவும் மாறுவேடமிட்டு உலவிக் கொண்டிருந்தபோது, (தாங்கள் எழுதிய ‘சங்கர்ஷ்மா குஜராத்’ நூலில் உள்ள தகவலின்படி) ஓராண்டு சிறையில் ‘மிசா’ கைதியாக இருந்து அடிபட்டு வாழ்நாள் வலியோடு இருக்கும் பெரியார் தொண்டனாகிய கருஞ்சட்டைக்காரனின் வணக்கம்!
இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் 18 ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கும் இந்திய நாட்டின் பிரதமர் என்கிற ஹோதாவில் சகல அதிகாரங்களோடு இரண்டு முறை ஆட்சியை கடந்த 10 ஆண்டுகளாக நடத்திவிட்டு, மூன்றாம் முறையும் ஆட்சி அமைக்க ஆவலோடு தங்களுடைய கட்சியான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் புஜ பல, பராக்கிரமத்தோடு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
2014, 2019 ஆகிய இருமுறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் தாங்கள் ஓட்டுக் கேட்கும்போது இருந்த குரலுக்கும், மூன்றாம் முறையான இம்முறை உள்ள குரலுக்கும் படிப்படியாக தாண்டி பெருத்த வேறுபாடு உண்டு. ஓங்கி உயர்ந்த குரலாகவே மாறி மாறி மூன்றாவது முறை மாநிலங்களே இல்லாத ஒற்றை ஆட்சி என்ற ஆட்சி முறையை வலியுறுத்தி, இன்றைய அரசமைப்புச் சட்டத்தின் அய்ந்து முக்கிய அம்சங் களுக்கு இந்த முறை ஆட்சியிலேயே விடை கொடுத்து விட்ட வெற்றிப் புன்னகையுடனோ அல்லது கள்ள மவுனத்தோடோ நீங்கள் வாக்காளர்களாகிய எங்களைச் சந்திக்க வருகிறீர்கள்.
10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க வருவீர்களா?
இரண்டாவது முறை, புல்வாமா போன்ற பல வித்தைகளையோ அல்லது உங்களுக்கே தெரிந்த குஜராத் வித்தைகளையோ கையாண்டு பெற்றுவிட்ட புல்டோசர் மெஜாரிட்டிக்குப்பின் அரசமைப்புச் சட் டத்தின் மூலக் கூறுகளான, மக்களின் இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை உள்ளடக்கிய ஜனநாயகக் குடியரசினை எப்படி நீங்கள் படுகுழியில் தள்ளி, அதை முழுமையாக சிதைத்துவிட்டு, இந்த மூன்றாம் முறை ஆட்சி அமைப்பதும் எனது தேவை என்ற இலக்குடன் தேர்தல் பரப்புரைக்கு ஆயத்தமாகி வருகிறீர்கள்.
2014 இல் தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதி – இல்லை, இல்லை, ‘மோடியின் கேரண்டீ’ எல்லாம் நிறைவேற்றி இருந்தால், சாதனை களைக் காட்டி அல்லவா நீங்கள் இம்முறை வாக்குக் கேட்க, வாக்குத் திரட்ட வந்திருக்கவேண்டும். அப்படி குறிப்பிட்டுக் கூறுவதற்கு இடமில்லையே!
2014, 2019 இல் கொடுத்த வாக்குறுதி – கேரண்டீகள்!
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – காங்கிரஸ் ஆட்சியில் தராததைத் தருவோம் என்றீர்களே, தந்துள்ளீர்களா?
ஒரேயடியாக ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்ற வாக்குறுதி என்னாயிற்று?
இந்த 10 ஆண்டுகால உங்கள் ஆட்சியில் 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கவேண்டுமே! கிடைத் ததா?
விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா, பிரதமர் அவர்களே!
விவசாயிகளின் நாடு இந்தியா – விவசாயிகள் வாழ்க்கை செழிப்பாக இரட்டிப்பு மடங்கு வருமானம் பெருக வழி செய்வோம் என்று சொன்னீர்களே-
அதைச் செய்யத் தவறியது மட்டுமல்லாமல், கார்ப் பரேட் முதலாளிகளுக்கு வசதியாக பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் ரத்தக் கண்ணீர்விட மூன்று சட்டங்களை நிறைவேற்றி வைத்து, தலைநகர் டில்லியில் ஓராண்டுக்கு மேற்பட்டு வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது போராட்டத்தை கடுங் குளிர், பனி, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், பருவம் பாராது குடும்பம் குடும்பமாக டில்லியை முற்றுகையிட்டபோது, ஓர் அற்புத வித்தைமூலம், ‘‘மூன்று சட்டங்களையும் ‘வாபஸ்’ பெறும் வரையில் குறைந்தபட்ச விலை (ஷிவிஷி) நிர்ணயம் செய்து அறிவிப்போம்; விவசாயிகள்மீது போடப்பட்ட 48,000 வழக்குகளை ரத்து செய்வோம்; விவசாயிகள்மீது டிராக்டர் ஏற்றிக் கொன்றவர்மீது உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று கூறிய ‘கேரண்டீகளை’ செய்து காட்டாததால்தானே, மீண்டும் டில்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களி லிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியை முற்றுகையிடத் திரண்டனர். அவர்களுக்கு நீங்கள் எப்படி பதில் சொன்னீர்கள்? ‘‘கண்ணீர்ப் புகை, துப்பாக்கி பிரயோகம் தான் அவர்களுக்க் கிடைத்த பதிலும், பரிசும்!
