அய்தராபாத், மார்ச் 25- இந்தியாவில் வயது வந்தவர்களி டையே காசநோயை தடுக்கும் தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கியுள்ளது. உலகளவில் காசநோய் பாதித்தவர் களில் 28 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். இந்த நோய்க்கு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஸ்பெயினை சேர்ந்த பயோபேப்ரி என்ற மருந்து கம்பெனி காசநோயை தடுக்க எம்டிபிவேக் என்ற தடுப் பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியின் திறனை சோதிக்க தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர், செனகல் நாடுகளில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு காச நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வயது வந்தவர்களிடையே தடுப்பூசி யின் திறனை கண்டறிய இந்தியாவில் பரிசோதனைகள் தொடங்கியுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று தெரிவித்தது. குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பூசி உள் ளது. ஆனால் வயதானவர்கள்,இளம் பருவத்தினருக்கான காச நோய் தடுப்பூசி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படு கிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது.
மேற்கு வங்கத்திலும் ஆளுநர் பிரச்சினை! பல்கலைக்கழகங்கள் செயல்பட முடியாத நிலை – ஆளுநர் மீது குற்றச்சாட்டு
கொல்கத்தா, மார்ச் 25- மேற்கு வங்காளத்தில் பல்கலைக் கழகங்களில் சுமார் 10 மாதங்களாக நிரந்தர துணை வேந் தர்களை நியமிக்காமல் ஆளுநர் இழுத்தடிப்பதாகவும், இதனால் பல்கலைக்கழகங்கள் செயல்பட முடியாமல் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இந்தியாவின் ஆளுநர் ஜெனரலைப் போலவே, மேற்கு வங்காள ஆளுநரும் இப்போது பல்கலைக்கழகங்களில் அரசைப் புறக்கணித்து ஒரு இணையான அரசை நடத்த முயற் சிக்கிறார். பல்கலைக்கழகங்களில் அவரது விருப்பப்படி இடைக்கால துணைவேந்தர்களை நியமித்தார். ஆனால் அவர்களது பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும் கூட நிரந்தர துணைவேந்தர்களை நியமிக்கவில்லை. இதனால் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சமீபத்தில் இடைக்கால துணைவேந்தர்களின் பட்டியலை அவருக்கு நாங்கள் வழங்கியிருந்தோம். ஆனால் அவர் இன்னும் அதில் முடிவு எடுக்கவில்லை. துணைவேந்தர் நியமனங் களில் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க உயர்கல்வித்துறை விரும்பவில்லை.
மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச் சரே இருக்க வகை செய்யும் மசோதாவை கடந்த ஆண்டு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இது எங்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
“மாநில அரசின் 31 பல்கலைக்கழகங்களில் நிரந்தர துணைவேந்தர்களை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
-இவ்வாறு அவர் கூறினார்.
மணிப்பூரில் “இந்தியா” கூட்டணியில் அய்க்கிய ஜனதா தளம்
இம்பால், மார்ச் 25- நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதாதளம் கட்சி கடந்த ஜனவரி மாதம் பீகாரின் “மகா கூட்டணி” மற்றும் ‘இந்தியா கூட்டணி’யில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்ந்தது. இவரது பச்சோந்தி அரசியலால் சொந்தக் கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் அய்க்கிய ஜனதாதளம் தனியாக பிரிந்து சென்று, “இந்தியா” கூட்ட ணிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
2 நாட்களுக்கு முன் தொகுதி பங்கீடு தொடர்பாக மணிப்பூர் மாநிலத்தின் “இந்தியா’ கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் (சரத் ), திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், சிவசேனா (உத்தவ்), புரட்சிகர சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேற்ற நிலையில், அய்க்கிய ஜனதா தளத்தின் மணிப்பூர் பிரிவும் “இந்தியா” கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று உள்ளது. இந்த விவகாரத்தால் நிதிஷ் குமார் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
அமலாக்கத்துறையின் அடுத்த குறி லாலு குடும்பம்
பாட்னா, மார்ச் 25- மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் “இந்தியா” கூட்டணி தலைவர்களை பிரச்சாரம் செய்ய விட்டால், பாஜக கடுமையாக அம்பலப்படும் என்பதை உணர்ந்துள்ள மோடி அரசு, ஜார்க்கண்ட் மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை ஒன்றிய அமைப் புகள் மூலம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதே வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களையும் குறிவைத்து ஒன்றிய அமைப்புகள் மூலம் ஒன்றிய பாஜக அரசு நெருக்கடி அளித்து வருகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் செல்வாக்கு கொண்ட ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுவின் குடும்பத்தை மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க விடாமல் தடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது. ரயில்வே நிலமோசடி வழக்கில் லாலு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மிக விரைவில் கைது செய்ய அமலாக்கத்துறை களமிறங்கி யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.