*கருஞ்சட்டை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் – தேர்தலில் வெற்றி பெற ‘சத்ரு சம்ஹார யாகம்’ வளர்த்து சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து வழிபாடு – நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “ஜூன் 4ஆம் தேதிக்குப் பின்னர் மேல், 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று 3ஆவது முறையாக மோடி பிரதமராக வர திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினேன்” என்று கூறியுள்ளார்.
மக்கள்மீது நம்பிக்கை வைக்கவில்லை. மக்கள்மீது நம்பிக்கை வைக்காததற்குக் காரணம் என்ன? மக்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை – உதவிக்கரமும் நீட்டவில்லை.
இந்த நிலையில்தான் கடவுள், மதம், யாகம் என்று சரண் அடைகிறார்கள்.
இவற்றால் நினைத்த காரியங்கள் கை கூடுமானால் அரசு எதற்கு? சட்டங்கள் எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு? மருத்துவமனைகள்தான் எதற்கு?
மனித அறிவையும், தன்னம்பிக்கையையும் இத்தகைய மூடநம்பிக்கைகளால் பறி கொடுப் பவர்களை என்னவென்று சொல்வது?
ஒரு வரலாற்றுத் தகவல் தெரியுமா? தந்தை பெரியார் கேரள மாநிலம் வைக்கம் சென்று (1924) அங்கு நிலவிய தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடத்தினார்.
இரண்டு முறை கடும் சிறைவாசங்களையும் சந்தித்தார். இறுதி வெற்றிமாலை தந்தை பெரியாரின் தோளில்தான் விழுந்தது. “வைக்கம் வீரர்” என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் நவசக்தியில் எழுதினார்.
தந்தை பெரியார் திருவாங்கூர் சிறையில் கையிலும் காலிலும் பூட்டப்பட்ட விலங்கோடு அங்கே அளிக்கப்பட்ட வேலைகளையும் செய்தார்.
‘இந்த ராமசாமி நாயக்கன் சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது – ஜெயிலிலேயே செத்து ஒழிய வேண்டும்’ என்று கோயில்களை ஆக்கிர மித்துக் கொண்டிருந்த நம் பூதிரிப் பார்ப்பனர்கள் யாகம் ஒன்றை நடத்தினர். – அதற்குப் பெயர்தான் ‘சத்ரு சம்ஹார யாகம்’ என்பது. சத்ரு என்றால் எதிரி, சம்ஹாரம் என்றால் அழிப்பு என்று பொருள் – என்ன நடந்தது தெரியுமா?
தந்தை பெரியார் மரணிக்கவில்லை; மாறாக திருவாங்கூர் மகாராஜாதான் மரணித்தார். யாகம் திருப்பி அடித்து விட்டது என்று மக்கள் பேசிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
யாகத்தில் எல்லாம் நம்பிக்கையுடைய திருநெல்வேலி பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கும் அப்படி நடந்தால்.. அந்தோ பரிதாபமே!