டில்லிக்கு வந்த விவசாயிகளின் மீதான தாக்குதல் – அடக்குமுறை ஆயுதங்களா? ஜனநாயக அம்சமா?
டில்லி தலைநகருக்கு உங்களைப் பார்த்து நியாயம், நீதி கேட்க வந்த விவசாயிகளை முடக்குவதற்காக இரும்பு வேலி, தொலைப்பேசி இணைப்புத் துண்டிப்பு, மெட்ரோ ரயில்கள் நிறுத்தம் போன்றவை அடிப் படையான மனித உரிமைகள் பறிப்பு அல்லவா?
இவை எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடுகளா? அடக்குமுறை ஆயுதங்களா? ஜனநாயக அம்சங்களா?
‘மதச்சார்பின்மை’ என்ற பீடிகையில் உள்ள வாசகம் – அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலம் நீக்கப்படாமல், 2015, ஜனவரி 26 குடியரசு நாள் விளம் பரங்களிலேயே அந்த வார்த்தையை நீக்கினீர்களே – இப்படி அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை வெளிப்படையாக அவமதித்தது ஜனநாயகமா?
மோடி அவர்களே, நீங்கள் இரண்டாம் முறை அரசமைப்புச் சட்டம் போல் ஒன்றை எழுதி வைத்து வணங்கியதாக தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து பதவியேற்றீர்களே, அது ஜனநாயகமா அல்லது அரசமைப்புச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தையும் ஒட்டுமொத்தமாக அவமதித்த அதிகார ஆணவமா?
மகாத்மா காந்தியின் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் என்னாச்சு?
‘‘ஏழைகளின் வறுமையைப் போக்கும் என் அரசு” என்று கூறி, பதவிக்கு வந்த நீங்கள்,
அந்த ஏழைகளின் கிராமப்புற வேலை வாய்ப்பு (மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு) திட்டத் தைப் பறித்து, குறைத்து, அந்த விவசாய கிராமப்புற பெண்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வரும் வாழ்வாதாரத்தையும் BPL – Below Poverty Line வதைப்பது என்ன நியாயம்?
நகரங்களில் நாளொன்றுக்கு – ரூ.464 கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு – ரூ.345.70 காசுகள்
அவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில், ஒதுக்கிய நிதியைக் குறைத்து, அதேநேரத்தில், ஏழைகளில்கூட ‘உயர்ஜாதி ஏழைகள்’ என்று ஒரு புதுப்பிரிவை உருவாக்கி, அவர்களது வருமானம் நாள் ஒன்றுக்கு 2,224 ரூபாய் என்றாலும் (வருமான வரி கட்டினாலும்) பார்ப்பனர் உள்பட உயர்ஜாதி ஏழை களுக்கு என்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பிரித்து, அரசமைப்புச் சட்டத்தின் 15(4), 350 பிரிவுகளையே புறந்தள்ளி, பொருளற்றதாக்கி, விவாதமின்றியே திருத்தச் சட்டமாக்கியது என்ன நியாயம்?
உச்சநீதிமன்றம் ஏற்ற தீர்ப்பு கூட நீதிபதிகள் 3:2 என்பதுதான். இவ்வளவு பெரிய சமூக நீதித் தத்துவத் தைக்கூட, டாக்டர் அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நேரு போன்ற பெருமக்கள் பல நாள் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றிய முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்போது, எதைக் கைவிட்டார்களோ, அதைப் புகுத்திய சட்டத் திருத்தம் குடியரசுத் தலை வரின் ஒப்புதலோடு ஒரு சில நாள்களில் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் சில மணிநேர விவாதம், ஓட்டெடுப்பு சடங்காச்சாரமாக முடிந்த மாநிலங்களவையில் உண்மையாக நிறைவேறாமல் – ஓங்கி அடித்தே நிறைவேற்றப்பட்டதைக் காண முடிந்தது (வீடியோ சாட்சி).
பிரதமர் மோடி அவர்களே, எல்லா முக்கிய சட்டங் களையும் விவாதம் உரிய முறையில் நடைபெறாமல், ராக்கெட் வேகத்தில் அவசரக்கோலம் அள்ளித் தெளித் ததாக நிறைவேற்றியதுதான் 17 ஆவது நாடாளுமன்றக் காலம்.
அதுமட்டுமா?
இதுவரை நாடாளுமன்றத்தில் – 10 ஆண்டுகளில் – எந்த உறுப்பினரின் கேள்விக்கும் நேரிடையாகப் பதில் சொல்லாத பிரதமர் என்ற பெருமை தங்களுக்கே உரியது என்று பல அறிவுசார் அரசியல் நிபுணர்கள் எழுதியும், பேசியும் உள்ளனர்.
நாடாளுமன்றம் மட்டுமா?
10 ஆண்டுகளில் ஒருமுறையாவது செய்தியாளர்களை சந்தித்ததுண்டா, பிரதமர் அவர்களே!
பத்து ஆண்டுகளில் ஒருமுறைகூட செய்தியாளர் களைச் சந்திக்காததைக் கூட சாதனை என்று சொல்வீர்களோ!
அரசின் மூன்று முக்கிய அங்கங்களில் – மற்றொரு முக்கிய அங்கமான உச்சநீதிமன்றம் உங்கள் அரசைப் பற்றி பலமுறை கடும் சொற்களால் விமர்சனங்களைக் கூறியுள்ளதுபோல், இதற்குமுன் எந்த அரசும் கண்டதுண்டா?
உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் – இவற்றிற்கு ‘கொலிஜியம்’ பரிந்துரைத் ததைக் காலந்தாழ்த்தியதால், கடுமையான எச்சரிக் கையை உச்சநீதிமன்றம் விடுத்த பிறகே, சில நியமனங் களுக்கு ஒப்புதல் தந்தீர்கள். உச்சநீதிமன்றம் கடுமையாக Selective Appointment, Pick and Choose நியமனங்கள் என்று கூறியுள்ளதுதான் நீதிச் சுதந்திரத்திற்கு – உங்களது 10 ஆண்டுகால ஆட்சி தந்த பாதுகாப்பா?
அதுமட்டுமா?
ஜனநாயகத்தின் காவல் அரணான சுதந்திரத் தேர்தலை நடத்தி கண்காணிப்புக் கடமையை ஆற்ற வேண்டிய தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர், உறுப்பினர் நியமனங்கள்பற்றி உச்சநீதிமன்றம் கூறியது – உலகம் முழுவதும் செய்தியாகியதே! உங்களது, ஆட்சி எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள 18 ஆவது தேர்தல் அறிவிப்புக்கு சில நாள்களுக்குமுன் இரண்டாவது (மூத்த) தேர்தல் ஆணையர் ஏன் திடீரென பதவி விலகினார்?
அது வெளிவராத ரகசியமாக – நிரந்தரமாக இருக்க முடியுமா?
அவசர கதியில் மற்ற புதிய ஆணையர்கள் நியமனம். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தடையாணை (Stay) கொடுக்கப்படவில்லையானாலும், அதன்முழு அதிருப்தியை நீதிபதிகள் பதிவு செய்துள்ளார்களே!
அதற்கேற்ப சின்னங்கள் ஒதுக்குவதில்கூட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, ஆளுங் கூட்டணிக் கட்சிகளுக்கு உடனடி ஒதுக்கீடு – மற்றவர்களுக்கு வேறு நிலை என்று பேதம் காட்டப்படுகிறது என்ற பரவலான பேச்சு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அதிருப் தியை நியாயப்படுத்துவதாகத்தானே இருக்கிறது!
ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவைத்தானே நிறைவேற்றி வருகிறீர்கள்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அஜெண்டாவைத்தான் நீங்கள் கடந்த 10 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றினீர்கள்.
1. காஷ்மீர் 370 சட்டம் ரத்து
2. பொது சிவில் சட்டம்
3. அயோத்தியில் இராமன் கோவில்
இம்மூன்றும் உங்கள் கட்சித் திட்டம் மட்டுமல்லாமல், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை கூறிய 5 அம்சங்களைப் பறித்தவையல்லவா!
‘‘140 கோடி மக்களும் மோடியின் குடும்பம்” என்று தமிழ்நாட்டில் பேசி, லாலு பிரசாத்துக்குப் பதில் கூறினீர்கள்!
எங்களுக்குள்ள வருத்தம், வேதனையெல்லாம் நீங்கள் பிரதமராக இருப்பதல்ல; பிரதமராக இருக்கும் நீங்கள் சொன்னபடி எல்லோரையும் உங்கள் குடும்ப மாகக் கருதி ஆட்சியை நடத்தினால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆட்சிக்கான அதிகாரப் பறிப்பு, நிதி தராமல் நெருக்கடி, குரல்வளை நெரித்தல், அவர்கள் வசூலித்துத் தரும் ஜி.எஸ்.டி. தொகை ஒரு ரூபாயில் வெறும் 29 பைசா தரும் கொடுமை போன்றவை நிகழுமா?
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 80:20 என்று பேசி, வாக்கு சேகரிக்க பா.ஜ.க. முதலமைச்சருக்கு மனம் வருமா?
உங்கள் ஆட்சியில்
ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் உண்டா?
உங்களது இரண்டாம் முறை ஆட்சியில், உங்கள் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒரே ஒரு முஸ்லிம் உண்டா? இத்தனைக்கும் ‘முஸ்லிம் ராஷ்டிர மஞ்ச்’ என்ற பிரிவுகூட பி.ஜே.பி.யில் உள்ளதே – இருந்தும் என்ன பயன்?
‘நாரிசக்தி’ என்று காலைத் தொட்டு வணங்கும் தங்களின் பவ்வியத்திற்கே ஒரு தனிப் பரிசு!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன் றத்தில் அவசரமாக நிறைவேற்றி, அவர்களுக்கு ‘மயக்க பிஸ்கெட்’ தரும் ஏற்பாடு செய்தீர்கள் – எப்போது அச்சட்டம் அமலுக்கு வரும் என்று தேதி சொல்ல வில்லையே, ஏன்?
2029 ஆம் ஆண்டில்கூட வராது என்பதுதானே நிபுணர்களின் கணக்கு. இலை மட்டும் போட்டு, ‘‘பரிமாறமாட்டார்கள் எழுந்து செல்லுங்கள்” என்று கூறி – விருந்து படைக்கும் வித்தகர் போன்றதல்லவா தங்களது இந்த நடவடிக்கை!
‘‘140 கோடி மக்களும் என் மக்கள்” என்றால், வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூரில் மாதக்கணக்கில் பற்றி எரியும் கலவரத் தீயை அணைத்து ஆறுதல் கூற, நீங்கள் தேர்தல் அறிவித்த பிறகுகூட செல்லவில்லையே!
‘‘நாரிசக்தி’க்குப் பூஜை போடும் நீங்கள், எங்கள் பழங்குடி சகோதரப் பெண்களின் துணிகளை உருவி, தெருக்களில் ஓடவிட்ட கயமைக் கூட்டத்தின்மீது எடுத்த நடவடிக்கை என்ன?” என்று நாங்கள் கேட்கத்தான் முடியும். அந்தக் குடும்பம் ‘‘ஆற்றாது, அவமானத்தின் உச்சியில் நின்று” வற்றாத கண்ணீர்க் கடலில் மிதந்ததே! ஆறுதல் கூறவில்லையே, மணிப் பூருக்கும் நீங்கள்தானே பிரதமர்? அது வடகிழக்கே!
உங்கள் குஜராத் – இரட்டை எஞ்ஜின் ஆட்சியில், கருவுற்ற பெண்ணான பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏமாற்ற, செய்த சூழ்ச்சிகளும், குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனங்களும் நாணயமான எவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும். அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
வட மாநிலங்கள்கூட இந்த முறை கைகொடுக்கப் போவதில்லை!
வடமாநிலங்கள் இம்முறை முன்புபோல கை கொடுக்காது என்று உங்களது காதுகளுக்குச் செய்தி களும், கண்களுக்குப் பார்வையும் சொல்வதால்,
தென்னாட்டைக் குறி வைக்கிறீர்கள். குறிப்பாக ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியைக் குறைகூற முயல்கிறீர்கள்; நீங்களும், நீங்கள் சேர்ந்த கூட்டணியும் தமிழ்நாட்டில் அய்ந்து முறை தோல்வியையே மக்கள் தந்த பரிசாகப் பெற்றுள்ளீர்கள்.
1. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் (2014, 2019)
2. இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் (2016, 2021)
3. உள்ளாட்சித் தேர்தல்
இப்போது ஏதோ புது பலம் வந்துவிட்டதாக உங்களது பதவி பலம், பண பலம், பத்திரிகை பலம் ஆகிய எல்லா பலங்களையும் ஒன்று திரட்டி, திறக்காத கதவை 24 மணிநேரமும் திறந்து வைத்தும்கூட, சிக்கியவர்கள் யார்? சிக்கியவர்கள் மக்கள் செல்வாக் கற்ற கட்சிகள் – உங்கள் ‘‘ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே தலைவர், ஒரே ஒரே” விதிவிலக்கு – உங்களால் வளைக்கப்பட்டு, வேறு காரணங்களால் உங்களிடம் வந்து, ஒரு 5 சதவிகித ஓட்டுக் கட்சியும், தாமரை ஓட்டுக் கணக்கை உயர்த்திக் காட்டவே ஓட்டை, உடைசல், செம்பு, பித்தளைகளான சில கோடீசுவர கார்ப்பரேட் கனவான்களின் கட்சிகள் – மக்களுக்கு சம்பந்தமில்லாத தலைவர்கள், அடை யாளம் தெரியாதவர்கள்தானே உங்கள் வேட்பாளர்கள்!
தமிழைப்பற்றி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பேசும் பிரதமர் அவர்களே, தமிழ் வளர்ச்சிக்கு
நீங்கள் உதவியது என்ன?
‘‘தமிழ் ரொம்ப ரொம்ப பழைமையான மொழி” என்று தமிழர்களுக்கு இதுவரை ‘தெரியாத பேருண் மையைத்’ தாங்கள்தான் தமிழ்நாட்டிற்கு வந்து சொன்னீர்கள், நன்றி!
ஆனால் ஒன்று, அந்த ‘செம்மொழி’ என்ற ஆணை யைத் தந்த ஆட்சி, காங்கிரஸ் தலைமையில் அமைந்த சோனியா, மன்மோகன்சிங் ஆட்சிதானே! தி.மு.க. தலைவர் கலைஞரின் இடையறாத முயற்சி அல்லவா!
அந்தத் தமிழ் மொழிக்குத் தங்களது ஆட்சியில் ஒதுக்கிய தொகை எவ்வளவு?
மக்களிடையே இல்லாத, மக்கள் பேசாத செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு ‘தேவபாஷை’ என்று உச்சிமோந்து உங்கள் அரசு ஒதுக்கிய தொகை என்ன?
2014 முதல் ஒன்றிய செம்மொழி ஆய்வு நிறுவனத் திற்கு ஒதுக்கிய நிதி ரூ.74.1 கோடி. ஆனால், மத்திய சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1478.9 கோடி.
ஹிந்தி பேசும் பி.ஜே.பி. ஆட்சியில், உலகின் உயர்ந்த மூத்த, தொன்மை மொழி தமிழ் என்று நீங்கள் உத்தரவு போட்டிருக்கிறீர்களா?
உங்கள் மாநிலமான குஜராத்தில் தமிழ் பாடமாக பயிற்சி மொழியாக உள்ளதா? ஏராளமான தமிழர்கள் அம்மாநிலத்தில் வியாபார நிமித்தமாக வசித்த போதும் கூட, மும்மொழியில் இம்மொழி எம்மொழி உண்டா?
‘மனிதாபிமானம்’ உள்ளவராக எங்களை ஆளும் ஒரு பிரதமர் இருக்கவேண்டும் என்று நினைப்பது தேச விரோதமா? அதற்கான நியாயம் கேட்டால், நாங்கள் பிரிவினைவாதிகள் என்ற பழியா?
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பவர்கள் பிரிவினைவாதிகளா?
இல்லை, ஏழைகளில்கூட ‘உயர்ஜாதி ஏழைகள்’ என்று தரம் பிரிப்பவர்கள் பிரிவினைவாதிகளா?
இயற்கைச் சீற்றம் எங்கு – எந்த மாநிலத்தில் நடந்தாலும் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமானத்துடன் உடனடியாக அது கேரளாவாக இருந்தாலும், வடபுலத்து மாநிலமாக இருந்தாலும், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசமாக இருந்தாலும் ஆறுதல் கூறி, கோடி கோடியாக ரூபாயைக் கேட்காம லேயே தானே முன்வந்துஉதவினாரே!
நாட்டிற்கே பிரதமர் நீங்கள் – தமிழ்நாடு பெருமழை, வெள்ளத்தில் தத்தளித்தபோது என்ன செய்தீர்கள்?
ஊழலை ஒழிப்பதாகக் கூறும் உங்கள் இலட்சணம் என்ன?
கடந்த 10 ஆண்டுகால (2014 முதல் 2024 ஆம் ஆண்டுவரை) ஆட்சியில் ‘‘ஊழலை ஒழிப்பேன்” என்று பகிரங்கமாகக் கூறி, ‘அச்சேதின்’ – நல்ல காலம், ‘அமிர்தகால்’ – அமிர்தகாலம் என்றெல்லாம், வாய்ப் பறை கொட்டி, மாற்றத்தினை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்த நீங்கள், உங்கள் ஆட்சியில் ஊழலை எந்த அளவுக்கு ஒழித்தீர்கள் என்பதை ஊர் அறியும், நாடு அறியும், உலகம் அறிகிறது!
ஏழைகளின் கையிருப்பையெல்லாம் வங்கிக் கணக்குத் திறக்கச் சொல்லி, வங்கிகளில் போடச் சொல்லி அறிவுரை வழங்கினீர்; 15 லட்சம் ரூபாய் வரும் என்ற நம்பிக்கையோடு வாக்களித்த மக்களின் நிலை என்ன?
கறுப்புப் பண மீட்பு இல்லை என்பது வெளிப்படை! இந்த ஏழை, நடுத்தர மக்கள் வங்கிகளில் போட்ட பணம் 10 லட்சம் கோடி ரூபாய்; மக்கள் பணத்தைச் சூறையாடி வெளிநாடுகளில் சென்று சொகுசு வாழ்க்கை வாழும் எவரையாவது – அந்த வங்கி கொள்ளையடித்த கோமான்களில் எவரையாவது இந்தியாவிற்கு அழைத்து வந்து, குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை வாங்கித் தந்தீர்களா?
(4 ஆம் பக்கத்தில் விரிவான ஆதாரப்பூர்வ பட்டியல்)
இதுதான் உங்கள் ஊழல் ஒழிப்பு லட்சணமா?
சி.ஏ.ஜி. அறிக்கை என்று கூறித்தானே அன்றைய அமைச்சர் ஆ.இராசாமீதும், கனிமொழி மீதும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று பூஜ் ஜியங்களாகப் போட்டு பழிதூற்றினீர்கள் – கடைசியில் அவர்கள் வழக்கு பொய் என்று நிரூபித்து வெற்றி வீரர்களாக வெளிவந்தார்களே!
அதே வினோத்ராய் (சி.ஏ.ஜி.) எழுதிய புத்தகத்தி லேயே அது ஜோடனைதான் என்பதை ஒப்புக் கொண்டும் விட்டார்.
ஆனால், பிரதமர் மோடியாகிய தங்களது ஆட்சியில், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ.18 கோடிக்குப் பதில், ரூ.250 கோடி செலவு உள்பட, ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்ற கணக்கை சி.ஏ.ஜி. சுட்டிக்காட்டி இருப்பதைத் தொடர்ந்து, நாடாளு மன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் அதனைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டுள் ளனர்.
விஸ்வ குருவா – மவுன குருவா?
‘விஸ்வ குரு’வான தாங்கள் ஏன் மவுன குருவானீர்கள்?
சுடச்சுட மறுப்பு வராததினால், மவுனம் சம்மதத் திற்கு அறிகுறி என்ற பழமொழிதானே எங்களுக்கு நினைவில் வருகிறது!
‘‘ஊழல் ஒழிப்புக்கான அவதாரம்” என்று தன்னைத்தானே காட்டி, ஆட்சியை ஒருமுறை அல்ல, இருமுறை பிடித்து, மூன்றாம் முறை பதவியில் அமர்ந்து 2047 வரை தான்தான் என்று, திட்டம் தீட்டி அறிவித்துள்ள தங்களது ஆட்சிக்கால சட்டபூர்வ விஞ்ஞான ஊழல் – வெளிப்படைத்தன்மையற்ற தேர்தல் பத்திரம் என்ற தேர்தல் நன்கொடை அல்லவா!
அதிகபட்ச நன்கொடை பா.ஜ.க.வுக்கு 12,060 கோடி ரூபாய் என்று உச்சநீதிமன்றம் தொடுத்த கண்டனக் கேள்விகளுக்குப் பிறகு, அதிர்ச்சி தரும் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றனவே!
பிரதிபலன் – சலுகை காரணமாகத்தானே அந்த நன்கொடைகள் ஆளும் கட்சிக்கு – பி.ஜே.பி.,க்கு என்பதைக் குழந்தையும் அறியுமே!
குறிப்பிட்ட நிறுவனங்கள்மீது வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.அய். ரெய்டு – அதன் பிறகு அந்நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடை – அதன் பிறகு அந்நிறுவனங்களுக்கு அனுகூலமான நடவடிக்கைகள்.
நேற்றுவந்த செய்தி, பார்தி ஏர்டெல் என்ற நிறுவனம் ரூ.150 கோடி நன்கொடைப் பத்திரம் பெற்ற பிறகே சட்டத்தைத் திருத்தியுள்ளீர்கள்! (எதிர்ப்புகளை மீறி) சலுகை வழங்கியுள்ளீர்கள். (அரசின் பொதுத் துறை பி.எஸ்.என்.எல். அனாதைப் பிள்ளையாக ஆக்கப்பட்டு கிடக்கும் நிலையில்).
சமையல் எரிவாயு விலையை ரூ.100 குறைத்தது தேர்தல் தந்திரம்தானே!
சமையல் எரிவாயு உருளை, விலைவாசி வித்தைகள் வினோதம். முன்பு 1118.50 ரூபாய்க்குமேல் சிலிண்டர் விலை ஏற்றம் – பிறகு தேர்தல் நேரத்தில் கொஞ்சம் 100 ரூபாய் குறைத்தல் என்ற ‘‘ஒட்டகத்தின் முதுகில் சுமை குறைந்த கதை”போன்றதுதானே தங்கள் நடவடிக்கை!
‘விஸ்வ குரு’ உலகத்திற்கே வழிகாட்டி என்று தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்ட தங்களது ஆளுமையின்கீழ் இந்தியா முன்னேறியுள்ளதா?
பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பதற்கான உலக நாடுகளின் புள்ளி விவரம் இதோ! (மேலே காண்க)
பொதுத் துறை நிறுவனங்களை விற்று அதானி, அம்பானிகளுக்குத் தாரை வார்ப்பா?
பொதுத்துறை நிறுவனங்களை – அடிமாட்டு விலைக்கு விற்று, நீண்ட கால குத்தகைக்கு விட்டு, மக்கள் சொத்தை அதானி, அம்பானி, டாட்டா, பிர்லா, மிட்டல் போன்ற கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்த ‘ஒப்பற்ற ஆட்சி’ உங்களுடையது என்பதுதான் 140 கோடி மக்களும் மோடியின் குடும்பம் என்ற மார்தட்டலுக்குச் சான்றா?
ஏழைகளின் கண்ணீர்க் கடல் பொங்குமாங்கடல்; ஒடுக்கப்பட்டோரின் உரிமை மறுப்பு – கல்வி மறுப்பு தான் தங்களின் ஆட்சியின் முத்திரை, இல்லையா?
‘‘140 கோடி மக்களும் என் குடும்பம் – மோடி குடும்பம்” என்று தங்களது 56 அங்குல மார்பைப் பெருமையோடு தட்டும் உங்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள், 146 ஆண்டுகால வரலாற்றில் காணாத அடைமழை, வெள்ளம், புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் அடுத்து சில நாள்களில் ‘‘பட்டகாலில் படுவதைப்போல” தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் – இங்கெல்லாம் பட்ட துயரம் கொஞ்சமா? தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் ‘தேசியப் பேரிடர்’ என்ற நிதியில், சட்டப்படி அது எங்களுக்கு உரிமை என்பதால், வெள்ள நிவாரணமாக ரூ.3,774 கோடி செலவிட்ட நிலையில், உங்கள் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், உங்கள் ஸ்பெஷலான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்ற மற்ற ஒன்றிய அமைச்சர்கள் – இரண்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் பார்வையிட்டு, உங்களிடம் தந்த அறிக்கை எங்கே காணாமற் போயிற்றா?
வெள்ள நிவாரணத்துக்கு உதவாத கருணையில்லா ஒன்றிய ஆட்சி!
இந்திய அரசின் வரலாற்றில் வெள்ள நிவாரணக் குழு வந்து பார்த்து, வீடியோ எடுத்து, முதலமைச்சரிடம் விவாதித்தும் – ஒரு பைசாகூட தராத கருணையில்லா ஆட்சி தங்கள் ஆட்சியைத் தவிர வேறு உண்டா?
நிதி தராதததுகூட ஒருபுறம் இருக்கட்டும்!
பாதித்த அதே பகுதிகளுக்கு ஒருமுறை அல்ல, இரண்டு முறை, மூன்று முறை வந்தும், துயரமும், துன்பமும் அடைந்த அந்த மக்களுக்கு ஒரு வார்த்தை ஆறுதல்கூட சொல்லவில்லையே!
வாய் வார்த்தையாவது சொல்ல மனம் வந்ததா?
ஏன் வரவில்லை?
இப்போது அவர்களிடம் ஓட்டுக் கேட்க வருவதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமை உண்டா?
கோவில் க்ஷேத்திரங்களுக்கு எல்லாம் சென்று தாங்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ் கரிப்பது – அது உங்கள் விருப்பம், உரிமை! (அதுகூட பிரதமராக இருந்து செய்வது அரசமைப்புச் சட்ட மதச்சார்பின்மையின் சரியான பொருளுக்கு முரண் என்ற போதிலும்).
அதோடு தூத்துக்குடி மக்களை, நெல்லை மக்களை, சென்னை மக்களை சந்தித்து ஒரு சில மணிநேரமோ, சில நிமிடங்களோ – நெல்லை மாவட்ட குலசேகரப்பட்டினம் ஏவுகணை துவக்கிட வந்த நீங்கள், அந்த மக்களிடம் ஆறுதல் கூறவில்லையே! அந்த மக்களின், எம் மக்களின் ஆதங்கம் நியாயமல்லவா?
இறுதியாக ஒன்று, உங்களுக்கே புரிந்திருக்கும் – அதை மறைத்துக்கொண்டு இப்போது தென்னாட்டில் காலூன்ற முயற்சிக்கிறீர்கள்!
பிரதமர் அவர்களே, உங்கள் கட்சி வாங்கிய வாக்கு வெறும் 37 விழுக்காடுதான்!
இரண்டு முறையும் (2014, 2019) ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி அவர்களே, பெரும்பான்மையான வாக்காளர்களால் நீங்கள் தேர்வு செய்யப்பட்டு வரவில்லை (37 சதவிகிதம் வாக்குகள்தான் பெற்றீர்கள்; மீதமுள்ள 63 சதவிகித வாக்குகள் உங்கள் ஆட்சிக்கு எதிரானவைதான்) அந்த 63 சதவிகிதமும் ஒன்று, எதிர்க்கட்சிக்கு வாக்கு – இரண்டு, நோட்டா – மூன்று, வாக்களிக்க விரும்பாதவர்கள் என்ற வகைதானே!
மக்கள் தங்களது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சுக்கென முழு மெஜாரிட்டி வாக்குகள் தந்து ஆட்சிக்கு வந்த மாநிலங்களைவிட, மாநிலங்கள் பலவற்றில் கட்சிகளைப் பிரித்தல், வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கி, ஆளுநர்களை அரசியல் கருவிகளாக்கி, இத்தியாதி, இத்தியாதி, முறைகளால் ஏற்பட்டவைதானே உங்கள் ஆட்சிகள்!
2014 இல் ஆட்சிக்கு வந்தபோது உங்களது தேசிய ஜனநாயகக் கட்சி (என்.டி.ஏ.) கூட்டணியில் இருந்த கட்சிகள் எத்தனை? இப்போது இருக்கும் கட்சிகள் எத்தனை? இந்தத் தேர்தலில் உங்களுடன் இருக்கும் கட்சிகள் எத்தனை? புரிய வேண்டுமே!
உங்கள் கட்சிக் கூட்டணியில் சேராமல் ஏன் பிய்த்துக் கொண்டு போகின்றன?
பஞ்சாபில் – சிரோன்மணி அகாலிதளம்
ஒடிசாவில் – பிஜு ஜனதா தளம்
தமிழ்நாட்டில் – அ.இ.அ.தி.மு.க.
என்றெல்லாம் பார்த்தால், உங்களது 400 வெறும் ‘ஜூம்லா’; அதை 420 ஆசாமிகள் தவிர, எவரும் நம்பமாட்டார்கள் என்பது தானே உண்மை!
வெள்ள நிவாரணத்திற்கு, வெள்ள பாதிப்புப் பற்றிய அறிக்கை வந்தவுடன், உதவுவோம் என்று கூறி, பிறகு கைவிரித்தவர் – பொய் வாக்களித்தவர் என்பதைப் புரிந்துகொண்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை, தமிழ்நாட்டு மக்கள் மறக்கவே மாட்டார்கள்!
எந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தினீர்கள்?
தமிழ்நாட்டிற்கு இதுவரை எந்தப் புதிய திட்டத்தையாவது உங்கள் ஆட்சி தந்துள்ளதா? காங்கிரஸ் – தி.மு.க. (யு.பி.ஏ.) வின் மெகாத் திட்டம் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவதோடு, இந்தியா மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிற்கே பொருளாதார வளர்ச்சித் திட்டமான தி.மு.க.வின் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், ரூ.2,427 கோடிக்குமேல் செலவிட்டு, இன்னும் 23 கிலோ மீட்டர் அத்திட்டம் நிறைவேறுவதற்குப் பாக்கி என்ற நிலையில், அந்தப் பெருமை தி.மு.க.வுக்கு, காங்கிரசு ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதால், இல்லாத இராமன் சேது பாலம் என்று சுப்பிரமணிய சாமிகளைக் கிளப்பிவிட்டு, உச்சநீதிமன்றம் தடை ஆணை வழங்கி, தங்கள் ஆட்சியில் உச்சநீதிமன்றத்தில் பல வாய்தாக்கள் தந்த பிறகும், அதை நிரூபிக்க முடியாமல், தங்கள் அமைச்சசரே நாடாளுமன்றத்தில் ராமர் பாலம் என்று ஒன்றுமில்லை! (ஆதாம் பாலம்) சில மணல் திட்டுகள்தான் என்று ஒப்புக்கொண்டும், மீண்டும் அந்தத் திட்டத்தைத் தொடருவோம் என்று நாடாளுமன்றத்தில் சொன்ன வாக்குறுதி – ‘கேரண்டீ’ இதுவரை நடைமுறையில் வரவில்லை – தனுஷ்கோடியில் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து இராமேசுவரக் கடல் அழகை ரசித்தீர்களே – சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிவிட்டு வாக்கு கேட்டால்கூட, அதைச் செய்துவிட்டு வருகிறார் பிரதமர் மோடி என்று நாங்கள் வரவேற்றிருப்போமே!
எந்தப் புதுத் திட்டங்களைச் செயல்படுத்தினீர்கள்?
இவ்வளவுக்குப் பிறகும் தைரியமாக – கூச்சநாச்சமின்றி, வித்தை காட்ட வருகிறீர்கள். உங்களுக்குத் தக்க பதிலைஅளிக்க தமிழ்நாட்டு வாக்காளர்கள் தயாராகி விட்டார்கள்!
திருக்குறளில் ஒரு குறள் முக்கியமானது – அதன் பொருளை அறிந்துகொள்க!
திருக்குறளை உங்களுக்கு எழுதிக் கொடுக்கும் அன்பர்களிடம் இந்தக் குறளுக்கு என்ன பொருள்? அதில் பொதிந்துள்ள அருமையான படிப்பினை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் – எங்கள் அன்புக்குரிய பிரதமர் மோடி அவர்களே!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (குறள் 475)
இதன் பொருள்:
மிக மெல்லியதாயினும் மயிலிறகுகளை அளவுக்கு மிகுதியாக வண்டியில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத்தில் பளு தாங்க முடியாததால் முறிந்து போய்விடும்.
இக்குறள் 100-க்கு 100 உங்களது ஆட்சிக்குப் பொருந்துகிறது என்றாலும், நயத்தக்க நாகரிகத்துடன், பெரியார் தொண்டனான இந்தக் கருஞ்சட்டைக்காரன் இதுஉங்களுக்கு எட்டும் என்ற நம்பிக்கையில்தான் கூறுகிறேன்; மயில் இறகுகள் அல்ல, தங்களது ஆட்சி என்ற பார வண்டியில் ஜனநாயகத்தின் ஒடிக்கப்பட்ட சிறகுகள், மாநிலங்களின் பிய்த்தெறியப்படும் சிறகுகள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அத்தனைப் பக்கங்களையும் கிழித்தெறிந்து பல மூட்டைகளாகக் கட்டிய பாரங்கள் நிரம்பியிருக்கின்றன.
தனிப்பட்ட வெறுப்பல்ல – பாதிக்கப்பட்ட கோடானு கோடி மக்களின் குரல்!
கடைசியாக ஒன்று, மோடி என்ற தனி மனிதர்மீது வெறுப்பல்ல – பிரதமர் மோடி என்ற அதிகார சின்னம், அதீத அதிகார துஷ்பிரயோகம் செய்த ஆணவத்திற்கு எதிரான கொள்கைக் கடிதம் இது!
இதை தனி ஒரு மனிதனின் எழுத்தாகக் கருதாமல், இந்தியாவில் பாதிக்கப்பட்ட கோடி மக்களின் குரல் என்று கருதுவீர்களாக!